காந்தியின் போராட்டத்தில் மாற்றத்தை உண்டாக்கிய ஒற்றைக் கடிதம்

மகாத்மா காந்தி
    • எழுதியவர், அவதனம் ரகு குமார்
    • பதவி, வழக்கறிஞர்

(இந்தக் கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர். )

காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த தொடக்க காலத்தில் தத்துவவியலாளர் மைக்கேல் கோட்ஸை சந்தித்தார். காந்திக்கு மனமாற்றத்தை ஏற்படுத்தி அவரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதற்கு கோட்ஸ் தன்னால் இயன்ற வரை முயற்சி செய்தார் மைக்கேல் கோட்ஸ்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாக லியோ டால்ஸ்டாய் எழுதிய ''இறைவனின் சாம்ராஜ்யம் உனக்குள் இருக்கிறது (The Kingdom of God is Within You)'' என்ற புத்தகத்தை காந்திக்கு அவர் அளித்தார்.

அந்தப் புத்தகம் காந்தியிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, அமைதிவழிப் போராட்டத்துக்கு வித்திட்டது. ஆனால் இந்த அமைதிவழிப் போராட்டத்தில் காந்திக்கு முழுமையான ஒப்புதல் இல்லை. அதைத் தொடர்ந்து டால்ஸ்டாய் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் படித்தார்.

வெளிநாட்டுக் கலாசாரம், குறிப்பாக தொழில்மயமாதல் கலாசாரம் காந்திக்கு பிடிக்காமல் போனதற்கு டால்ஸ்டாயின் எழுத்துகள் தான் முதன்மைக் காரணமாக இருந்தன.

டால்ஸ்டாய் மற்றும் தோரியூ சித்தாத்தங்களின் அடிப்படையில் தனது போராட்டத்துக்கு காந்தி அடிப்படை வடிவம் கொடுத்திருந்தாலும், சிறந்த அரசு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்திய தத்துவார்த்த சிந்தனைகளையும் மனதில் வைத்துக் கொண்டார்.

தென்னாப்பிரிக்காவில் அவருடைய போராட்டம் உருப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், எதிர்பார்த்த பலனை அது தராத சமயத்தில், 1909 அக்டோபர் 1 அன்று டால்ஸ்டாய்க்கு காந்தி தனது முதல் கடிதத்தை எழுதினார். அது ஒரு வாரம் கழித்து டால்ஸ்டாய்க்கு சென்று சேர்ந்தது.

காந்தி

பட மூலாதாரம், Getty Images

இதுபற்றி ''தென்னாப்பிரிக்கா டிரான்ஸ்வாலில் இருந்து ஓர் இந்துவிடம் இருந்து மனதுக்குப் பிடித்த ஒரு கடிதம் வந்துள்ளது,'' என்று தனது நாள்குறிப்பில் டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.

டால்ஸ்டாயிடம் இருந்து பதில் வருவதற்கு முன்னதாகவே, ''கிழக்கும் மேற்கும்'' என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் காந்தி பேச வேண்டியிருந்தது. மற்றொரு இந்தியர் தாரா கோதா தாஸ் என்பவருக்கு முன்னர் டால்ஸ்டாய் எழுதிய ஒரு கடிதத்தின் (இந்துவுக்கு ஒரு கடிதம்) அடிப்படையில் காந்தி பேசினார்.

டால்ஸ்டாய் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக, அந்தக் கூட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கடுமையாக உரையாற்றினார் காந்தி.

''இப்போதைய நிலைமைக்கு இந்தியர்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அடிமைத்தனத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்,'' என்று கடிதத்தில் கூறியிருந்தார். பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் அவர்கள் ஒத்துழைக்கக் கூடாது என்று அவர் அறிவுரை கூறியிருந்தார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயின் இந்தக் கடிதம்தான் அரசுக்கு ஒத்துழைக்கக் கூடாது என்ற இயக்கத்துக்கு (ஒத்துழையாமை இயக்கம்) வித்திட்டது. மேலும் காந்தியின் ''இந்து சுயராஜ்யம்'' என்ற உத்வேகமும் காரணமாக இருந்தது.

''நம்பிக்கையின் ஒப்புதல் வாக்குமூலங்கள்'' என்ற தலைப்பில் தனது உரை மற்றும் அதைத் தொடர்ந்த விவாதங்களின் விவரங்களை காந்தி குறிப்பிட்டுள்ளார். 1909 அக்டோபர் 10ஆம் தேதி டால்ஸ்டாய்க்கு காந்தி இரண்டாவது கடிதம் எழுதினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

கிறிஸ்தவப் பாதிரியார் ஜோஷப் ஜே டோக் எழுதிய, ''தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்திய தேசபக்தர் எம்.கே. காந்தி'' என்ற தலைப்பிலான தன்னைப் பற்றிய வரலாற்றையும் கடிதத்துடன் காந்தி இணைத்திருந்தார்.

இருந்தபோதிலும் காந்தி குறித்த அந்த நூலை டால்ஸ்டாய் சீக்கிரம் முழுமையாகப் படிக்க முடியாமல் போனது. ஆனால், அந்தப் புத்தகத்தைப் பின்னாட்களில் படித்து மகிழ்ந்தார் என்பதை அவருடைய நாட்குறிப்புகளின் மூலம் அறிய முடிகிறது. 1910 நவம்பர் 26ஆம் தேதி டால்ஸ்டாய் மரணம் அடைந்தார்.

அகிம்சை வழி போராட்டம் என்பது டால்ஸ்டாய் முன்வைத்த கோட்பாட்டின் அடிப்படையிலானது. ஆனால் 1906-07ல் அகிம்சை வழி அல்லது அமைதிவழிப் போராட்ட வழிமுறையில் காந்திக்கு திருப்தி ஏற்படவில்லை. நீண்டகால யோசனைக்குப் பிறகு, மங்கன் லால் போன்றவர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகு, ''சத்யாகிரகம்'' என்ற பெயரில் தனது போராட்ட முறையை அறிவித்தார்.

உங்களுடைய உண்மையே உங்களின் பலமான ஆயுதமாக இருக்கும். பலவீனர்களுக்குத்தான் ஆயுதம் தேவை. மனம், உடல் உறுதி இருப்பவர்கள் தங்களுடைய வலுவான சிந்தனையாலேயே மற்றவர்களைத் தோற்கடித்துவிட முடியும்.

காந்தி

பட மூலாதாரம், ROLI BOOKS

ரஸ்கின் எழுதிய ''Onto the Last'' படித்த பிறகு 1904 அக்டோபரில் ஃபீனிக்ஸ் ஆசிரமத்தை காந்தி நிறுவினார். 1909 ஜூன் 23ல் காந்திஜி இங்கிலாந்து சென்றார். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் நிலை பற்றி அறிவுஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு ஆங்கிலத்தில் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பயணத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.

ஆனால் இங்கிலாந்தில் பல புரட்சியாளர்களை அவர் சந்தித்து, இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் பற்றி கலந்துரையாடினார். திரும்பி வரும் பயணத்தின்போது ''இந்து சுயராஜ்யம்'' எனும் நூலை எழுதினார் அவர்.

1910 மே 30ல் தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிய பிறகு, டால்ஸ்டாய் பண்ணையை நிறுவினார். இந்த ஆசிரமங்களை உருவாக்கியதில் ரஸ்கின், டால்ஸ்டாய், தோரியூ ஆகியோரின் எழுத்துகளால் ஏற்பட்ட தாக்கம் முக்கிய பங்கு வகித்தது.

உண்மையில், இந்து சுயராஜ்யம் என்பது, டால்ஸ்டாயின் சிந்தனையின் நீட்சியாகத்தான் இருந்தது.

டால்ஸ்டாய் முன்வைத்த சாத்வீகமான எதிர்ப்பு என்பதைவிட, சத்யாகிரகம் என்பது தீவிர எதிர்ப்பு என்பதாக இருந்தது. இதை எரிக் எரிக்சன் மற்றும் சிக்மண்ட் பிராய்டு ஆகியோர் உளவியலாளர்கள், ''போர்த்திறன் கொண்ட அகிம்சை'' என்று கூறியுள்ளனர்.

சத்யாகிரகம் என்பது, நம்பிக்கையுடன் 'உண்மையை' சார்ந்து இருப்பது என அர்த்தமாகும். அகிம்சை வழி என்பது 'உண்மையின்' ஒரு பகுதி. ஏனெனில் வன்முறையில் உண்மையை மூடி மறைக்கும் வகையில் ஆயுதங்களின் ஆதிக்கம் இருக்கும். அந்த வகையில் கொள்கை அடிபட்டுப் போகும். ஆனால் நீங்கள் நம்பும் கொள்கையில் உண்மை இருக்குமானால், அதற்கு ஆயுதம் தேவைப்படாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :