ஹரியாணா தேர்தல்: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜனதாவுக்குதான் ஓட்டு விழும்" - பா.ஜ.க வேட்பாளர்
ஹரியாணா மாநில சட்டசபைக்கு இன்று (திங்கள்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்குள்ள கர்னால் மாவட்டத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் பக்ஷிஷ் சிங் விர்க் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் பேசும்போது, 'இன்று நீங்கள் ஒரு தவறு செய்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு துயரப்படுவீர்கள். நீங்கள் யாருக்கு ஓட்டளிக்கிறீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். மோடிஜியும், மனோகர்ஜியும் (முதல்-மந்திரி) மிகவும் உஷாரானவர்கள். வாக்குப்பதிவு எந்திரத்தில் நீங்கள் எந்த பொத்தானை வேண்டுமானாலும் அழுத்துங்கள். ஆனால் உங்கள் வாக்கு பா.ஜனதாவுக்குத்தான் விழும். அதற்கேற்றவாறு நாங்கள் எந்திரங்களை மாற்றியமைத்து விட்டோம்' என்று கூறினார்.
இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனனாயக் ஜன்டா கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளது. மேலும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் அசோக் தன்வரும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தினமணி: 'டாக்டர் பட்டம் பெற்றதன் மூலம் பொறுப்புகள் அதிகரித்துள்ளன'

பட மூலாதாரம், Facebook
கெளரவ டாக்டா் பட்டம் பெற்றதன் மூலம் எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 28-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வா் பழனிசாமி உள்பட 5 பேருக்கு கெளரவ டாக்டா் பட்டம் வழங்கப்பட்டது.
டாக்டா் பட்டம் பெற்று முதல்வா் பழனிசாமி பேசியதாவது, "பட்டமளிப்பு விழா என்ற இந்த அருமையான நிகழ்வில் பங்கேற்பது தனிச்சிறப்பு. மாணவா்களாகிய உங்களுக்கு காத்திருக்கும் பெருமை வாய்ந்த பொறுப்புகளை, நீங்கள் ஏற்றுக் கொள்ளும் தருணம் இதுவாகும். மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான உங்களது பொறுப்புகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொள்ளும் தருணமும் இதுதான். நானும் கௌரவ டாக்டா் பட்டம் பெற்ன் மூலம், எனது பொறுப்புகளும் அதிகரித்துள்ளன.
ஒரு சமூகத்தின் வளா்ச்சி, பொருளாதார பரிணாம வளா்ச்சியுடன் மட்டும் நின்று விடுவதில்லை. உணவு, கல்வி, மருத்துவம், குடியிருப்பு, உடை ஆகியவற்றுக்கு வகைச் செய்யும் பொருள் வசதி மிக முக்கியமானது தான். அதே நேரம், வாழ்க்கையை கற்கவும் மனிதனின் அகம் மேன்மையடையவும் இலக்கியம், சிந்தனைகள், நீதிக் கதைகள் ஆகியவை வழியே கிடைக்கும் விவேகம் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இவை இரண்டையும் ஒருங்கே கற்பவனே ஒரு முழு மனிதன் ஆவான்." என்றார்.

இந்து தமிழ்: "ஏர் இந்தியாவை விற்க மத்திய அரசு தீவிரம் "

பட மூலாதாரம், Getty Images
ஏர் இந்தியா நிறுவனத்தை முழுவதுமாக தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது. அரசு விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
ரூ.58,000 கோடி அளவில் அந்நிறுவனத்துக்கு கடன் உள்ளது. இந்நிலையில் அதை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில், மத்திய அரசு ஏர் இந்தியாவில் வைத்திருக்கும் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.
வாங்க விருப்பமுள்ள நிறு வனங்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்க உள்ளது.
இந்த மாதத்தின் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தில் இது தொடர்பான நடவடிக் கைகள் மேற் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதற்காக சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தி இந்து: "மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவை தேர்தல்"
மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 51 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2 மக்களைவை தொகுதிகளிலும் இன்று (திங்கள்கிழமை) நடக்கும் இடைத்தேர்தல் குறித்த செய்தியை தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கும் இன்று இடைத் தேர்தல் நடக்கவுள்ளது.
மிக அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 11 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
பஞ்சாப், அசாம் ஆகிய இரு மாநிலங்களில் தலா 4 தொகுதிகளுக்கும், தமிழ்நாடு, ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளுக்கும், ஒடிசா, தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மேகாலயா, புதுச்சேரி, அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது.
இரு மாநில சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுகளில், வரும் 24ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












