நீட் சர்ச்சை: மருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அறவாழி இளம்பரிதி
- பதவி, பிபிசி தமிழ்
மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நீட் தேர்வில் முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மட்டும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்பு இடங்களுக்கான நீட் தேர்வு ஜனவரி மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்ட நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான இட ஒதுக்கீடு அதில் இடம் பெறவில்லை என்பது பரவலான கண்டனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், மத்திய அரசின் அறிவிக்கையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் 27% இடங்கள் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், முன்னேறிய சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு என்பது எல்லா இடங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
"மன்னிக்க முடியாத துரோகம்"
நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பிய திமுக எம்பி டி.ஆர். பாலு, மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், 2018-2019ம் ஆண்டில், மத்திய தொகுப்புக்கு மாநிலங்கள் ஒதுக்கிய மொத்த மருத்துவ இடங்கள் 12,595. இதில் 27% இட ஒதுக்கீட்டின்படி வெறும் 299 இடங்களே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரிலேயே அனைத்து இட ஒதுக்கீடு விவரங்களும் அடங்கிய வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இட ஒதுக்கீட்டை நிராகரிப்பது அந்த சமுதாயத்தை திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். அரசியல் சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையை தட்டிப் பறிப்பது மாபெரும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்," என்று பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ளார்.
இறுதியாக, மத்திய அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இருக்கின்ற 27% இட ஒதுக்கீட்டை 50%ஆக உயர்த்துவதற்கு இந்த கூட்டத்தொடரிலேயே அரசியல் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவர வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
"நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி"
சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர். ரவீந்திரநாத்திடம் இதனால் பொது சுகாதாரத்தில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று கேட்டது பிபிசி தமிழ்.
"தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகம் அதிகமாக வாழ்வது கிராமங்களில்தான். அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள்தான். விவசாயக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பட்டமேற்படிப்பு முடித்துவிட்டார்கள் என்றால் சொந்த ஊரிலே மருத்துவம் பார்ப்பார்கள். ஆனால், முன்னேறிய வகுப்பினரில் சிலர் படித்து முடித்துவிட்டு அமெரிக்காவுக்கோ, பிரிட்டனுக்கோ அல்லது ஆஸ்திரேலியவுக்கோ சென்றுவிடுவார்கள். இது இந்தியாவுக்கே இழப்பு. உயர் அடுக்கில் உள்ள சாதியினரோடு ஒப்பிடுகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வெளிநாடு செல்வது மிகவும் குறைவு."

"அது மட்டுமின்றி, அரசு வேலைகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தினர் இறுதிவரை அந்த வேலையை தொடர்ந்து செய்வார்கள். அப்போது, அரசு மருத்துவமனைகளும், பொது சுகாதாரமும் மேம்படும். அரசு மருத்துவமனையையே நம்பி இருக்கும் கிராமப்புற ஏழைகளும் பயன் அடைகிறார்கள்," என்கிறார் அவர்.
மேலும், "மருத்துவ கல்வி என்பது நாட்டு மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்வதாகும். இந்த விஷயத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது நாட்டு மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி ஆகும்," என்றார்.
"தமிழக அரசை கட்டுப்படுத்துவது யார்?"
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் கருத்தை சுட்டிக்காட்டி பேசுகையில், 2017ஆம் ஆண்டே தான் இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்ததாகவும், அப்போது அவர் அதில் அக்கறை எடுத்துகொள்ளவில்லை என்றும் கூறுகிறார் ரவீந்திரநாத்.
உயர் சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த இட ஒதுக்கீட்டுக்காக முதல்வர் எடப்பாடி அவசர அவசரமாக அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தியதாகவும், ஆனால் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லாதது குறித்து அனைத்து கட்சி கூட்டம் இதுவரையில் நடத்தப்படவில்லை என்றும் கூறுகிறார் அவர்.
அகில இந்திய இட ஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு தரும்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு மட்டும் ஏன் மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பும் ரவீந்திரநாத், மத்திய அரசு இதனை திட்டமிட்டு செய்வதாக குற்றம் சாட்டுகிறார்.
"இதுவரை ஒ.பி.சி.க்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்களில் முன்னேறிய வகுப்பினர்தான் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது, முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு என்றால் முன்னேறிய வகுப்பினர் தங்களுக்கான இடங்களை முழுமையாக தக்க வைத்து கொள்கிறார்கள். அதுமட்டுமின்றி, பொதுப் பிரிவிலும் ஓ.பி.சி பிரிவினரின் இடங்கள் இவர்களால் அபகரிக்கப்படும்." என்கிறார் ரவீந்திரநாத்.
"இது ஒ.பி.சிக்கு ஆதரவான குரலல்ல பாஜகவுக்கு எதிரானது"
இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "கடந்த 13 ஆண்டுகளாகவே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கீடு இருந்ததாக தெரியவில்லை. திமுக அங்கம் வகித்த மன்மோகன் சிங் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு 13 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதே உண்மை. இப்போது இது இல்லை என்று கதறுபவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்," என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

மேலும், இது பாஜகவுக்கு எதிரான குரல் என்றும், 10% இடஒதுக்கீடு என்பது முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும்தான் என்று கூறுவதே தவறு அனைத்து சாதியினரும், பல்வேறு மதத்தினரும் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.
இந்த பிரச்சனையை இப்போது பேசும் சிலர் கடந்த 13 வருடங்களாக ஏன் இதைப்பற்றி பேசவில்லை என்றும், 2006 ஆம் ஆண்டில் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் நாங்கள் 13 ஆண்டுகளாக சமூக நீதிக்கு எதிராக நடந்து கொண்டோம் என்று மன்னிப்பு கேட்பார்களா என்றும் அவர் கேட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












