ஹாங்காங் தேர்தல்: ஜனநாயக ஆதரவு இயக்கம் முன்னிலை - அரசுக்கு பின்னடைவா?

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்கில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் (மாவட்ட கவுன்சில்) முடிவுகளில் ஜனநாயக ஆதரவு எதிர்க்கட்சி இயக்கம் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை அறிவிக்கப்பட்ட 241 இடங்களில் 201 இடங்களை ஜனநாயக ஆதரவு இயக்கம் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள, 'செளத் சீனா' போஸ்ட் நாளிதழ், சீன அரசு ஆதரவு வேட்பாளர்கள் 28 இடங்களை மட்டுமே வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த உள்ளூராட்சி தேர்தலில் கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இது 71 சதவீதத்தும் கூடுதலான வாக்குப்பதிவாகும். அதேவேளையில் 2015-இல் நடந்த தேர்தலில் 47 சதவீதம் வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியிருந்தது.
இந்த தேர்தல், குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஹாங்காங் தலைவர் கேரி லேமுக்கு முக்கிய சவாலாக கருதப்பட்டது.
பேருந்து வழித்தடங்கள் மற்றும் குப்பை சேகரிப்பு போன்ற உள்ளூர் பிரச்சனைகளை கண்காணிக்கும் மற்றும் சமாளிக்கும் பொறுப்பு ஹாங்காங்கின் மாவட்ட கவுன்சிலர்களுக்கு உள்ளது.
ஆனால், கடந்த 5 மாதங்களாக ஹாங்காங்கில் நிலவிவரும் அமைதியின்மை மற்றும் ஜனநாயக ஆதரவு போராட்டங்களை அரசு கையாண்ட விதத்துக்கு மக்கள் அளிக்கும் சான்றிதழாகவே இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
சீன அரசு ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய ஒரு கவுன்சிலர், இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ள நிலையில், ''பூமியும் சொர்க்கமும் தலைகீழாக மாறிவிட்டன'' என்று தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சீன அரசு ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் பலரும் தோல்வியடைந்த நிலையில், இது அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
மற்ற இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலை ஹாங்காங் மட்டுமல்ல ஒட்டுமொத்த சீனாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பிற செய்திகள்:
- மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது எப்படி பாதிக்கும்?
- கருங்கடலில் கவிழ்ந்த கப்பல்: உயிருக்கு போராடும் 14,000 ஆடுகள்
- ஓபிஎஸ் தியானமும், அஜித் பவாரின் பதவியேற்பும் - பாஜகவை எதிர்க்க வலுவான கட்சிகளே இல்லையா?
- சூரியன் உதிப்பதை நிறுத்தியதாக கூறிய நித்தியானந்தா தலைமறைவாக இருப்பது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












