திருச்சி நகைக்கடை கொள்ளையில் சம்பந்தப்பட்டவர் பிடிபட்டாரா?

பட மூலாதாரம், UGC
திருவாரூர் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையின்போது பெரும் மதிப்பிலான நகைகளுடன் ஒருவர் பிடிபட்டுள்ளார். திருச்சி லலிதா ஜுவெல்லரியில் நடந்த மாபெரும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவராக இவர் இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள லலிதா ஜுவெல்லரி என்ற பிரபல நகைக் கடையில் கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியன்று நள்ளிரவில் சுவற்றைத் துளையிட்டு, கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். சுமார் இரண்டரை மணி நேரம் உள்ளே இருந்த அவர்கள், சுமார் 13 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 கிலோ தங்கம் மற்றும் 180 கேரட் வைர நகைகளை கொள்ளையடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.
தமிழ்நாட்டில் இந்த கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இரவு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கமலாம்பாள் நகர் என்ற இடத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர் தப்பி ஓடினார்.
மற்றொருவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் என தெரியவந்தது. அவரிடம் சுமார் ஐந்து கிலோ தங்க நகைகள் இருந்தன. இதையடுத்து மணிகண்டன் திருவாரூர் நகர் காவல்நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். தப்பி ஓடிய சுரேஷ், சீராத் தோப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்த நகைகளில் உள்ள பார் கோடுகளை வைத்து அவை திருச்சியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். திருவாரூர் நகரக் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தப்பி ஓடிய சுரேஷை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தனிப்படைக் காவல்துறையினர் தற்போது திருவாரூருக்கு விரைந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












