தருமபுரி நதியை மீட்கும் உத்தரப்பிரதேசப் பெண் புவிதம் மீனாட்சி #IamtheChange

காணொளிக் குறிப்பு, நான் ஏன் தருமபுரியில் இலவசப் பள்ளி நடத்துகிறேன்? - ஒரு உத்தரப் பிரதேச பெண்ணின் கதை
    • எழுதியவர், மு. நியாஸ் அகமது
    • பதவி, பிபிசி தமிழ்

(Be the Change என்றார் காந்தி. Iam the Change என்கிறார்கள் இவர்கள். ஒன்றுமற்ற ஒரு வெளியிலிருந்து சுயம்புவாக எழுந்து வந்து எல்லோருக்குமான உந்துதலாக மாறி நிற்கும் நம்பிக்கை மனுசிகளின் கதைகளை பிபிசி தமிழ் தொகுத்துள்ளது. அதன் முதல் அத்தியாயம் இது.)

சிறு வயதில் மீனாட்சிக்கு ஒரு கனவு இருந்தது. அது தன் பள்ளி குறித்த கனவு.

தான் படிக்கும் பள்ளி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு அது. வகுப்பறைகள் இருக்க கூடாது, விசாலமான நூலகம் இருக்க வேண்டும். விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும். பறவைகள் தமது வகுப்புத் தோழனாக இருக்க வேண்டும் என்ற கனவு அது.

ஆனால், அந்த கனவு அந்த வயதில் வெறும் கனவாகவே கடந்தது.

முப்பது ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் மீனாட்சி.

புவிதம் மீனாட்சியின் கதை

யார் இந்த மீனாட்சி?

உத்தரப்பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட மீனாட்சி ஒரு காந்தியவாதி. மாற்று கட்டட கலையின் முன்னோடிகளில் ஒருவரான லாரி பேக்கரின் மாணவி.

மும்பையில் கட்டடக் கலை பயின்ற இவருக்கு அங்கு நிலவிய நுகர்வு கலாசாரம் சலிப்பு தட்டியது. அந்த மாநகருடன் ஒட்ட முடியாமல் தவித்த இவர் தமிழகத்திற்கு பயணமாகிறார்.

சிறு வயது முதலே காந்தியத்தின் மீது பெரும் பற்று கொண்ட மீனாட்சி, சமூக பிரச்சனைகளுக்கு காந்திய வழி மட்டுமே தீர்வு என தீர்க்கமாக நம்பி இருக்கிறார்.

இந்தியா கிராமங்களின் தொகுப்பு. நாட்டின் வளர்ச்சி என்பது கிராமங்களின் மேம்பாட்டில் இருக்கிறது என்ற காந்தியின் கருத்தியலை முழுமையாக ஏற்று தருமபுரிக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறார்.

புவிதம் மீனாட்சி

தருமபுரியில் உள்ள நாகர்கூடல் எனும் பகுதியில் சிறியளவில் நிலம் வாங்கி இருக்கிறார்.

ஏன் தருமபுரியை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற நம் கேள்விக்கு, "கையில் குறைந்த அளவு பணமே இருந்தது. அந்த பணத்திற்கு இங்கு ஒரு வறண்ட பூமிதான் கிடைத்தது" என்கிறார்.

புவிதத்தின் கதை

அந்த வறண்ட பூமியில் முதலில் இயற்கை விவசாயம் செய்ய தொடங்கி இருக்கிறார். பின், இயற்கை விவசாயம் குறித்தும், கிராம மேம்பாடு குறித்து பிரசாரம் செய்ய தொடங்கி இருக்கிறார்.

அந்த சமயத்தில் மீண்டும் அவரது சிறு வயது கனவுக்கு சிறகு முளைத்திருக்கிறது.

அவர், "ஏன் நமது சிறு வயது கனவை இங்கு நிஜமாக்க கூடாது... அந்த கனவுக்கு ஏன் ஒரு வடிவம் கொடுக்கக் கூடாது என்று யோசித்தேன்? அந்தக் கனவுதான் புவிதம் பள்ளியாக உருவெடுத்திருக்கிறது" என்கிறார்.

புவிதம் எனும் இலவச பள்ளியை தொடங்கிய இவர், தமது சிறு வயதில் ஒரு பள்ளி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ? அதுபோலவே வடிவமைத்திருக்கிறார்.

உத்தர பிரதேசத்திலிருந்து வந்து தருமபுரியில் நதியை மீட்கும் ஒரு பெண்ணின் கதை

"புவி + இதம் = புவிதம். வழக்கமான பாடத்திட்டத்துடன் புவிக்கு இதமான வாழ்க்கை குறித்து நாங்கள் கற்பிக்கிறோம். புவி வெப்பமயமாதல் உச்சத்தை தொட்டிருக்கும் இந்த சூழலில் நுகர்வு குறைப்பு, இயற்கையுடம் இயைந்து வாழ்தல் இது குறித்த புரிதல்தான் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அது குறித்து மாணவர்களுடன் உரையாடுகிறோம்" என்கிறார்.

நாகாவதியின் கதை

விவசாயம், பள்ளி என்று மட்டுமல்லாமல் கிராம மேம்பாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறார் மீனாட்சி.

அதன் ஒரு பகுதியாக நாகாவதி நதி எனும் நதியை மீட்டெடுக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறார்.

Presentational grey line
Presentational grey line

"வறட்சி குறித்த புரிதல் நம்மைவிட கிராம மக்களுக்கு நன்றாகவே இருக்கிறது. அவர்களுக்கு தீர்வும் தெரிகிறது. ஆனால், தினசரி வாழ்வுக்கே போராட வேண்டிய சூழலில் தீர்வை நோக்கி பயணப்பட தயங்குகிறார்கள். அவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் திறணைக் கொண்டே நாகாவதி நதியை மீட்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம்" என்கிறார்.

மேலும் அவர், "நதியை மீட்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. நதியை மீட்கும் பணியின் மூலம் சமூக மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம். அதாவது... மாணவர்கள், கிராம மக்கள் என இந்த சமூகத்தின் அனைத்து தரப்பினருடனும் உரையாடி தனி மனிதர்களிடம் ஒரு மாற்றத்தை கொண்டு வர விரும்புகிறோம்" என்கிறார்.

Presentational grey line
Facebook பதிவை கடந்து செல்ல

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :