திருச்சி நகைக்கடை கொள்ளை: முருகனின் உறவினர் கைது - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், UGC
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: லலிதா ஜுவல்லரி கொள்ளை- மேலும் ஒருவர் கைது
திருச்சியில் லலிதா ஜுவெல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பான வழக்கில் திருவாரூர் முருகனின் அண்ணன் மகன் முரளி என்பவரை போலீசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர் என்கிறது தினந்தந்தி நாளிதழ் செய்தி.
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜுவெல்லரி நகைக்கடை உள்ளது. தமிழகத்தின் பிரபல நகைக்கடைகளில் ஒன்றான இந்த கடை திருச்சியில் 3 தளங்களுடன் இயங்கி வருகிறது. கடந்த 2-ந் தேதி அதிகாலை கடையின் பின்பக்க சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்றனர். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் பிரபல நகைக்கடையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முகமூடி அணிந்திருந்த கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து நகைகளை அள்ளி செல்லும் காட்சிகள் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களிலும் பதிவாகி இருந்தன. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர் என அனைத்து மாவட்ட போலீசாருக்கும் கொள்ளை சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.
போலீசாரின் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் திருவாரூரை சேர்ந்த முருகன் மற்றும் அவருடைய கூட்டாளிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பிரபல கொள்ளையனான முருகன் திருச்சியில் கொள்ளையை அரங்கேற்ற சதிதிட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே கடந்த 3-ந் தேதி இரவு திருவாரூரில் நடந்த வாகன சோதனையில் நகை கொள்ளை வழக்கில் தொடர்புடைய திருவாரூர் மடப்புரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்து, 5 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். அப்போது தப்பி ஓடிய முருகனின் அக்கா மகன் சுரேசை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சுரேசின் தாயார் கனகவள்ளி, குணா, மாரியப்பன், ரவி, பார்த்திபன் ஆகியோரிடம் திருவாரூர் ஆயதப்படை பிரிவில் வைத்து திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது மாரியப்பன் கொடுத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார், கொள்ளை கும்பல் தலைவன் முருகனின் அண்ணன் மகன் முரளி (32) என்பவரை நேற்று காலை திருவாரூர் சீராதோப்பு பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது முரளியை அடையாளம் காட்டுவதற்காக மாரியப்பனையும் போலீசார் உடன் அழைத்து வந்திருந்தனர். முருகன் எங்கே? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன? என்பது குறித்து முரளி உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

தினமணி: காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 1,596 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

பட மூலாதாரம், ROLI BOOKS
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 1,596 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
"காந்தி ஜெயந்தி தினத்தன்று தமிழ்நாடு தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க தொழிலாளா் ஆணையா் இரா. நந்தகோபால் அறிவுறுத்தியதன் பேரில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட அமலாக்க அலுவலா்களால் கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சிறப்பாய்வின் பொழுது சென்னை மண்டலத்தில் 893 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 294 கடைகள் மற்றும் நிறுவனங்கள் 235 உணவு நிறுவனங்கள், 37 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட 566 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
இதுபோன்ற மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், விதிகளை மீறிய செயலுக்காக தமிழகத்தில் உள்ள 813 கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீதும், 653 உணவு நிறுவனங்கள் மீதும், 122 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீதும், 8 தோட்ட நிறுவனங்கள் மீதும் ஆக மொத்தம் 1,596 நிறுவனங்கள் மீது சட்டப்பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது."
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது

இந்து தமிழ்: "சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்கம்": மத்திய அமைச்சர் நக்வி
சிறுபான்மையினருக்கு இந்தியா சொர்க்கம், இங்குதான் முழுப் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பெருமிதத்தோடு தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவுக்கு மத்தியஅமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவரிடம், இந்தியாவில் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒருவிதமான அச்சமான சூழல் இருப்பதாக உணர்கிறார்களா என்று கேட்டனர்.
அதற்கு அப்பாஸ் நக்வி பதில் அளிக்கையில், " ஒருபோதும் பாதுகாப்பின்மையோடு வாழவில்லை. சிறுபான்மை மக்கள் இந்தியாவில் முழுப் பாதுகாப்போடு வாழ்கிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு இந்தியா சொர்க்கம். ஆனால் நம்முடைய அண்டை நாடான பாகிஸ்தான் சிறுபான்மையினருக்கு நரகம் போன்றது.
சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்கும், வளர்ச்சிக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு அளித்து இருப்பது உலகிலேயே இந்தியா மட்டும் தான்.
சிறுபான்மை சமூகத்தில் உள்ள பெண் குழந்தைகள் கல்வி உதவித்தொகை இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தி வந்தனர். ஆனால், மத்திய அரசு அளிக்கும் கல்வி உதவித்தொகை மூலம் 70 சதவீதமாக இருந்த இடைநிறுத்தல் கல்வி, தற்போது 40 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.
கல்வி அடிப்படையில் வட இந்தியா மற்றும் தென் இந்தியாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. தென் இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்களின் கிளைகளை வட இந்தியாவில் திறக்க முயல வேண்டும் " எனத் தெரிவித்தார்

டைம்ஸ் ஆஃப் இந்தியா: ரோகித்சர்மா: 'பிரியாணி சாப்பிட்ட பிறகு ஷமி வேற லெவல்'

பட மூலாதாரம், Getty Images
விசாகப்பட்டினத்தில் தென்னாப்ரிக்காவுக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்ற நிலையில், ஆட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்டநாயகன் ரோகித்சர்மா பகிர்ந்துகொண்ட சில சுவாரஸ்ய கருத்துக்கள் குறித்த செய்தியை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆட்டத்தின் இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமையன்று மிகவும் அதிக வெப்பம் நிலவிய கடினமான சூழலில், சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியை ரோகித்சர்மா பாராட்டினார்.
''மிகவும் கடினமான சூழலில், சுழல்பந்துவீச்சாளர்களே தொடர்ந்து பந்துவீச முடியும். ஆனால் வெப்பத்தை பொருட்படுத்தாமல் ஷமி நன்றாக பந்துவீசினார்'' என்றார் ரோகித்.
''புத்துணர்வோடு இருந்தால் ஷமியால் என்ன சாதிக்கமுடியும் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். அதுவும் அவரின் விருப்பத்துக்குரிய பிரியாணியும் சேர்ந்துவிட்டால், ஷமி அபாரம்தான்'' என்று ரோகித்சர்மா நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












