அமித் ஷா குறிப்பிட்ட நேரு-லியாகத் ஒப்பந்தம் - தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

நேரு-லியாகத் ஒப்பந்தம்
படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் மற்றும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு
    • எழுதியவர், ஃபைஸல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தின் போது, 'நேரு-லியாகத் ஒப்பந்தம் கைவிடப்பட்டது' என்று தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாகிஸ்தான் (ஒப்பந்தம் எட்டப்பட்டபோது வங்கதேசம் உருவாகவில்லை) சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் கடமையைச் செய்வதில் தோல்வியடைந்து விட்டதால் இந்த மசோதா அவசியம் என்று தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய அமித் ஷா, நாடு விடுதலையடைந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் புதிய நாடுகளாக உதயமானபோது இரு நாட்டு அகதிகளும் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து பேசினார், அந்த சூழ்நிலையில் தான் '1950 ல் டெல்லியில் நேரு-லியாகத் ஒப்பந்தம் ஏற்பட்டது' என்பதை சுட்டிக்காட்டினார்.

'நேரு-லியாகத் ஒப்பந்தம் என்பது என்ன?

ஏப்ரல் 8 ஆம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த இருதரப்பு ஒப்பந்தமானது, 'நேரு-லியாகத் ஒப்பந்தம் அல்லது டெல்லி ஒப்பந்தம்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் ஆறு நாட்கள் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஏற்பட்டது. நாட்டின் சிறுபான்மையினருக்கு தங்கள் நாட்டின் எல்லைக்குள் முழு பாதுகாப்பையும் உரிமைகளையும் வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்திற்காக அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் இந்த ஒப்பந்தத்திற்காக டெல்லிக்கு வந்தார். அந்த சமயத்தில் ஜவஹர்லால் நேரு இந்தியப் பிரதமராக இருந்தார்.

ஒப்பந்தத்திற்கான அவசியம் என்ன?

நேரு-லியாகத் ஒப்பந்தம்

பட மூலாதாரம், COURTESY THE PARTITION MUSEUM, TOWN HALL, AMRITSAR

1947இல் பிரிவினைக்குப் பின்னர், லட்சக்கணக்கான அகதிகள் புலம் பெயர்ந்தனர்.

கிழக்கு பாகிஸ்தான் (இப்போது வங்கதேசம்), பஞ்சாப், சிந்து மற்றும் பல பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அதிக அளவில் இந்தியாவுக்கு வந்தார்கள்.

இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய மேற்கு வங்கம், பீகார், பஞ்சாப், இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்தனர்.

இந்த புலம் பெயர்ந்த நிகழ்வு தான் உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய இடப்பெயர்ச்சி என்று பல வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.

பிரிவினைக்குப் பிறகு, பல பகுதிகளில் பெரிய அளவிலான கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன, அதில் ஏராளமான இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர்.

இந்த நேரத்தில் பலவிதமான கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. தங்கள் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகளின் சொத்துக்களும், உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன அல்லது கொள்ளையடிக்கப்பட்டன, பெண்கள் மற்றும் சிறுமிகள் இழுத்துச் செல்லப்பட்டனர், வலுக்கட்டாயமாக மதம் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இடம்பெயர்ந்து செல்ல விரும்பாத சிறுபான்மையினர் அதாவது இந்தியாவுக்குச் செல்லத் தயாராக இல்லாத பாகிஸ்தானின் இந்துக்களும், இந்தியாவில் வசித்து வந்த முஸ்லிம்களும் துன்புறுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்தன.

இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினர் அச்சத்திலும், பீதியிலும் வாழ்ந்து வந்தனர்.

அதோடு, 1948 இல் பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் மீதான தாக்குதல் மற்றும் அதையடுத்து இந்தியாவின் தலையீடு உட்பட பதற்றமான நிகழ்வுகளுக்கு பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துவிட்டன. இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளுமோ என்ற அச்சமும் எழுந்தது.

நேரு-லியாகத் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

பாகிஸ்தானில் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்படுவதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகின

நேரு லியாகத் ஒப்பந்தத்தின் நோக்கங்கள்

• தங்கள் நாட்டின் சிறுபான்மையினர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் பொறுப்பேற்க வேண்டும்.

• தங்கள் சொத்துக்களை விற்கவும், வேறு ஏற்பாடுகள் செய்வதற்காகவும் நாட்டிற்கு திரும்பிச் செல்ல அகதிகளுக்கு உரிமை உண்டு.

• கட்டாய மத மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

• கடத்தப்பட்ட, அபகரித்து செல்லப்பட்ட பெண்கள் தங்கள் உறவினர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவார்கள்.

• இரு நாடுகளும் சிறுபான்மையினர் ஆணையத்தை உருவாக்கும்.

நேரு-லியாகத் ஒப்பந்தம்

பட மூலாதாரம், Getty Images

மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலில் பாகிஸ்தானும், பிறகு பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவான போதும் இரு நாடுகளுமே சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்று தெரிவித்தார். எனவே இந்த மசோதாவிற்கான தேவை எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே சமயம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவது குறித்தும் அவர் பேசினார்.

இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் முஸ்லிம்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இருக்காது என்பதால், குடியுரிமை திருத்தச் சட்டத்தில் முஸ்லிம்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை என்று கூறினார்.

இந்த மூன்று நாடுகளில் சிறுபான்மையினரின் நிலை சரியாக இல்லை என்பதை மசோதாவை எதிர்ப்பவர்களே ஒப்புக் கொண்டலும், இந்தியாவிலும் சிறுபான்மையினரின் நிலை அந்த நாடுகளைவிட சிறப்பாக இருப்பதாக சொல்ல முடியாது என்றும் தெரிவித்தனர்.

நாடு விடுதலையடைந்த பிறகு தொடரும் முஸ்லிம்-விரோத கலவரங்கள், மீரட், மலியானா, மும்பை-குஜராத் மற்றும் 1984 ஆம் ஆண்டு சீக்கிய எதிர்ப்பு கலவரங்களை மேற்கோள் காட்டும் விமர்சகர்கள், அவற்றை மறுக்கவோ மாற்றவோ முடியாது என்றும் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: