ஹுவாவே எதிர்காலத்துக்கு இந்தியா கை கொடுக்குமா? - 5ஜி தொழில்நுட்ப கவலைகள்

பட மூலாதாரம், Getty Images
ஹுவாவே நிறுவனத்தின் 5ஜி தொழில்நுட்பத்தை தங்களது நாட்டில் சந்தைப்படுத்துவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ள நிலையில், இந்தியாவில் அதே தொழில்நுட்பத்தை பரிசோதித்து காட்டும் வாய்ப்பு அந்நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது.
"சில நாடுகளின் அரசுகள் ஏற்கனவே ஹுவாவேவுக்கு மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவுடன் 5ஜி தொழில்நுட்பத்தில் ஏற்படும் எந்த ஒரு வர்த்தக உறவும் ஹுவாவேவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறுகிறார் தனியார் சந்தை ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த வல்லுநரான அருண் சுகுமார்.
"தற்போதைய சூழ்நிலையில் ஹுவாவே இயல்பாக இருந்தாலும், அந்நிறுவனம் உலகம் முழுவதும், குறிப்பாக புதிய சந்தைகளில் முதலீடு செய்யவேண்டியது அவசியம். ஆனால், இந்தியாவை விட பெரிய சந்தை இருக்குமா என்ன?."
ஹுவாவே நிறுவன தயாரிப்புகள் தங்களது நாட்டை கண்காணிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ளன என்பது போன்ற அச்சத்தை பல அரசுகள் வெளிப்படுத்தியதன் காரணமாக அந்நிறுவனம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே தடைசெய்யப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் குற்றச்சாட்டுகளை அறவே மறுக்கும் ஹுவாவே நிறுவனம், தங்களது தயாரிப்புகள் எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும், தங்களுக்கும் சீன அரசுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்து வருகிறது.
இந்தியாவின் தொழில்நுட்ப கருவிகளுக்கான மிகப் பெரிய சந்தையை பெரும்பாலும் சீன நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன. எனினும், ஹுவாவே நிறுவனத்தை புறக்கணிக்குமாறு இந்தியா உள்ளிட்ட தனது நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதால், இந்தியாவின் நிலைப்பாட்டில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் ஏற்படும் என்ற நிலையே நிலவுகிறது.
அமெரிக்க வர்த்தக செயலாளர் வில்பர் ரோஸ் சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, தனது "அரசியல் கூட்டாளியான இந்தியா கவனக்குறைவாக பாதுகாப்பு அபாயத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ளாது என்று அமெரிக்கா நம்புகிறது" என்று கூறினார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஹுவாவேயின் இந்தியாவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் சென், தங்களது நிறுவனத்தின் உபகரணங்கள் அமெரிக்கா குற்றம் சாட்டுவதை போன்று எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கொண்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாக கூறினார்.
"அமெரிக்க அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் முடிவை மாற்றுவதற்கு முயற்சிப்பதாக நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். எனினும், எங்களால் முடிந்தவற்றை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்."

பட மூலாதாரம், Getty Images
ஹுவாவே மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் குறித்து இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனைகளில் பங்கேற்க ஹுவாவேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் குறித்த பணியிலிருந்து ஹுவாவேயை விலக்குவது, உண்மையில் இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சுகுமார் கூறுகிறார்.
"உலகில் வெறும் ஐந்துக்கும் குறைவான நிறுவனங்களுக்குத்தான் 5ஜி தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் உள்ளது. குறிப்பாக, 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னணியிலுள்ள நோக்கியா, எரிக்சன் ஆகிய நிறுவனங்களை விட ஹுவாவே மிகவும் மலிவான கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறை ஏற்கனவே தள்ளாடி வருகிறது. இந்நிலையில், ஹுவாவே நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தால் குறைந்த கட்டணத்தில் புதிய தொழில்நுட்பத்தில் மக்களுக்கு சேவைகளை வழங்க முடியும்" என்று அவர் கூறுகிறார்.
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













