மகாத்மா காந்தியின் மரணத்தை நேரில் பார்த்த 14 வயது மனு காந்தி

பட மூலாதாரம், DINODIA
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
1948 ஜனவரி 30ஆம் தேதி மாலை டெல்லியில் தாம் தங்கியிருந்த இந்தியத் தொழிலதிபரின் வீட்டில் இருந்து மகாத்மா காந்தி வெளியே வந்து, தோட்டத்தில் இருந்த வழிபாட்டுக் கூடத்துக்கு நடந்து சென்றார்.
அவருடைய பேத்தி உறவு முறையிலான மனு மற்றும் அபாவும் காந்தியுடன் சென்றனர்.
78 வயதான காந்தி வழிபாட்டுக் கூடத்தின் படிக்கட்டுகளில் ஏறியபோது, காக்கி உடை அணிந்த ஒருவர் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியே வந்து, மனுவை தள்ளிவிட்டு, கைத் துப்பாக்கியை எடுத்து காந்தியின் மார்பு மற்றும் வயிற்றில் மூன்று முறை சுட்டார்.
இந்துக் கடவுளின் பெயரைச் சொல்லியவாறே காந்தி சாய்ந்துவிட்டார். தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவராக, தன்னைக் கவனித்துக் கொண்ட, தன்னுடைய கடினமான காலத்தை, கொந்தளிப்பான இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளைப் பட்டியலிட்டு வைத்திருந்த பெண்மணியின் கைகளில் அவர் உயிரை விட்டார்.
ஓராண்டுக்கும் குறைவான காலத்துக்கு முன்னதாக, 1947 மே மாதம் தனக்கு முடிவு வரும் போது அருகில் ''சாட்சியாக'' இருக்க வேண்டும் என்று முன் உணர்வாக மனுவிடம் காந்தி கூறியிருந்தார்.
வெறும் 14 வயது மட்டுமே ஆகியிருந்த நிலையில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்காக மிகக் குறைந்த வயதில் சிறை சென்றவராக மனு இருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்திய காந்தியுடன் இருந்து போராடி, அவர் சிறை சென்று, சுமார் ஓராண்டு காலம் - 1943க்கும் 1944க்கும் இடைப்பட்ட காலத்தில் - சிறையில் இருந்தார்.
சிறையில் அவர் நாட்குறிப்பு எழுதவும் தொடங்கினார். அடுத்த நான்கு ஆண்டுகளில், அந்த பதின்வயது சிறைவாசி நல்ல எழுத்தாளராக மாறினார்.
மனு காந்தியின் குறிப்பேடுகளின் 12 தொகுப்புகள் இந்தியாவின் ஆவணக் காப்பகங்களில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. கோடிட்ட நோட்டுப் புத்தகங்களில், குஜராத்தி மொழியில், அவருடைய சொந்தக் கையெழுத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், DINODIA
காந்தியின் உரைகள் (காந்தி பேசும்போது மனு காந்தி எழுதியவை), கடிதங்கள் ஆகியவையும், அவருடைய ''ஆங்கிலப் பயிற்சிப் புத்தகமாகவும்'' அவை உள்ளன.
காந்திய சிந்தனையாளர் த்ரிதிப் சுஹ்ருத் என்பவர் இப்போது அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.
எப்போதும் தன்னுடனேயே வைத்திருந்த அந்தக் குறிப்பேடு, நாசகார துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி காந்தி நிலைகுலைந்து சரிந்தபோது, அவருடைய கையில் இருந்து கீழே விழுந்துவிட்டது.
அந்த நாளுக்குப் பிறகு, தன் வசம் ஆவணப்படுத்தும் குறிப்பேட்டை வைத்துக்கொள்வதை அவர் நிறுத்திவிட்டார். அதற்குப் பதிலாக, காந்தி குறித்து புத்தகங்கள் எழுதுவது மற்றும் உரைகள் ஆற்றுவதில் கழித்தார். தன்னுடைய 42வது வயதில் 1969ல் மரணம் அடையும் வரையில் அவற்றைத் தொடர்ந்தார் மனு காந்தி.
அவருடைய குறிப்பேடுகளின் முதலாவது தொகுப்பு, வயதுக்கு மிஞ்சிய அறிவுத் திறனையும், உன்னிப்பாக கவனிக்கும் தன்மையையும், அர்ப்பணிப்பு கொண்ட மற்றும் தினசரி செயல்பாடுகளைப் பதிவு செய்யும் வளரும் திறனாளராக இருந்தார் என்பதையும், சிறையில் இருந்தபோது ஒவ்வொரு நாளின் செயல்பாடுகளைக் கவனமாகப் பதிவு செய்யும் முனைப்பு கொண்டவராக இருந்தார் என்பதையும் காட்டுகிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
காந்தியின் மனைவி கஸ்தூர்பாவின் உடல் நலம் குன்றியபோது, ஓய்வின்றி கவனித்துக் கொண்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனுவின் ஆரம்ப கால குறிப்புகள், மகிழ்ச்சியை அனுபவிக்காத, கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்ததைக் காட்டுகின்றன.
காய்கறிகளை நறுக்குவது, உணவு தயாரிப்பது, கஸ்தூர்பாவுக்கு உடல் அழுத்தி விடுவது மற்றும் அவருடைய முடிக்கு எண்ணெய் தேய்த்து விடுவது, நூல் நூற்பது, வழிபாடு செய்வது, பாத்திரங்கள் கழுவுதல், குறிப்பிட்ட நாட்களில் அவருடைய எடையை கவனிப்பது போன்ற பணிகளை இடைவிடாமல் செய்து கொண்டிருந்தார்.

பட மூலாதாரம், Roli books
''ஆனால், மனு காந்தி, காந்தி, கஸ்தூர்பா காந்தி ஆகியோர் சிறையில் இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சிறைவாசிகள் என்ற வகையில் அவர்கள் தாமாக முன்வந்து சேவை செய்தனர். வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இறுக்கமானதாக இருக்கலாம். ஆனால் காந்தி பின்பற்றி வந்த ஆசிரம வாழ்க்கை முறையின் விதிகளையும் அவர் கற்றுக் கொண்டிருந்தார்,'' என்று டாக்டர் சுஹ்ருத் கூறினார்.
முறையான கல்வி பயிலாத மனு, காந்தியின் வழிகாட்டுதலில், ஆங்கிலம், இலக்கணம், வடிவியல் மற்றும் புவியியல் படித்தார். புராணங்களையும், இந்து சுவடிகளையும் அவர் படிக்கத் தொடங்கினார். உலக வரைபடப் புத்தகத்தைப் பார்த்து ''போர் (இரண்டாம் உலகப்போர்) எங்கு தொடங்கியது'' என்று அவர் கண்டறிந்தார். மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் பற்றியும் மனு காந்தி படித்திருக்கிறார்.
ஆனால் காந்தி மற்றும் அவருடைய சகாக்களுடன் சிறையில் இருந்த காலம், முழுமையாக திட்டமிடாத எதிர்காலத்தை நோக்கியதாக இருக்கவில்லை.
கிராமபோனில் மனு இசை கேட்டார். நீண்ட நேரம் நடைபயிற்சி சென்றார். காந்தியுடன் ``பிங் பாங்'' [டேபிள் டென்னிஸ்] விளையாடினார். கஸ்தூர்பாவுடன் கேரம் விளையாடினார். சாக்லெட் தயாரிக்க கற்றுக்கொண்டார்.
மாறுவேடப் போட்டிக்குத் தயாராவதைப் போல, காந்தியின் சகாக்கள் சிறையில் ரூஸ்வெல்ட், சர்ச்சில் மற்றும் மேடம் சியாங் கய்-ஷெக் போன்று ஆடைகள் அணிய முற்படுவது பற்றி மனு எழுதியிருக்கிறார். ''அதுபோன்ற சித்தரிப்புகள்'' பிடிக்காது என்பதால் அவற்றை காந்தி நிராகரித்துள்ளார்.
அந்தக் குறிப்பேடுகளில் துயரங்களும் நிறைந்துள்ளன. காந்தியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இரண்டு மரணங்கள் பற்றி அவர் எழுதியுள்ளார்: அவருக்கு நெருக்கமான நண்பராக இருந்த மகாதேவ் தேசாய், மற்றும் கஸ்தூர்பா மரணங்கள் பற்றி எழுதியுள்ளார்.
1944 பிப்ரவரியில் கஸ்தூர்பா மரணத்தை ஒட்டிய நாட்களில் இதயத்தை நெருடச் செய்யும் சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாள் இரவு தனக்கு அதிகமான வலி இருப்பதாகவும், ``இவை தான் தனது கடைசி மூச்சுகளாக இருக்கும்'' என்றும் கணவரிடம் கஸ்தூர்பா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், dinodia
''இறக்கலாம். ஆனால், அமைதியாக இந்த உலகைவிட்டு செல்ல வேண்டும்,'' என்று அவரிடம் காந்தி சொல்லியிருக்கிறார்.
குளிர் சூழ்ந்த மாலைப் பொழுது ஒன்றில் கணவரின் மடியில் தலை வைத்தபடி கஸ்தூர்பா மரணம் அடைந்தபோது, ``மனைவியை ஆசிர்வதிப்பதைப் போல, காந்தி தன் கண்களை மூடிக் கொண்டு மனைவியின் நெற்றியை தனது நெற்றியால் தொட்டார்.''
''அவர்கள் ஒன்றாக வாழ்நாளைக் கழித்தார்கள். இப்போது அவர் கடைசியாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தார். மனைவிக்கு பிரியாவிடை கொடுத்துக் கொண்டிருந்தார். கஸ்தூர்பாவின் நாடித் துடிப்பு நின்றுவிட்டது, இறுதி மூச்சு நின்றுவிட்டது,'' என்று மனு எழுதியுள்ளார்.
மனு இளம் வயது பெண்ணாக வளர்ந்த பின்பு, அவருடைய குறிப்புகள் நீண்டவையாக, அதிக சிந்தனை கொண்டவையாக இருந்தன. காந்தியின் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான, புரிந்து கொள்ள முடியாத பரிசோதனை பற்றி அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை - தன்னுடன் உறங்குமாறு மனுவை 1946ல் காந்தி கேட்டுக் கொண்டார் என்று வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர் ராமச்சந்திர குஹா கூறியது பற்றி தெளிவாக எதுவும் இல்லை. (13 வயதில் திருமணம் செய்து கொண்ட காந்தி, நான்கு குழந்தைகளுக்கு தந்தையான அவர், மனதளவில் துறவு பூணுவதாக 38வது வயதில் உறுதி எடுத்துக் கொண்டார்.)
அந்தப் பரிசோதனை இரண்டு வாரங்கள் நீடித்தது, பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபற்றி மனு காந்தி என்ன நினைத்தார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

நிறைவாக, வயதுக்கு மிஞ்சிய அளவில் ஊக்கமும், எதையும் தாங்கக் கூடியவராகவும், விரைந்து செயல்படுபவராகவும், உலகின் மிகவும் மரியாதைக்குரிய, பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரின் முன்னால் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துபவராகவும் இருந்திருக்கிறார் மனு காந்தி.
``காந்தியின் வாழ்வில் கடைசிக் கட்டத்தில் அவருடன் இருப்பது அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. நாட்கள் கடினமானவை ஆகிவிட்டன. அவருடைய மனைவியும், சகாக்களும் இறந்துவிட்டனர். மனுவை பொருத்த வரை, கடைசி காலத்தில் காந்தியைப் புரிந்து கொள்வதில் நாங்கள் நிறைய பணியாற்றினோம். அவர் காலவரிசைப்படி குறிப்பெடுப்பவர், ஆவணக் காப்பாளர் மற்றும் வரலாற்றாளர்,'' என்று டாக்டர் சுஹ்ருத் கூறியுள்ளார். இது முழுக்க உண்மைதான்.
``நான்தான் அவருடைய மிகப் பெரிய எதிரி என்று சர்ச்சில் கருத்து கொண்டிருக்கிறார்,'' என்று 1944ல் மனுவிடம் காந்தி கூறியுள்ளார். ``அவரால் என்ன செய்ய முடியும்? என்னை சிறைக்கு வெளியே அனுமதித்தால், நாட்டைக் கட்டுப்படுத்துவதும், மக்களை அடக்குவதும் சாத்தியமற்றது என்று அவர் நம்புகிறார். ஆனால், அப்போதும்கூட, நாட்டை அவர்களால் அடக்கியாள முடியாது. மக்களுக்கு நம்பிக்கை வந்துவிட்டால், அவர்கள் அதை மறந்துவிட மாட்டார்கள். என்னுடைய பணி அதிகமாக உள்ளது என்று கருதுகிறேன்.''
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ரத்தக் களரியில் ஏற்பட்ட பிரிவினையில், இந்தியா சுதந்திரம் பெற்றது.
பிற செய்திகள்:
- ரோமப் பேரரசு: எரிமலை சாம்பலில் கிடைத்த 2000 ஆண்டுகள் பழைய தேர்
- ’9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து முடிவு பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’
- மலேசியாவில் 32 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த பெண் குடும்பத்துடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்
- 'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












