காந்தியின் 150வது பிறந்தநாளில் திருடப்பட்ட அவரது அஸ்தி - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
காந்தியின் அஸ்தியை அவரது 150-வது பிறந்தநாளில் சிலர் திருடியுள்ளதாக மத்திய பிரதேச மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்து சமூகத்தை சேர்ந்த கடும்போக்காளர் ஒருவரால் 1948-ஆம் ஆண்டு காந்தி கொல்லப்பட்டதில் இருந்து அவரது அஸ்தி வைக்கப்பட்டு இருந்த மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள அவரது நினைவகத்தில் இருந்து திருடப்பட்டுள்ளது.
மேலும் அங்கிருந்த காந்தியின் சுவரொட்டி புகைப்படங்களில் பச்சைநிற பெயிண்டால் ''துரோகி'' என்று திருடர்கள் கிறுக்கலாக எழுதியுள்ளனர்.
இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வலியுறுத்திய காந்தியை, இந்து சமூகத்தை சேர்ந்த சில கடும்போக்காளர்கள் துரோகியாக கருதுகின்றனர்.
காந்தி இந்து மதத்தை பின்பற்றி வந்தவர் என்றபோதிலும், காந்தி குறித்த அவர்களின் பார்வையில் மாற்றமில்லை.
இந்த செய்தியை பிபிசி இந்தி சேவையிடம் உறுதிபடுத்திய மத்தியப்பிரதேசத்தில் உள்ள ரேவா பகுதியை சேர்ந்த போலீசார், நாட்டின் ஒருங்கிணைப்புக்கு பாதகம் மற்றும் அமைதிக்கு குந்தகம் என்ற முறையில் நடந்த திருட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த பாபு பவன் நினைவகத்தில் பொறுப்பாளராக உள்ள மங்கள்தீப் திவாரி, நடந்த திருட்டு சம்பவம் 'மிகவும் அவமானகரமானது' என்று தெரிவித்தார்.

இந்திய வலைதள ஊடகமான தி வயரிடம் அவர் கூறுகையில், ''காந்தியின் பிறந்தநாள் என்பதால் அக்டோபர் 2-ஆம் தேதி காலையில் மிகவும் சீக்கிரமாக நினைவகத்தை திறந்தேன். பிறகு மாலை 5.30 மணிக்கு மீண்டும் நான் நினைவகத்துக்கு திரும்பியபோது, அவரது அஸ்தி திருடப்பட்டதையும், காந்தியின் சுவரொட்டி களங்கப்பட்டிருப்பதையும் கண்டறிந்தேன்'' என்று கூறினார்.
உள்ளூர் காங்கிரஸ் தலைவரான குர்மீத் சிங் புகார் செய்ததன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.
''இது மிகவும் முட்டாள்தனமான செயல், இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்'' என்று தி வயரிடம் தெரிவித்த குர்மீத் சிங், ''பாபு பவனில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை ரேவா போலீசார் சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறினார்.
அகிம்சை முறையில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காந்தி, உலகில் பலரையும் ஈர்த்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
பெரும்பாலான இந்தியர்கள் அவரை ''தேசத்தந்தை'' என்று அழைக்கின்றனர்.
ஆனால், 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு, பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்ததற்கும், இது தொடர்பான பல ரத்த படுகொலைகளுக்கு பிறகு முஸ்லிம்களை காந்தி ஆதரித்தார் என்று இந்து சமூகத்தை சேர்ந்த சில கடும்போக்காளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
1948-இல் காந்தி கொல்லப்பட்ட பிறகு, அவரது உடல் இந்து சமூக முறைப்படி தகனம் செய்யப்பட்டு, அவரின் அஸ்தி நாடு முழுவதும் பாபு பவன் உள்ளிட்ட பல நினைவகங்களுக்கு அனுப்பப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












