தனியார் மயமாகும் ஏர் இந்தியா

பட மூலாதாரம், Getty Images
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் குறைந்த விலையில் சேவையளித்து வரும் மற்ற போட்டியாளர்களுக்கு ஈடாக லாபம் ஈட்டும் வகையில் வளர கடுமையான போராடிவருகிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
அரசின் பங்குகளை விற்பது குறித்தான அளவீடுகள் உட்பட இது குறித்து தெளிவான முடிவுகளை எடுக்க இந்தியா ஒரு குழு அமைக்கும் என்றும், என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏர் இந்தியாவின் கடன் சுமையான 520 பில்லியன் ரூபாயை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டுமா அல்லது சிலவற்றை மட்டும் தள்ளுபடி செய்ய வேண்டுமா என்பது குறித்தும் குழு முடிவெடுக்கும்.
பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 2012-ம் ஆண்டு 5.8 பில்லியன் டாலர்கள் நிதி ஆதரவு கொடுக்கப்பட்டது. தொடர்ந்தும் இந்நிறுவனம் மூழ்காமல் இருக்க அரசாங்க நிதி உதவியையே சார்ந்திருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு முன்னர் தனியார் மயமாக்கலுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு கைவிடப்பட்டன. எனினும், அமைச்சர்கள் இந்த முறை இதற்காக அழுத்தம் கொடுத்தால், பாரிய அளவிலான போராட்டங்கள் இந்த முறை நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அச்சுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
முன்னொரு காலத்தில் நாட்டின் ஒரே விமான சேவை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா, சந்தையில் புதிதாக வந்த போட்டியாளார்களிடம் தனது பங்குகளை இழந்துள்ளது.
அதன் சேவைகள் தரம் குறைந்திருக்கின்றன மற்றும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்பது போன்ற கருத்துணர்வை அது எதிர்கொள்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமாக தற்போது வரை நீடித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் 41 இடங்களுக்கு தனது விமானங்களை இயக்கி வருகிறது. ஆனால், சந்தையில் 20 சதவீதத்துக்கும் குறைவான பங்கையே அது பெற்றிருக்கிறது .
உள்நாட்டு பயண சந்தையில் ஏர் இந்தியா நிறுவனம் 14.6 சதவீதம் இடத்தை பிடித்துள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












