மோதி பிரதமர் ஆவதை சுஷ்மா ஸ்வராஜ் எதிர்த்தது ஏன்?

    • எழுதியவர், ரெஹான் ஃபஸல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

டிசம்பர் 2015ல் பிரதமர் நரேந்திர மோதி ஆப்கானிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பும் வழியில் லாகூரில் இறங்கி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் திருமணத்தில் அவருடைய வீட்டில் கலந்து கொள்ள முடிவு செய்தபோது, உலகே அவருடைய அரசியல் அணுகு முறையைப் பாராட்டியது.

ஆனால் அதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தது அவருடைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் என்பது சிலருக்கு மட்டுமே தெரியும்.

மால்டாவில் காமன்வெல்த் தலைவர்கள் சந்தித்தபோது, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு அருகில் சுஷ்மா ஸ்வராஜ் அமர்ந்திருந்தார்.

சுஷ்மாவுக்கு உருது மற்றும் பஞ்சாபி மொழியில் உள்ள புலமையைக் கண்டு அவருடைய ரசிகராக ஆனார் நவாஸ் ஷெரீப். அவருடன் அவருடைய மனைவி குல்சும், மகள் மர்யம் ஆகியோரும் மால்டா சென்றிருந்தனர்.

மறுநாள் தன் குடும்பத்தினரை சந்திக்க வர வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜுக்கு ஷெரீப் அழைப்பு விடுத்தார். டிசம்பர் 8 ஆம் தேதி சுஷ்மா இஸ்லாமாபாத் சென்றபோது, ஷெரீப் குடும்பத்தினருடன் நான்கு மணி நேரம் செலவழித்தார்.

சுஷ்மாவின் உருது மொழிப் புலமை பற்றி மீண்டும் நவாஸ் பாராட்டு தெரிவித்தார். தாம் பஞ்சாபி பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால், உருது மொழி புலமை அவ்வளவாக இல்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

நவாஸ் ஷெரீபின் தாயாரை சுஷ்மா சந்தித்தபோது அவர் கட்டியணைத்து, ``என்னுடைய நாட்டில் இருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள். இந்த உறவு நன்றாகத் தொடரும் என்று எனக்கு உத்தரவாதம் தர வேண்டும்'' என்று கூறினார்.

நவாஸ் ஷெரீபின் தாயார் அமிர்தசரஸ் மாவட்டம் கட்ரா பகுதியில் பிம் என்ற இடத்தில் பிறந்தவர். பாகிஸ்தான் இந்தியா பிரிவினைக்குப் பிறகு சொந்த ஊருக்கு தாம் சென்றது கிடையாது என்றும், அங்கிருந்து யாரும் வந்து தம்மை சந்தித்தது இல்லை என்றும் சுஷ்மாவிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தசரஸ் பற்றி இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தனர். அம்பாலாவில் இருந்த காலங்களில் சுஷ்மா அடிக்கடி அமிர்தசரஸ் செல்வது வழக்கம். பாகிஸ்தானில் இருந்து புறப்படுவதற்கு முன்பு நவாஸ் ஷெரீபின் மகள் மர்யத்தை அழைத்த சுஷ்மா, ``பாகிஸ்தானுடன் உறவை மேம்படுத்துவேன் என்று நான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டேன் என்று உனது பாட்டியிடம் சொல்ல வேண்டும்'' என கேட்டுக் கொண்டார்.

பிரதமர் பதவிக்கு மோதியை முன்னிறுத்த எதிர்ப்பு தெரிவித்தவர்

2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்து, அமைச்சரவையை உருவாக்குவது தொடர்பாக தனக்கு நெருக்கமான நண்பர் அருண் ஜேட்லியுடன் ஆலோசனைகள் மேற்கொண்டிருந்தபோது, முந்தைய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கருதவில்லை.

பல அரசியல் நிபுணர்களுடன், சுஷ்மாவுக்கு தனது அமைச்சரவையில் மோதி இடம் தருவாரா என்பதும் நிச்சயமாகத் தெரியவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. பிரதமர் பதவிக்கான போட்டியில் வெற்றி கிடைக்காமல் போன எல்.கே. அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர் சுஷ்மா என்பது முதலாவது விஷயம். அடுத்தது, அருண் ஜேட்லிக்கு எதிரான போட்டியில் இருந்தவர் சுஷ்மா என்பது நன்கறியப்பட்ட விஷயம்.

நரேந்திர மோதிக்கோ, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பிற்கோ அவர் நெருக்கமானவர் கிடையாது.

பிரதமர் பதவிக்கு நரேந்திர மோதியை முன்னிறுத்தலாம் என்று 2013ல் முதன்முதலில் பேச்சு எழுந்தபோது, எல்.கே. அத்வானியுடன் இணைந்து சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தார்.

2002 குஜராத் கலவரங்களுக்குப் பிறகும், அரச தர்மத்தைப் பின்பற்றுமாறு நரேந்திர மோதியை அடல் பிஹாரி வாஜ்பாய் கேட்டுக் கொண்ட போதும், அவருக்கு ஆதரவாக சுஷ்மா இருந்தார்.

மறுக்கப்பட்ட சீனியாரிட்டி

மோதி அமைச்சரவையில் அவருக்கு முக்கியமான இலாகாவான வெளியுறவுத் துறை அளிக்கப்பட்டது.

ஆனால் ஆட்சி நிர்வாக வரிசையில் ராஜ்நாத் சிங்கிற்கு அடுத்த நிலையில், மூன்றாவது இடத்தில் சுஷ்மா வைக்கப்பட்டார். அனுபவத்திலும், சீனியாரிட்டியிலும் சுஷ்மாவை விட ராஜ்நாத் சிங் இளையவர் என்றாலும் அவருக்கு அடுத்த நிலையிலேயே சுஷ்மா வைக்கப்பட்டார்.

நரேந்திர மோதியின் வெளியுறவுக் கொள்கையானது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலின் ஆலோசனைப் படி இருந்ததே தவிர சுஷ்மாவை சார்ந்ததாக இல்லை என்பதால், ஆரம்பத்தில் அவருடைய பதவிக்காலம் சிரமமாகவே இருந்தது.

அவர் `அமைதியான பாணியை' கடைபிடித்தார். வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஓராண்டை செலவழித்த சுஷ்மா, தனது வெற்றிக்கு என்ன காரணம் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ``ஊடகங்களில் இருந்து விலகி இருப்பதும், தரப்பட்ட பொறுப்பை செய்து கொண்டிருப்பதும் தான் அதற்குக் காரணம்'' என்று அவர் பதில் அளித்தார்.

25 வயதில் ஹரியானாவில் அமைச்சர்

பட்டு சேலைக்கு மேல், ஆண்களைப் போன்ற மேலாடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்த சுஷ்மா ஸ்வராஜ், ஐந்து அடி அல்லது அதற்குச் சற்று அதிகமான உயரம் தான் இருப்பார்.

ஆனால் அவருடைய அரசியல் ஆளுமை அதை மிஞ்சியதாக இருந்தது. 1977 ஆம் ஆண்டு, வெறும் 25 வயதில், ஹரியானாவில் தேவிலால் தலைமையிலான அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் சுஷ்மா.

வருங்காலத்தில் முன்னணி அரசியல்வாதிகளில் ஒருவராக வருவார் என்று யாருமே சிந்தித்துகூட பார்க்காத காலத்தில் அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1973 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது தொழிலை அவர் தொடங்கினார். அங்கு ஸ்வராஜ் கவுசலை சந்தித்தார். 1975ல் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

அப்போது தலைமறைவாக இருந்த சோஷலிஸத் தலைவர் ஜார்ஜ் பெர்னான்டஸ் வழக்கை அவர்கள் இருவரும் நடத்தினர்.

1990 ஆம் ஆண்டில் வி.பி. சிங் ஆட்சிக்கு வந்தபோது, சுஷ்மாவை மிசோரம் ஆளுநராக ஆக்கினார். அப்போதைய காலக்கட்டத்தில் இளவயதில் ஆளுநர் பொறுப்பை ஏற்றவராக சுஷ்மா இருந்தார்.

பெல்லாரி தொகுதியில் சோனியாவை எதிர்த்துப் போட்டி

1998 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியில் இருந்து போட்டியிட சோனியா காந்தி முடிவு செய்தபோது, அவருக்கு எதிராக சுஷ்மாவை பாஜக களமிறக்கியது. ஒருகட்டத்தில் ஒரு சார்பான தேர்தலைப் போல இருந்தது.

ஆனால் சுஷ்மாவின் பிரச்சார பாணியால் அது கடும் போட்டி என்ற சூழ்நிலையை உருவாக்கிவிட்டது. குறுகிய காலத்தில் கன்னட மொழியை கற்றுக் கொண்டதன் மூலம் பெல்லாரி வாக்காளர்களின் இதயங்களில் அவர் இடம் பிடித்துவிட்டார்.

ஆனால் 2004ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, சோனியா காந்தி நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்றால் தலையை மொட்டை அடித்துக் கொண்டு, வாழ்நாள் முழுக்க தரையில் படுத்து உறங்குவேன் என்று அறிவித்ததன் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

அவருடைய கருத்துக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் வெகு சீக்கிரத்தில் இந்தப் பகைமையை அவர் மறந்துவிட்டார். நாடாளுமன்ற வளாகத்தில் பல முறை சோனியாவின் கைகளைப் பிடித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

புகழ்மிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்

1998ல் அடல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராகப் பதவியேற்றபோது, அவருடைய அமைச்சரவையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக சுஷ்மா பொறுப்பேற்றார். டெல்லி முதல்வராகவும் அவர் சில காலம் இருந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் எல்.கே. அத்வானிக்கு பதிலாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக சுஷ்மா நியமிக்கப்பட்டார். ஆனால் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு, அதிகபட்ச புகழைப் பெற்றார். ராஜதந்திரத்துடன், அவருடைய மனிதாபிமானத்தையும் பதவிக் காலத்தில் காண முடிந்தது.

சௌதி அரேபியா, தெற்கு சூடான், இராக் மற்றும் உக்ரேன் போன்ற நாடுகளில் சிக்கித் தவித்த ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் பத்திரமாக இந்தியா திரும்பி வருவதற்கு அவர் உதவிகள் செய்துள்ளார்.

ஒரு பெண் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்ட நிலையில், அவருக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்கச் செய்து தேனிலவுப் பயணம் செல்ல உதவினார்.

டெல்லியில் இருந்து 6 வயதில் கடத்தப்பட்டு, வங்கதேசத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த 12 வயது குழந்தை சோனு தாயகம் திரும்புவதற்கு அவர் உதவி செய்துள்ளார்.

உலகெங்கும் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவருக்கு இருந்த ஆர்வத்தை வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை பாராட்டியுள்ளது. `அரசின் சூப்பர் அம்மா' என்றும் புகழ்ந்தது.

ஆனால் `இந்த சூப்பர் அம்மா'' கூட சில விஷயங்களில் உதவி செய்ய முடியாமல் போனது. பழுதான ரெப்ரிஜரேட்டரை ஒரு நிறுவனம் தனக்கு விற்பனை செய்துவிட்டதாக ஒருவர் ட்விட்டர் மூலம் சுஷ்மாவிடம் புகார் தெரிவித்த போது, ``சகோதரரே, ரெப்ரிஜரேட்டர் விஷயத்தில் உங்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாது. ஏனென்றால் பிரச்சினையில் உள்ள மக்களுக்கு உதவி செய்வதில் நான் பிசியாக இருக்கிறேன்'' என்று அவர் பதில் அளித்தார்.

வெகுஜன ராஜதந்திரத்தில் மாஸ்டர்

இந்திய அரசியலில் முதலில் ட்விட்டர் தளத்தை பயன்படுத்தியவர் நரேந்திர மோதி. தன்னுடைய அமைச்சர்கள் தங்களைப் பற்றி மதிப்பீடு செய்து கொள்வதற்கு, சமூக ஊடகங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று அவர் தெளிவாகக் கூறியுள்ளார்.

சுஷ்மா அதை தீவிரமாக எடுத்துக் கொண்டார். அதனால் தான் ட்விட்டரில் அவரை 86 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள் என்று தெரிகிறது.

ஆனால் நரேந்திர மோதியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பவர்கள், சிறிய விஷயங்களில் சுஷ்மா ஸ்வராஜ் செய்ய வேண்டிய விஷயங்கள் ஏதும் இல்லாத அளவுக்கு செயல்பாடுகள் இருந்தன என்று நம்புகிறார்கள்.

அதனால் தான் அவர் ட்விட்டரில் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் அணுகுமுறையை அவர் பயன்படுத்திக் கொண்டார் என்றும் தெரிகிறது.

லலித் மோடி குறித்த சர்ச்சை

இந்திய ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கிய லலித் மோடி, தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக பிரிட்டனில் இருந்து போர்ச்சுக்கல் செல்வதற்கு உதவிய போது சுஷ்மா ஸ்வராஜ் பற்றி சர்ச்சை எழுந்தது.

நிதி மோசடிகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் லலித் மோடி என்பதையும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அமலாக்கப் பிரிவு விசாரித்து வருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

லலித் மோடிக்கு பயண ஆவணங்களை அளிக்கலாமா என்று பிரிட்டன் அரசு கேட்டபோது, பிரிட்டன் அரசு அவ்வாறு செய்தால், அது இந்தியா பிரிட்டன் உறவுகளைப் பாதிக்காது என்று சுஷ்மா பதில் அளித்திருந்தார்.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. சுஷ்மா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

வாஜ்பாயி அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, எய்ட்ஸ் நோய் வராமல் தவிர்க்க கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவதைக் காட்டிலும் துறவு மேற்கொள்வதே நல்ல வழி என்று கூறியதற்காக கடும் கண்டனங்களுக்கு ஆளானார்.

ஆனால் அதேசமயத்தில், அரசியல் ரீதியில் எதிர்தரப்பில் இருந்த மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, அவரை இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் என்று அறிவித்தார். அதற்கு சாட்டர்ஜியின் கட்சிக்குள்ளேயே கூட விமர்சனங்கள் எழுந்தன.

சுரங்கத் தொழிலதிபர் ஜனார்த்தன ரெட்டியுடன் சுஷ்மா ஸ்வராஜ் நட்பு

கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதியைச் சேர்ந்த ரெட்டி சகோதரர்களுடன் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெல்லாரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்கு எதிராக பாஜக சார்பில் சுஷ்மா போட்டியிட்டார்.

அந்த சமயத்தில் ரெட்டி சகோதரர்கள் தங்களுடைய தொழிலில் வேகமாக வளர்ந்து வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் சுஷ்மா ஸ்வராஜுக்கு நெருக்கமானார்கள். பின்னர், கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக்கப்பட்டார்.

ரெட்டி சகோதரர்களின் தொழில் வேகமாக வளர்ந்தது. சுரங்கத் தொழிலில் பெரிய காண்ட்ராக்ட்கள் அவர்களுக்குக் கிடைத்தன. சுஷ்மா ஸ்வராஜ் உடன் இருந்த நெருக்கம் காரணமாகத்தான் ரெட்டி சகோதரர்கள் அரசியலிலும், தொழிலிலும் வேகமான வளர்ச்சி காண்கிறார்கள் என்று கூறப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கில் ரெட்டி சகோதரர்களை மத்தியப் புலனாய்வுக் குழு கைது செய்தபோது, சுஷ்மாவின் பெயர் மீண்டும் அடிபட்டது. அதுகுறித்து சுஷ்மா அறிக்கை வெளியிட வேண்டியதாயிற்று.

அந்த சமயத்தில், ``உண்மை வெளியாகும் போது எனக்கு நீதி கிடைக்கும். ரெட்டி சகோதரர்களுடன் வர்த்தக ரீதியில் எனக்கு எந்த வகையிலும் தொடர்பு கிடையாது'' என்று சுஷ்மா கூறியிருந்தார். இருந்தபோதிலும், ``ரெட்டி சகோரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் லட்சுமி பூஜையில் தாம் கலந்து கொள்வதாகவும்'' ஒப்புக்கொண்டிருந்தார்.

ராஜ்காட்டில் நடனம்

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பி.டி.பி. கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தியுடன் ஒருமுறை சுஷ்மாவுக்கு மோதல் ஏற்பட்டது. சுஷ்மாவின் கடைசி ட்விட்டர் பதிவும் காஷ்மீர் பற்றியதாகத்தான் உள்ளது.

இந்தச் சம்பவம் 2011 ஆம் ஆண்டில் நடைபெற்றது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதியை, அகமதாபாத்தில் சத்பாவன உப்வாஸ் மேற்கொண்டதற்காக சுஷ்மா பாராட்டினார். மோதியின் தீவிர அரசியல் எதிரியான மெஹபூபா முப்தியும் கூட, மோதியின் பணிகளைப் பாராட்டினார் என்றும் சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மெஹபூபா பாராட்டு தெரிவித்ததாக சுஷ்மா கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மெஹபூபா, தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் நடந்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார்.

2011 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி நினைவிடம் அருகே நடந்த ஒரு போராட்டத்தின் போது நடனம் ஆடியதால் சுஷ்மா சர்ச்சையில் சிக்கினார்.

அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தபோது, தனது ஆதரவாளர்களுக்குத் தார்மிக ரீதியில் உற்சாகம் தருவதற்காக தேசபக்திப் பாடல்களுக்கு தான் நடனம் ஆடியதாக அவர் பதில் அளித்தார்.

பகவத் கீதை தொடர்பான சர்ச்சை

பகவத் கீதையை `தேசிய நூலாக' அறிவிக்க வேண்டும் என்று கோரிய போது சுஷ்மா ஸ்வராஜ் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். அப்போதும்கூட காங்கிரஸ் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் அவருக்கு எதிராகக் குறிவைத்தன.

உண்மையில் விசுவ ஹிந்து பரிஷத்தின் அப்போதைய தலைவர் அசோக் சிங்கால் தான், பகவத் கீதையை `தேசிய நூலாக' அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சிங்காலின் கோரிக்கையை சுஷ்மா எடுத்துக் கூறினார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்த போது பிரதமர் நரேந்திர மோதி பகவத் கீதையை பரிசாக அளித்தபோது, பகவத் கீதைக்கு ஏற்கெனவே `தேசிய நூல்' என்ற அந்தஸ்து கிடைத்துவிட்டது என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியபோதும் சர்ச்சை எழுந்தது.

அற்புதமான சொற்பொழிவாளர்

பாஜகவில் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அடுத்தபடியாக நல்ல சொற்பொழிவாளர்களில் ஒருவராக சுஷ்மா ஸ்வராஜ் கருதப்பட்டார்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சம அளவு புலமை மிக்கவர் என்பதால், அவருடைய உரைகள் சிறப்பானவையாக இருக்கும்.

2016ல் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலுக்கு நீண்ட காலத்துக்கு முன்பாகவே, உடல்நிலை இடம் தராத காரணத்தால், அடுத்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.

தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினராவார் அல்லது ஒரு மாநில ஆளுநராக நியமிக்கப் படுவார் என்று எழுந்த ஊகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். பதவியில் இருந்து விலகிய சில நாட்களில், அரசு இல்லத்தில் இருந்து வெளியேறி, தனியாக வீட்டில் வசித்து வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: