You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செளதி அரசரின் மெய்க் காப்பாளர் நண்பரால் சுட்டுக் கொலை மற்றும் பிற செய்திகள்
செளதி அரசர் சல்மானின் மெய்க் காப்பாளர் `சொந்த பிரச்சனை` காரணமாக அவரது நண்பரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜென் அப்தெல் அசிஸ் ஃப்காம் என்னும் அந்த காப்பாளர் சனிக்கிழமை இரவு தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது சுடப்பட்டுள்ளார்.
அவருக்கும் மம்த-பின்-மேஷால்-அல்-அலி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு இருந்தது.
அலி போலீஸாரிடம் சரணடைய மறுத்துவிட்டதால் அவர் சுடப்பட்டார் என போலீஸார் தெரிவித்தனர்.
சுடப்பட்ட மெய்க் காப்பாளர் அசிஸ் ஃப்காம் காயங்கள் காரணமாக மருத்துவமையில் உயிரிழந்தார். அவருடன் ஏழு பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
ஜென் ஃப்காம் செளதி மக்களிடம் நன்கு அறியப்பட்டவர். அவர் அரசர் சல்மானுக்கு மிகவும் நெருக்கமானவர். நீண்ட நாட்களாக பணியில் இருந்த அவர் மறைந்த அரசரான அப்துல்லாவுக்கும் மெய்க் காப்பாளராக இருந்தவர்.
சமூக ஊடகங்களில் ஃப்காமை "ஹீரோ" என்றும் "காக்கும் தேவதை" என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
காஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஐ.நா பேச்சு
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேசியபின், அந்தப் பேச்சுக்களின் தாக்கம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எதிரொலிக்கிறது.
இம்ரான் கானின் பேச்சுக்கு பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அவருக்கு ஆதரவான மனநிலை அங்கு வாழும் மக்களிடையே உருவாகியுள்ளதை உணர முடிகிறது என்கிறார் காஷ்மீரில் உள்ள பிபிசி உருது சேவையின் செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூர்.
இம்ரான் கான் காஷ்மீர் குறித்துப் பேசிய விவகாரங்களுக்கு ஆதரவாக அங்கு பேரணிகளும் ஊர்வலங்களும் நடத்த நேற்று சனிக்கிழமை, காஷ்மீரின் பல இடங்களில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவற்றைத் தடுக்க பாதுகாப்பு படையினர் முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது. எனினும், இந்த மோதல்களில் பொதுமக்கள் யாருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்புகள் இல்லை.
காவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டவர்களில் எட்டு பேர் ராம்பனில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ராணுவ தளபதி
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க களமிறங்கியுள்ளார்.
தேசிய மக்கள் இயக்கம் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மகேஷ் சேனாநாயக்க களமிறங்குவதாக இன்று அறிவிக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி வரை இலங்கை ராணுவத்தின் 22ஆவது தளபதியாக ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க கடமையாற்றியிருந்தார்.
நாடு முழுவதும் இருக்கும் பல்வேறு துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்த இயக்கமாக தேசிய மக்கள் இயக்கம் அமைந்துள்ளது.
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்விலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
உணவு சமைக்க கஞ்சா, எரிமலை அடிவாரத்தில் வீடு
இத்தாலியின் சிசிலி தீவில் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சமையல் கலைஞர் ஒருவர், கஞ்சாவை வைத்து உணவுகளுக்கு புதிய சுவை ஊட்டுவது பற்றி தாம் ஆய்வுகள் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கார்மெலோ க்யாராமோன்தே எனும் 51 வயதாகும் அந்த பிரபல சமையல் கலைஞரின் வீட்டில் இருந்து இரண்டு பெரிய கஞ்சா செடிகள் மற்றும் இந்தியாவை பூர்விகமாக கொண்ட செடிகளில் இருந்து கிடைத்த ஒரு கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: எரிமலை அடிவாரத்தில் வீடு, கஞ்சாவை வைத்து சமையல்
காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
சரியாகக் கூறினால் இந்தக் கட்டுரையின் தலைப்பில் உள்ள கேள்வியில் 'உண்மையில்' என்ற வார்த்தை தேவையில்லைதான். ஆனால் சில நேரங்களில் நன்கு நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சிதைக்கப்படுகின்றன அல்லது நீர்த்துப் போகச் செய்யப்படுகின்றன. சிலரால் தாங்கள் விரும்பும் வகையில் வரலாற்றை உருவாக்க, அவை சிதைக்கப்படுகின்றன.
''முஸ்லிம் சமுதாயத்தில் இருந்த தீவிரவாதிகள் மற்றும் ஜிகாதிகளிடம் காந்திஜி சரணடைந்துவிட்டார். அதுகுறித்து ஆட்சேபங்கள் உள்ளன என்பது உண்மையாக இருந்தாலும் காந்திஜி மீது ஆர்.எஸ்.எஸ். மரியாதை வைத்திருந்தது,'' என்று ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) அமைப்பின் முன்னாள் தலைவர் கோல்வல்கர் காந்தி மீதான தங்கள் மரியாதையை ஒரு கட்டுரையில் நிரூபிக்க முயற்சி செய்துள்ளார்.
நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை பலரும் நிராகரித்துவிட்டனர். எனவே , ஆர்.எஸ்.எஸ். உடன் காந்திஜிக்கு இருந்த உறவை பரவலான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே தவிர, சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்-ன் இன்னொரு பிரதிநிதி கூறியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் உர்விஷ் கோத்தாரி எழுதிய இந்த கட்டுரையை மேலும் படிக்க:காந்திக்கு ஆர்.எஸ்.எஸ் உடன் உண்மையில் எப்படிப்பட்ட உறவு இருந்தது?
கோச்சடையான்ல நான் Nagesh-ஆ நடித்தது எப்படி? - Ramesh Kanna Interview
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்