குடியுரிமை சட்டத் திருத்தம்: அசாம் ஒப்பந்தம், இன்னர் லைன் பர்மிட் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
திங்கள்கிழமையன்று மக்களவையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை முன்வைக்கும் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இன்னர் லைன் பர்மிட் (ஐ.எல்.பி) அமைப்பு முறையில் சேர்க்கப்படும் என்று கூறினார்.
'முக்கிய பிரச்சனை ஒன்று தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. இந்த நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மணிப்பூர் மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்' என்றும் தெரிவித்தார்.
இந்த மசோதாவின் மீதான விவாதத்தின்போது பேசிய அமித் ஷா, "வடகிழக்கு மக்களின் சமூக, மொழியியல் மற்றும் கலாசார அடையாளத்தை பராமரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்றும் கூறியிருந்தார்.
இன்னர் லைன் பெர்மிட் (ஐ.எல்.பி) என்றால் என்ன?
இன்னர் லைன் பெர்மிட் என்பது இந்திய அரசு தனது குடிமக்களுக்கு வழங்கும் பயண ஆவணமாகும், இதனால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியில் பயணிக்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு இன்னர் லைன் பெர்மிட் என்பது புதிய சொல் அல்ல. பிரிட்டிஷ் ஆட்சியின் போது உள்ளூர் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1873 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஓர் ஒழுங்குமுறை ஏற்பாடு இது.
புரட்சியும் கிளர்ச்சியும்
காலனித்துவ இந்தியாவில், பிரிட்டனின் நலன்களை மனதில் கொண்டு 1873 ஆம் ஆண்டு வங்காள-கிழக்கு எல்லை ஒழுங்குமுறை சட்டம் உருவாக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு சில மாற்றங்களுடன் இந்திய அரசாங்கத்தால் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தற்போது, வடகிழக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெறும் 'இன்னர் லைன் பர்மிட்' முறை நடைமுறையில் இல்லை. அசாம், திரிபுரா, மேகாலயா, ஆகிய மாநிலங்களில் அனுமதி சீட்டு நடைமுறை அமலில் இல்லை. ஆனால், இங்கும் இன்னர் லைன் பர்மிட் தேவை என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
வடகிழக்கு பிராந்தியத்தின் அனைத்து மாநிலங்களிலும் இன்னர் லைன் அனுமதி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்று வடகிழக்கு மாணவர் அமைப்பு கோரி வருகிறது.
கடந்த ஆண்டு, மணிப்பூரில் இது தொடர்பான ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது, இது 'மணிப்பூரி அல்லாதவர்கள்' மற்றும் 'வெளியாட்கள்' மாநிலத்திற்குள் நுழைவது தொடர்பாக கடுமையான விதிகள் தேவை என்று கூறியது.

பட மூலாதாரம், STRDEL/AFP VIA GETTY IMAGES
ஆனால் மணிப்பூரி யார் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன.
1971 விடுதலைப் போருக்குப் பிறகு, வங்கதேசத்தில் இருந்து ஏராளமானவர்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு தப்பி வந்தனர். அதன் பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் இன்னர் லைன் பர்மிட்டுக்கான தேவை அதிகரித்தது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணையின்படி, இன்னர் லைன் அனுமதி கொண்ட இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் வரும் வட கிழக்கு இந்திய மாநிலங்களின் பழங்குடியினர் பகுதிகளுக்கு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆறாவது அட்டவணையின் கீழ் வடகிழக்கு இந்தியாவில் அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் வருகின்றன. அங்கு அரசியலமைப்பின் படி தன்னாட்சி மாவட்ட சபைகள் உள்ளன, இவை உள்ளூர் பழங்குடியினரின் உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறது.
இந்திய அரசியலமைப்பின் 244 வது பிரிவில் இதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1949ல் இதன் மூலம் தன்னாட்சி மாவட்ட சபைகளை வழங்கிய அரசியலமைப்புச் சபை, அது தொடர்பான அதிகாரங்களை அந்தந்த மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கியது.
இதைத் தவிர, ஆறாவது பட்டியலில் பிராந்திய சபைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உள்ளூர் பழங்குடியினரின் சமூக, மொழி மற்றும் கலாசார அடையாளத்தை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஆறாவது அட்டவணையில் வரும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள சில குறிப்பிட்ட பழங்குடி பகுதிகள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் வரம்புக்குள் வராது.
இதன் பொருள் என்னவென்றால், 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் வந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், பார்சிகள், சமணர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் குடியுரிமை கொடுக்கலாம். அதாவது முஸ்லிம் அல்லாத அகதிகள், இந்தியாவில் குடியுரிமையைப் பெற்றலும், அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கவோ அல்லது தொழில் தொடங்கும் உரிமைகளோ இருக்காது.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் பின்னணியில் 1985 ஆம் ஆண்டின் அசாம் ஒப்பந்தமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அசாம் ஒப்பந்தத்தை குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மீறுவதாகக் கூறி, இதற்கு அசாமில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மாநில மக்களின் சமூக-கலாச்சார மற்றும் மொழியியல் அடையாளத்திற்கு பாதுகாப்பை வழங்கும் அசாம் ஒப்பந்தம், இந்திய அரசாங்கத்திற்கும் அசாம் இயக்கத்தின் தலைவர்களுக்கும் இடையே 1985 ஆகஸ்ட் 15ஆன் தேதியன்று கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்பு ஆறு ஆண்டுகளாக அசாமில் போராட்டங்கள் நடைபெற்றன. சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நாடு கடத்த வேண்டும் என்று அசாம் மக்கள் கோரினர். இந்த பிரச்சாரத்தை அனைத்து அசாம் மாணவர் சங்கமும் (AASU) 1979 இல் போராட்டத்தை தொடங்கியது.
கட்-ஆஃப் தேதி தொடர்பான எதிர்ப்பு
அசாம் ஒப்பந்தத்தின்படி, புலம்பெயர்ந்தோருக்கு செல்லுபடியாகும் தேதி 1971 மார்ச் 25 ஆகும், ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில், இது 2014 டிசம்பர் 31ஆக ஆக்கப்பட்டுள்ளது.
அசாமில் முழு எதிர்ப்பும் இந்த புதிய கட்-ஆஃப் தேதி பற்றியது. இதனால், 2014 டிசம்பர் 31 க்கு முன்னர் அசாமிற்கு நுழைந்தவர்களும் குடியுரிமை பெற வழி வகுக்கும் என்பதால் அங்குள்ளவர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
அசாமில் மேற்கொள்ளப்பட்ட தேசியக் குடியுரிமைப் பதிவேட்டுப் பணிகளின்போது, அசாம் குடிமக்களில் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டன. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆனால் அசாம் ஒப்பந்தத்தில், 1971 மார்ச் 25 க்குப் பிறகு அசாமிற்குள் நுழைந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை திருப்பி அனுப்புவதாகக் கூறப்பட்டது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












