"162 எம்.எல்.ஏ.க்களை" பத்திரிகையாளர் சந்திப்பில் ஆஜர்படுத்திய சிவசேனை

பட மூலாதாரம், Getty Images
மகாராஷ்டிராவில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவாக திங்கள்கிழமை மாலை "162 எம்.எல்.ஏ.க்கள்" திரட்டப்பட்டு பத்திரிகையாளர்கள் முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மும்பை கிராண்ட் ஹயாத் ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது.
சிவசேனையை சேர்ந்த 56 எம்.எல்.ஏ.க்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 52 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 எம்.எல்.ஏ.க்கள், சுயேச்சைகள் மற்றும் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 162 எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத்தில் இருந்ததாக சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணித் தலைவர்கள் அறிவித்தனர்.
மொத்தம் உள்ள 54 தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜித் பவார் உள்பட இரண்டு பேர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மாநில சட்டமன்றத்தில் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் குறைந்தது 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்றாலே ஆட்சியமைக்க முடியும்.
இந்நிலையில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் 145 எம்.எல்.ஏ.க்கள் இருந்ததைப் போலத் தெரியவில்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.
நாளை காலை 10.30க்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
மகாராஷ்டிரா சட்டசபையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை இரண்டாவது நாளாக தொடங்கி நடைபெற்றது.
பாஜக, ஆளுநர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் காரசாரமாக வாதிட்டனர்.
காங்கிரஸ் சார்பில் ஆஜரான கபில் சிபல் "மகாராஷ்டிராவில் சனிக்கிழமை அதிகாலை 5.17 மணிக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, காலை 8 மணிக்கு முதல்வர் பதவியேற்பு நிகழவேண்டிய அளவுக்கு நாட்டில் அப்படி என்ன அவசர நிலை நிலவுகிறது?" என்று கேள்வி எழுப்பினார். பாஜக மற்றும் மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை விதிமுறைகளின்படி நடத்த தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், ஆனால் அதற்கு இரண்டு நாள்கள் அவகாசம் தேவை என்றும் வாதிட்டனர்.
நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) விசாரணையின்போது, தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கடிதம், பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்து ஆளுநர் அளித்த கடிதம் ஆகியவை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி அந்தக் கடிதங்கள் இன்று சீலிடப்பட்ட உறையில் நீதிபதிகளிடம் சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநருடன் சந்திப்பு
மகாராஷ்டிராவில் பாஜக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அரசை எதிர்த்து முறையிடுவதற்காக சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மாநில ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.
அப்போது, மூன்று கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பது தொடர்பான தங்கள் கடிதத்தை ஆளுநர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கியதுடன், தங்களது கூட்டணிக்கு உள்ள பெரும்பான்மையை கருத்திற்கொண்டு ஆட்சியை அமைக்க அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிவசேனை கட்சியை சேர்ந்த சஞ்சய் ராவுத், 'ஆபரேஷன் கமல்' என்ற பெயரில், சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து செயல்பட்டு வருவதாகவும், ஆனால் அதனால் எவ்வித பலனும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜகவுக்கு மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் போதுமான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், ஏன் 'ஆபரேஷன் கமல்' திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வழக்கின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், ANI
இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனை தயாராக இருந்த நிலையில், ஆட்சியமைக்கும்படி பாஜகவுக்கு இரவோடு இரவாக ஆளுநர் அழைப்பு விடுத்து பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் கடந்த சனிக்கிழமை காலை முதல்வராக பதவியேற்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அஜித் பவரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர், மகாராஷ்டிராவில் தங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று உறுதியளித்ததோடு, பாஜகவை கடுமையாக விமர்சித்தனர்.
அன்றைய இரவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து அஜித் பவார் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












