You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிகார், உ.பி.யில் கனமழை: பாட்னாவில் 80 சதவீத வீடுகளில் தண்ணீர் புகுந்தது - 100 பேர் பலி
பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் பெய்து வரும் கன மழை, மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு இவற்றால் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர். மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பிகாரின் பாட்னா நகரில் 80 சதவீத வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது.
வீடுகளில் மட்டுமல்லாமல், மருத்துவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அமைச்சர் மற்றும் அரசியல் தலைவர்கள் வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது.
இது பேரழிவு என்று பிகார் முதலைமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னா தெருக்களில் தேங்கியிருக்கும் தண்ணீரில் ஆட்கள் படகில் சென்று சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகளில் சிக்கியுள்ளனர். பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மக்கள் குடிநீரும், உணவும் இன்றி தவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பிகார் முழுவதும் பெருமழை பெய்து வந்தாலும், பாட்னா நகரில் கட்ந்த 48 நேரத்தில் பதிவாகிய மழை 10 வருடங்களில் இல்லாத அளவு என்று கூறப்படுகிறது.
வானிலை முன்னறிவிப்பு மையத்தின் கூற்றுப்படி அடுத்த 48 மணி நேரங்களில் பாட்னா உட்பட பிகாரின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பேரழிவு துறை மாநிலம் முழுவதற்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
கனமழையால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சமூக ஊடகங்களில் பாட்னா நகரில் வீதி எங்கும் தண்ணீர் சூழ்ந்துள்ளது போன்ற புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
பலர் பிகாரில் உள்ள மோசமான வடிகால் அமைப்பே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஞாயிறன்று பாட்னாவில் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் மார்பளவு தண்ணீரில் தனது ரிக்ஷாவை இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று பரவலாக பகிரப்பட்டது.
மேலும் பாட்னா நகரின் முக்கிய மருத்துவமனையில் பல வார்டுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது வீட்டு பால்கனியில் இருந்து குடைபிடித்துக் கொண்டு மழையைப் பார்ப்பது போன்ற புகைப்படம் ஒன்றும் சமூக ஊடகங்களில் வைரலானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்