அயோத்தி தீர்ப்பு: அதிருப்தி தெரிவிக்கும் லிபரான் கமிஷன் முன்னாள் வழக்கறிஞர்

அயோத்யா

பட மூலாதாரம், பா. காயத்திரி அகல்யா

பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான அரசியல் தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் ஆகியோரையும், பி.வி. நரசிம்ம ராவையும் புதுடெல்லியில் விக்யான் பவனில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆளாக்கியவர் சண்டிகரைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அனுபம் குப்தா.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரித்த நீதிபதி எம்.எஸ். லிபரான் கமிஷன் வழக்கறிஞராக இந்த வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன. கமிஷனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், 2009ல் அதன் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது குப்தா அதை குறைகூறினார்.

அத்வானி

பட மூலாதாரம், Getty Images

இப்போது அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில் பிபிசிக்கு தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அனுபம் குப்தா, அதுகுறித்து கடும் அதிருப்தியைத் தெரிவித்தார்.

உமா பாரதி

பட மூலாதாரம், Getty Images

அயோத்தி தீர்ப்பு குறித்த அனுபம் குப்தாவின் விமர்சனம் பின்வரும் அம்சங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன .

1) சர்ச்சைக்குரிய நிலம் முழுவதையும், வழக்கின் ஒரு தரப்பிற்கு (இந்துக்களுக்கு) வழங்கியது.

2) 1528க்கும் 1857 க்கும் இடைப்பட்ட காலத்தில் மசூதிக்குள் வழிபாடு நடந்ததற்கான ஆதாரம் பற்றி கேள்வி எழுப்பியது மற்றும்.

3) சட்ட விரோதமாக, 1949 டிசம்பரில் மசூதிக்குள் சிலைகள் வைத்தது மற்றும் 1992 டிசம்பரில் மசூதியை முழுவதுமாக இடித்துத் தள்ளியது.

பேட்டியின் முக்கிய அம்சங்கள்.

தீர்ப்பை நீங்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறீர்கள்?

இந்து சிலைக்கு சட்டபூர்வ அதிகார அந்தஸ்து உள்ளது என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். எனவே, ராம் லாலா விரஜ்மன் (குழந்தை ராமர்) - மைனர் என்ற வகையில் சட்ட விதிகளில் உள்ள தளர்வுகள் குறித்து கேள்வி எழாது''

தீர்ப்பில் உங்களுடைய அதிருப்திக்கான முக்கிய அம்சம் என்ன?

அயோத்யா

பட மூலாதாரம், பா. காயத்திரி அகல்யா

சர்ச்சைக்குரிய நிலம் - உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி - முழுவதையுமே இந்துக்களுக்கு ஒதுக்கியதில் எனக்கு தீவிர அதிருப்தி உள்ளது.

ஆவணங்கள் இல்லாத நிலையில் சொத்தின் உரிமையை முடிவு செய்த நடைமுறையில் எனக்கு அதிருப்தி உள்ளது.

வெளிப்புறப் பகுதியில் அவர்கள் (இந்துக்கள்) நீண்டகாலமாக எந்தவித இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வந்திருக்கிறார்கள் என்று நில உரிமை முடிவு செய்யப்பட்டிருப்பது சரியானது என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்றாலும், இறுதித் தீர்ப்பில், கட்டடத்தின் உள்பகுதியில் அதே அணுகுமுறை கையாளப்படவில்லை.

கட்டடத்திற்குள் இருக்கும் பகுதியின் அனுபவ பாத்யதை மற்றும் வழிபாடு சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது என்று, திரும்பத் திரும்ப, பல இடங்களில் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இது சரியான காரணங்களின் அடிப்படையிலானது என்று எடுத்துக் கொண்டால், வெளிப்புறப் பகுதியை இந்துக்களுக்கு அளிப்பதாக இறுதித் தீர்ப்பு இருக்க வேண்டும்தான். உள் பகுதியை எப்படி இந்துக்களுக்குத் தந்துவிட முடியும்?

உள்புறம் மற்றும் வெளிப்புறம் என இரு பகுதிகளையுமே இந்துக்களுக்கு அளிப்பதாக எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு, வெளிப்புற பகுதி மட்டுமே இந்துக்களின் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்று நீதிமன்றம் கூறியதிலிருந்து அடிப்படையில் முரண்பட்டுள்ளது.

அயோத்யா

1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் வழிபாடு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அது குறித்து உங்களுடைய கருத்து...

நீதிமன்றம் இந்த அடிப்படையான விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளது. இது விநோதமாக எனக்குத் தோன்றுகிறது. 1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில், அந்த இடத்தை முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்கு, முஸ்லிம்கள் தரப்பில் எந்த ஆதாரங்களும் தரப்படவில்லை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பீலில் விசாரிக்கப்படும் வழக்கில் ஆதாரங்கள் விடுபடும் காலக்கட்டம் இருந்தாலும், 1528ல் மசூதி கட்டப்பட்டு, 1992ல் இடிக்கப்பட்டது என்ற உண்மை - சந்தேகத்துக்கு இடமில்லாமல் இருக்கிறது.

முகலாயர் ஆட்சிக் காலத்தில் எங்காவது ஒரு கிறிஸ்தவ தேவாலயம், குருத்வாரா அல்லது ஒரு கோவில் கட்டப்பட்டதாக வைத்துக் கொள்வோம். அங்கு பல நூறு ஆண்டுகள் நீங்கள் வழிபாடு செய்து வந்திருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என அந்த சமுதாயத்தினரை கேட்க முடியுமா. 1528க்கும் 1857க்கும் இடைப்பட்ட காலத்தில் அங்கு இந்துக்கள் வழிபாடு செய்தனர் என்பதற்கு இந்துக்களிடம் கூட ஆதாரங்கள் கிடையாது. அது ராமரின் பிறந்த இடம் என்று அவர்கள் (இந்துக்கள்) நியாயமான நம்பிக்கை கொண்டிருந்தால், அந்த இடத்தில் வழிபாடு செய்திருப்பார்கள்.

ஆனால் 1528ல் கட்டப்பட்ட அந்த மசூதி 1857 வரையில் முஸ்லிம்களால் பயன்படுத்தப்படவில்லை என்று நீதித் துறை கூறியுள்ளது. எதன் அடிப்படையில் மாண்புமிகு நீதிமன்றம் இந்த அனுமானத்திற்கு வந்துள்ளது?

சிலைகள்

பட மூலாதாரம், பா. காயத்திரி அகல்யா

1949 டிசம்பர் மற்றும் 1992 டிசம்பர் சம்பவங்களை தீர்ப்பு கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதா?

மசூதியின் மையப் பகுதியில் குழந்தை ராமரின் சிலைகளை 1949 டிசம்பர் 22 ஆம் தேதி நிறுவியது - மசூதியை இடித்ததாக அவர்கள் கூறுவது, சட்டவிரோதம் என்று இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து ஆர்ஜிதம் செய்யப்பட்டது. 1949 டிசம்பர் 22 ஆம் தேதிக்கு முன் சிலைகள் எதுவும் இல்லை என்று நீதிமன்றம் சரியான விஷயத்தைக் கூறியுள்ளது. இருந்தாலும், நீதிமன்றத்தின் முடிவு, ஆய்வு மற்றும் மதிப்பீடுகளில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இந்த நிலத்தில் இந்துக்களுக்கு உரிமையுள்ளதாக கூறுவது, மசூதியை இடித்ததை நியாயப்படுத்துவதாக உள்ளது, அதாவது சட்டத்தை மீறியதாக அர்த்தமாகிறது.

1992 டிசம்பரில் நடந்த மசூதி இடிப்பு சம்பவம், சட்டத்தை மீறியது, நீதிமன்ற உத்தரவுகளை மீறிய செயல் என்று நீதிமன்றம் கூறினாலும், அந்த சம்பவம் நீதிமன்றத்தை உணர்வு ரீதியிலோ, நெறி அடிப்படையிலோ, தர்க்க ரீதியிலோ பாதிப்பை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. நீதிமன்றத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருக்கும் நிலையில், இதை என்னால் நியாயப்படுத்த முடியவில்லை. இந்த அடிப்படையான விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது, இவை கவலை தருகின்றன.

1949ல் சிலைகளை நிறுவியது, 1992ல் முழு கட்டடத்தையும் இடித்துத் தள்ளியது ஆகிய - சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஆளாகியுள்ள தரப்பினரான இந்துக்களுக்கு முழு இடத்தையும் ஒதுக்கியிருப்பது - என்னைப் பொருத்தவரை குற்றவாளிகளுக்கு பாராட்டு அளிப்பதைப் போன்றதாகக் கருதுகிறேன்.

அயோத்யா

பட மூலாதாரம், பா. காயத்திரி அகல்யா

வெளிப்புற மற்றும் உள்புறப் பகுதிகளை இந்துக்களுக்கு அளிப்பதற்கு நீதிமன்றம் கூறும் காரணங்கள் என்ன?

முழு கட்டுமானமும் ஒரே முழுமையான பகுதி என்பது தான் நீதிமன்றம் கூறியுள்ள ஒரே காரணம்.

பிரிக்க முடியாத அளவுக்கு ஒரே பகுதியாக அது கருதப்படுமானால், அதற்கான அனுபவ உரிமை எந்தத் தரப்பாருக்கும் முழுமையாக வழங்கப்பட்டிருக்கக் கூடாது.

கண்டிப்பு, உண்மை நிலை மற்றும் சமன்பாடான நிலை ஆகியவை இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் தேவைப்படக் கூடிய, எதிர்பார்ப்புகளாக உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மீது பெரிய மதிப்புகள் கொண்டுள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்புகள் இந்த தீர்ப்பில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பது எனக்கு வருத்தம் தருவதாக உள்ளது. இந்தப் பிரச்சினை மீதான ஒட்டுமொத்த அணுகுமுறையிலும், மதச்சார்பின்மை என்ற அடிப்படை லட்சியங்கள் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து உச்ச நீதிமன்றம் பின்வாங்கியுள்ளது என்று கருதுகிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :