சௌதியில் சுற்றுலா செல்ல வெளிநாட்டவர்களுக்கு அனுமதி - நீங்கள் எங்கெல்லாம் செல்லலாம்?

உலகின் 49 நாடுகளுக்கு விசா சேவைகளை அறிமுகப்படுத்துவதோடு முதல்முறையாக சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கவுள்ளது சௌதி அரேபிய அரசு. இனிமேல் பெண் பயணிகளுக்கு இருந்த கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிக நோக்கத்திற்காக செல்வோர், மெக்கா, மெதீனா ஆகிய இடங்களுக்கு புனிதப் பயணம் செல்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே சௌதி அரேபியா இதுவரை விசா வழங்கி வந்தது.

சௌதிக்கு பயணிக்கும் புதிய சுற்றுலா பயணிகள் பார்க்கக்கூடிய இடங்களுக்கான பட்டியல் இதோ.

அல் வஹ்பா எரிமலை பள்ளம்

தாய்ஃப் நகரத்தில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அல் வஹ்பா எரிமலைப் பள்ளம் ஒரு பாலைவனத்தின் மத்தியில் உள்ளது.

இந்த எரிமலைப் பள்ளம் 820 அடி ஆழமுடையது என்பதால், இதில் இறங்கி ஏறுவோருக்கும் பெரியதொரு சவால் நிறைந்த இடமாக உள்ளது. இதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகலாம். முகாமிட்டு சுற்றிப் பார்க்க பிரபலமான இடமாக இது மாறி வருகிறது.

முற்கால மடா-இன் சலே நகரம்

ரோம பேரரசோடு கிபி 106ம் ஆண்டு வரை இணைந்து இருந்தவரை முற்கால அரோபியாவிலும், ஜேர்டான் பள்ளத்தாக்கு முழுவதும் குடியேறிய மக்களை 'நேபேடியன்' மக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த மக்கள் வாழும் இரண்டாவது பெரிய நகர்தான் மடா-இன் சலே.

2008ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக மடா-இன் சலே சேர்க்கப்பட்டது.

வரலாற்று நகரான ஜித்தா மற்றும் மெக்காவின் நுழைவாயில்

வரலாற்று நகரான ஜித்தாவில் அமைந்துள்ள மொக்காவின் நுழைவாயில் யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இன்னொரு இடமாகும்.

இந்தியப் பெருங்கடலில் வணிகப் பாதையையும், மெக்கா புனிதப் பயணம் மேற்கொள்ளும் முஸ்லிம் யாத்திரிகர்களுக்கு நுழைவு முனையமாகவும் ஜித்தா 7ம் நூற்றாண்டில் உருவாகியது.

ரியாத்திலுள்ள மஸ்மாக் கோட்டை

சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் 1865ம் ஆண்டு கட்டப்பட்ட முதல் கோட்டைதான் மஸ்மாக். 37 ஆண்டுகளுக்கு பின்னர் நடந்த ஒரு நிகழ்வால் இது பிரபலமானது.

1902ம் ஆண்டு நாடு கடத்தப்பட்டிருந்த அப்துல்லாசிஸ் பின் அப்துல் ரஹ்மான் பின் ஃபய்சல் அல் சௌத், தனது முன்னோரின் சொந்த ஊரான ரியாத்துக்கு வந்து இந்த கோட்டையை கைப்பற்றினார்.

இங்கு வாழ்ந்துகொண்டு, அந்த பகுதியில் இருந்த பல அரசுகளை வென்று, பின்னர் படிப்படியாக அவற்றை ஒன்றிணைத்து இப்போதைய சௌதி அரேபியாவை அவர் உருவாக்கினார்.

அரசர் ஃபஹத்தின் நீரூற்று

உலகிலேயே மிகவும் உயரமான நீரூற்று இதுவென ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத்தின் நீரூற்று கூறப்படுகிறது. இதிலிருந்து 853 அடி வரை நீர் மேலேழுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவில் இதில் 500 விளக்குகளுக்கு மேலாக எரிந்து வண்ணக் கோலமாக காட்சியளிக்கிறது.

சௌதியின் மாலத்தீவு என்று அழைக்கப்படும்உம்லுஜ்

சௌதியின் செங்கடல் ஓரத்தில் அமைந்துள்ள மணற்பாங்கான உம்லுஜ் கடற்கரைகள் சௌதியின் மாலத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இங்கு கடற்கரையில் இருந்து கொண்டு மலைகளையும், கனல் வெளியிடாமல் அமைதியாக இருக்கும் எரிமலைகளையும் பார்க்கலாம். அருகில் மாந்தோப்புகள் காணப்படுகின்றன.

ஜூப்பா மற்றும் ஷுவேமிஸின் கற்கால கலை

வித்தியாசமான கற்பாங்கான நில அமைப்போடு ஓர் ஏரி இங்கு காணப்படுவதால், இந்த ஏரி அமைத்துள்ள பகுதி ஒரு காலத்தில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ ஏற்ற இடமாகத் திகழ்ந்தது என யுனெஸ்கோ தெரிவிக்கிறது.

கற்கால முன்னோர் இங்குள்ள பாறைகளில் பல வடிவிலான சித்திரங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :