You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி அமெரிக்க உடன்படிக்கை: இந்திய பொதுத் துறை நிறுவனமான பெட்ரோநெட் பங்குகள் வீழ்ச்சி
இன்று இந்திய செய்தித்தாள்களில் வெளியான முக்கியச் செய்திகள்.
மோதியின்அமெரிக்க உடன்படிக்கையால்பொதுத்துறை நிறுவனத்துக்கு சிக்கல் - தி இந்து (ஆங்கிலம்)
அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்கா சென்றிருந்தபோது இந்திய பொதுத் துறை நிறுவனமான பெட்ரோநெட்டுக்கும் அமெரிக்க இயற்கை எரிவாயு நிறுவனமான டெல்லூரியனுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய நிறுவனம் அமெரிக்க நிறுவனத்தில் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்வது தொடர்பானது இந்த ஒப்பந்தம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்திய நிறுவனமான பெட்ரோநெட்டின் பங்குகள் சரிந்துள்ளன என்று செய்தி வெளியிட்டுள்ளது தி இந்து ஆங்கில நாளிழதழ்.
ஆனால், இந்த விஷயத்தில் மோதி முன்னிலையில் முழுமையான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும், இரண்டாவது முறையாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்தான் கையெழுத்தானது என்றும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது தி இந்து. டெல்லூரியனில் 18 சதவீத பங்குகளை வாங்கும் வகையில் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் பிப்ரவரி மாதமே கையெழுத்தானது என்கிறது அந்த செய்தி.
எல்.என்.ஜி. இயற்கை எரிவாயுவின் விலை குறைவது, இந்தியாவில் எல்.என்.ஜி.,க்கு தேவை குறைவது, இந்திய சந்தையிலேயே கிடைக்கும் எல்.என்.ஜி. மற்றும் நீண்ட காலத்துக்கு கட்டுப்படுத்தும் ஒப்பந்தங்களால் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஆகிய காரணங்களால் பெட்ரோநெட்டின் இயக்குநர் குழு கவலை அடைந்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தை அந்த நிறுவனம் விரும்பவில்லை என்றும் அந்த செய்தி விவரிக்கிறது.
வெங்காய ஏற்றுமதிக்கு தடை - தினத்தந்தி
வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வியாபாரிகள் வெங்காயத்தை இருப்பு வைக்கவும் நாடு முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி.
வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனை ஆகிறது.
வெங்காயம் அதிகமாக விளையும், மராட்டியம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழை காரணமாக வெங்காயத்தை கொண்டு வருவதிலும் சிக்கல் எழுந்துள்ளதால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த மாதம் வியாபாரிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்தது என்று விவரிக்கிறது அச்செய்தி.
பிரதமர் நரேந்திர மோதி சென்னை வருகை - தினமணி
சென்னை ஐஐடி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி திங்கட்கிழமை சென்னைக்கு வருகிறார் என்கிறது தினமணி செய்தி.
சென்னை ஐஐடியின் 56ஆவது பட்டமளிப்பு விழா திங்களன்று நடைபெறுகிறது. அதேபோல் இந்தியா சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 என்ற நிகழ்ச்சியும் தரமணியில் உள்ள சென்னை ஐஐடி ஆராய்ச்ச்சிப் பூங்காவில் நடைபெற உள்ளது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்காக சென்னைக்கு திங்கட்கிழமை காலை வருகிறார் பிரதமர் நரேந்திர மோதி. விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வரும் அவர், பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார்.
முன்னதாக சென்னை ஐஐடி ஆராய்ச்சிப் பூங்காவில் நடைபெறும் இந்திய சிங்கப்பூர் ஹேக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் புதிய தொழில் தொடங்குபவர்களுக்கான கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று விவரிக்கிறது அச்செய்தி.
இ-சிகரெட்டுக்கு விதித்த தடை: மோதி விளக்கம் - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
புகையிலைக்கு அடிமையாதலுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோதி தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசியதாக தெரிவிக்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.
ஞாயிறன்று தனது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர் நிக்கோடினுக்கு அடிமையாவதை இளைஞர்கள் கைவிட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரசாரத்திற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இ-சிகரெட் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. அவற்றின் அபாயம் குறித்து பலரும் எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர். அவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் கூட இ-சிகரெட்கள் சில நேரங்களில் நமது வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன என மோதி தெரிவித்ததாக விவரிக்கிறது அந்த செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்