ரோமப் பேரரசு வரலாறு: 2000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

An undated handout photo made available by the Press Office of the Archaeological Park of Pompeii shows a detail of what scientists presume to be a Pilentum, a four-wheeled ceremonial chariot

பட மூலாதாரம், Handout via EPA

படக்குறிப்பு, ஜனவரி மாதமே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் சனிக்கிழமைதான் இது அறிவிக்கப்பட்டது

இத்தாலியில் பண்டைய ரோமப் பேரரசு கால நகரமான பாம்பேய்க்கு அருகில் ஒரு விழாக் கால தேரைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

நான்கு சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் குதிரை லாயத்தில் இருந்துதான் கடந்த 2018-ம் ஆண்டு மூன்று குதிரைகளின் எச்சங்களை வெளியே எடுத்தார்கள்.

பண்டைய பாம்பேய் நகரின் வடக்கு எல்லையில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் நம்புகிறார்கள். இத்தேர் சிதையாமல், மிகச் சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது..

கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில் வெளிப்பட்ட எரிமலைக் குழம்பில் பாம்பேய் நகரம் மூழ்கிப் போனது. அப்பகுதி இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது.

அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. அது அங்கு வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டடங்களைப் பாதுகாத்து வருகிறது.

அந்தத் தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என அப்பூங்காவின் அறிக்கை விவரித்து இருக்கிறது.

An image of partially unearthed carriage

பட மூலாதாரம், Handout

கடந்த ஜனவரி 7-ம் தேதி இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறினர்.

தேரின் பலவீனமான தன்மையினால், அதை வெளியே எடுக்கும் பணி மிகவும் சிக்கலாக இருந்தது. ப்ளாஸ்டர் மோல்டிங் உட்பட, சில சிறப்பு முறைகளைப் பயன்படுத்தித்தான் தேர் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் வெளியே எடுக்கப்பட்டது.

சில குற்றவாளிகள், இந்த பாரம்பரியத் தளத்தில் சட்ட விரோத சுரங்கம் வழியாக அரிய பொருட்களைத் திருட முயற்சித்ததற்கு இடையில்தான் ஓர் உள்ளூர் வழக்குரைஞரின் உதவியோடு இந்த அகழ்வாய்வுத் திட்டமே மேற்கொள்ளப்பட்டது.

அசாதாரணமான கண்டுபிடிப்பு

Archeologists uncover an ancient ceremonial carriage in a dig near the ancient Roman city of Pompei

பட மூலாதாரம், Handout via Reuters

இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற பழங்கால பொருட்களிலேயே ஈடு இணையற்றது என அதிகாரிகள் இந்தத் தேரை வர்ணித்து இருக்கிறார்கள்.

"இது ஓர் அருமையான கண்டுபிடிப்பு, இந்த கண்டுபிடிப்பு பண்டைய உலகம் எப்படி இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள இந்த முன்னேற்றங்கள் உதவும்" என இத்தளத்தின் இயக்குநர் மசிமோ ஒசானா கூறினார்.

அத்தேரில் இருக்கும் சில அழகிய வேலைப்பாடுகள், அத்தேர் திருவிழா காலங்களில், பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிடுகிறது. இது திருமணம் போன்ற விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

"பண்டைய கால ஆதாரங்கள் குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, இந்தத் தேரை பெண் பூசாரிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. ஆனால் இந்தத் தேர் திருமணம் போன்ற சடங்குகளின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக் கூறை தவிர்க்க முடியாது" எனக் கூறினார்.

Close-up of design shows two figures

பட மூலாதாரம், Handout via Reuters

படக்குறிப்பு, புதுமணப்பெண்ணை இந்தத் தேரில் சுமந்துகொண்டு புகுந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.

"பாம்பேய் தொடர்ந்து நமக்கு வியப்பளித்துக் கொண்டே இருக்கிறது. இது இன்னும் பல ஆண்டுகளுக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். இன்னும் 20 ஹெக்டேர் நிலத்தில் தோண்டி எடுக்கப்பட வேண்டி இருக்கிறது," எனக் கூறினார் இத்தாலியின் கலாசார அமைச்சரான டரியோ ஃப்ரான்செஸ்செனி

இந்த பண்டைய கால நகரம், நேப்பிள்ஸில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தென் கிழக்கில் அமைந்திருக்கிறது. இந்த இடம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு, இந்நகரம் இத்தாலியிலேயே அதிகம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது கொரோனாவை முன்னிட்டு இந்த பாரம்பரிய நகரம் பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: