ஹாங்காங் போராட்டம்: விமான நிலையத்தை முற்றுகையிடுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்கு ஆதரவாகப் போராடும் போராட்டக்காரர்கள் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளை தடுத்து, போராட்டம் நடத்தியதால் ஆசியாவின் முக்கிய போக்குவரத்து சந்திப்பாக கருதப்படும் ஹாங்காங் விமான நிலைய சேவைகள் முடங்கின.
விமான நிலையத்திற்கு செல்லும் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும் சாலைகள் தடுக்கப்பட்டன. இதனால் விமான நிலைய முனையத்திற்கு பயணிகள் நடந்து செல்ல வேண்டியிருந்தது. விமானங்கள் இயங்கினாலும் தாமதங்கள் இருந்தன.
ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் விமான நிலைய முனையக் கட்டடத்திற்குள் செல்ல முயன்றனர். ஆனால், கலவர தடுப்பு காவல் பிரிவு அவர்களை தடுத்து நிறுத்தினர்.
சனிக்கிழமையன்று தடை செய்யப்பட்ட பேரணி ஒன்றை நடத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல்கள் வெடித்தன.
பல்லாயிரக்கணக்கில் கூடியிருந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வானை நோக்கி சுடப்பட்டது. கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தியும், நீரை பாய்ச்சியும் போராட்டக்காரர்களை போலீஸார் கலைக்க முயன்றனர்.
போலீஸார் போராட்டக்காரர்களை கலைக்க லத்திகளை பயன்படுத்தியதும், மிளகு ஸ்ப்ரேவை பயன்படுத்தியதும் களத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது.

பட மூலாதாரம், Getty Images
தீவிர போராட்டக்காரர்கள் குடிமக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் தாங்கள் அழைக்கப்பட்டதாக போலீஸார் கூறினர்.
சனிக்கிழமையன்று, சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியில் ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தலை முழுவதுமாக நிறுத்தியதன் ஐந்தாம் ஆண்டை அனுசரிக்க வீதிகளில் மக்கள் பேரணி நடத்தினர்.
ஹாங்காங்கில் கடந்த மூன்று மாதங்களாக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஹாங்காங் விமானநிலையத்தில் என்ன நடந்தது?
ஹாங்காங்கின் செக் லாப் கோக் விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஞாயிறன்று குவிந்தனர்.
அவர்கள் அதற்குமேல் முன்னேறி செல்வதை போலீஸார் தடுத்தனர்.
எனவே போராட்டக்காரர்கள் அந்த வளாகத்தின் பிற இடங்களுக்கு சென்று சாலைகளையும் போக்குவரத்து இணைப்புகளையும் மறித்தனர்.
"விமான நிலைய சேவையை முடக்கினால் இந்த செய்தி குறித்து பல வெளிநாட்டவருக்கு தெரியவரும். அவர்கள் ஹாங்காங் தொடர்பான செய்திகளை படிப்பார்கள்" என போராட்டக்காரர் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் ரயில் பாதையில் சில கற்களை வைத்ததால் விமான நிலைய ரயில் சேவை நிறுத்தப்பட்டது என போலீஸார் தெரிவித்தனர்.
ஆகஸ்டு மாதம் நடைபெற்ற போராட்டத்தில் விமான நிலையம் பல நாட்களாக முடக்கப்பட்டது; நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
ஹாங்காங்கில் ஏன் இந்த போராட்டம்?
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது ஏன்? என புரிந்து கொள்ள வேண்டுமானால், அந்நாட்டின் 150 ஆண்டுகால அரசியலை புரிந்து கொள்ள வேண்டும்.
ஹாங்காங் தீவானது 150 ஆண்டுகாலம் பிரிட்டனின் காலனியாக இருந்தது.
1842 ஆம் அண்டு நடந்த போரில் ஹாங்காங்கின் சில பகுதிகளை பிரிட்டன் கைப்பற்றியது.
பின், மேலும் சில பகுதிகளை 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனா பிரிட்டனிடம் ஒப்படைத்தது.
1950களில் ஹாங்காங்கின் துறைமுகம் அந்த பகுதியின் முக்கிய வணிக தளமாக மாறியது. அந்த சமயத்தில் ஹாங்காங்கின் பொருளாதாரம் புத்தெழுச்சி பெற்றது.
அதேசமயம் ஏராளமான அகதிகள், வறுமையில் உழன்றவர்கள், சீனாவில் தண்டனைக்கு உள்ளானவர்கள் ஹாங்காங்கிற்கு பயணித்தார்கள்.
இப்படியான சூழலில், 99 ஆண்டுகால குத்தகை முடியும் தருணம் நெருங்கிக் கொண்டிருந்தது.
1980களில் ஹாங்காங்கின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பிரிட்டனும் சீனாவும் பேச்சுவார்த்தையில் இறங்கின.
முழுமையாக ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென சீனா கோரியது.

பட மூலாதாரம், Getty Images
1984ம் ஆண்டு ஒரு முடிவு எட்டப்பட்டது. 1997ம் ஆண்டு ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்படும் "ஒரு தேசம், இரண்டு அமைப்பு" என்ற முறையில் ஹாங்காங் இயங்கும் என முடிவு செய்யப்பட்டது.
அதாவது, சீனாவின் ஒரு பகுதியாக ஹாங்காங் இருக்கும். அதே சமயம் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை தவிர்த்து சுயாட்சியாக ஹாங்காங் இயங்கும்.
இதன் காரணமாக சீனாவில் இல்லாத சுதந்திரத்தை, ஹாங்காங் மக்கள் அனுபவிக்கிறார்கள்.
ஆனால், அதே நேரம் ஹாங்காங் நிர்வாக தலைவரை நேரடியாக ஹாங்காங் மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது.
1,200 பேர் கொண்ட தேர்தல் குழுவால்தான் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஹாங்காங் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 2014ம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டம் ஹாங்காங்கில் முன்னெடுக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், அரசு தலைமையகங்களின் முன்னால் இருந்த வளாகங்களை சட்டபூர்வமற்ற முறையில் ஆக்கிரமித்த ஜோசுவா வொங், அலெக்ஸ் சொவ் மற்றும் நாதன் லா உள்ளிட்ட இளைஞர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டம், குடை (அம்பிரல்லா) இயக்கம் என்று கூறப்படும் ஜனநாயக போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. இதில் சீனாவால் ஆளப்பட்டுவரும் தங்களது நிலப்பரப்பில் ஜனநாயக மாற்றம் நிகழ வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் இணைந்து கொண்டனர்.
ஆனால், இந்தப் போராட்டமும் சீனாவால் ஒடுக்கப்பட்டது.
இந்த சூழலில், ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபர்களை சீனாவிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் மசோதா ஒன்றை 2019 ஏப்ரல் மாதம் அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இதற்கு ஹாங்காங் மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இதன் மூலமாக பழவாங்கப்படுவார்கள். சீன நீதிமன்ற முறைகளினால் அவர்கள் மோசமான சித்திரவதைகளை அனுபவிப்பார்கள் என அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி வீதிக்கு வந்து போராட தொடங்கினார்கள்.
சீனா முழுமையாக ஹாங்காங்கை கட்டுப்படுத்த நினைக்கிறது என்ற வாதத்தையும் விமர்சகர்கள் முன் வைத்தார்கள்.
முதலில் சாதாரணமாக தொடங்கிய போராட்டத்தில் நாட்கள் செல்ல செல்ல லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றார்கள்.
வணிகர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள், ஜனநாயகத்திற்கான செயற்பாட்டாளர்கள் மற்றும் மத குழுக்கள் என சமூகத்தின் அனைத்து பிரிவினரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அரசு நிர்வாகம் நடக்கும் பகுதியில் அவர்கள் போராட்டத்தை மேற்கொண்டதால் மொத்த நாடும் ஒரு கட்டத்தில் ஸ்தம்பித்தது.
பின் ஜூலை மாதம், இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக கைவிடுவதாக ஹாங்காங்கின் நிர்வாகத் தலைவர் கேரி லேம் அறிவித்தார இருப்பினும் இந்த சட்ட மசோதாவை தற்காலிகமாக கைவிடக் கூடாது. முழுமையாக் கைவிடவேண்டும் என்கின்றனர் போராட்டக்காரர்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












