டோல்கேட்டில் இனி சுங்கக் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்

இனி சுங்கக்கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: இனி சுங்கக்கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்காமல் செல்ல 'பாஸ்டேக்' திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 1-ந்தேதி முதல் முழுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"சுங்க கட்டணங்கள் செலுத்த வரிசையில் வாகனங்கள் நிற்பதால் தாமதம் ஆகிறது. இந்தநிலையை தவிர்க்க பாஸ்டேக் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும் அது முழுமையாக செயல்படவில்லை. தற்போது பாஸ்டேக் திட்டம் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் 5 வழிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த திட்டம் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்படுகிறது.

இதன்படி 'மை பாஸ்ட் டேக்' என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இது தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சுங்கச்சாவடி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பெட்ரோல் பங்குகள், பொதுச் சேவை மையம் (காமன் சர்வீஸ் சென்டர்) ஆகியவற்றில் பாஸ்டேக் கார்டை பெறலாம். இந்த கார்டுகளை பெற ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், வாகன உரிமையாளர்களின் ஆதார் கார்டு ஆகியவற்றை காண்பிக்க வேண்டும். ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் தனி பயன்பாட்டு குறியீடு, ரகசிய குறியீட்டு எண்கள் வழங்கப்படும்.

வாகன உரிமையாளர்கள் தாங்கள் சுங்கச்சாவடிகளை எத்தனை முறை கடந்து செல்வார்களோ அதற்கு தகுந்தவாறு குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் வரை கட்டணம் செலுத்தி இந்த கார்டை பெறலாம். கடந்து செல்வதற்கு தகுந்தவாறு கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். அனைத்து தொகையும் தீர்ந்த பின்னர் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்" என்று நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

இந்து தமிழ் திசை: "நாட்டு மாடுகளின் எண்ணிக்கை வீழ்ச்சி"

நாட்டு மாடு

பட மூலாதாரம், Getty Images

நாடுமுழுவதும் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்து தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாட்டு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளது என்று தெரியவந்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"பாலுக்கு இருந்த தேவையாலும் அதிக பால் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும் நாட்டு மாடுகள் படிப்படியாக ஓரங்கப்பட்டப்பட்டு கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கால்நடை கணக்கெடுப்பின்படி நாடுமுழுவதும் மொத்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் 19 கோடியாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 19.24 கோடியாக அதிகரித்துள்ளது.

2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இந்தியாவின் தனிப்பட்ட நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த, 2012ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, 16 கோடியாக இருந்தது; அது தற்போது, 13.98 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக காளை இனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: அலைபேசி வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 117 கோடி

அலைபேசி

பட மூலாதாரம், Getty Images

அலைபேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 117 கோடியாக அதிகரித்துள்ளது என இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூலையில் 116.83 கோடியாக இருந்த அலைபேசி வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை ஆகஸ்ட் மாத இறுதியில் 117.1 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. ஒட்டுமொத்த தொலைபேசி பயனாளா்கள் எண்ணிக்கையில் இது 98 சதவீதமாகும்.

கணக்கீட்டு காலத்தில், ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக 84.45 லட்சம் புதிய வாடிக்கையாளா்களை ஈா்த்துக் கொண்டுள்ளது. அதேசமயம், வோடஃபோன் ஐடியாவிலிருந்து 49.56 லட்சம் வாடிக்கையாளா்களும், பாரதி ஏா்டெல் நிறுவனத்திலிருந்து 5.61 லட்சம் பேரும், பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து 2.36 லட்சம் வாடிக்கையாளா்களும் வெளியேறியுள்ளனா்" என்று அந்த செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :