You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நரேந்திர மோதி பேச்சு: "ஜம்மு காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க இந்த புதிய முறை உதவும்"
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலம் என்ற நிலையில் இருந்து, அதிகாரமற்ற இரண்டு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் இந்த உரையை நிகழ்த்தினார் அவர். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், லடாக் மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்து அவர் பேசத் தொடங்கினார்.
"ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் சகோதர சகோதரிகளின் பல உரிமைகள் மறுக்கப்படக் காரணமாக இருந்த, வளர்ச்சிக்குத் தடையாக இருந்த ஒரு ஏற்பாடு நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார் .
கனவு நிறைவேறியது
ஒரு நாடாக, ஒரு குடும்பமாக ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
சர்தார் வல்லபாய் பட்டேல், பாபாசாஹிப் அம்பேத்கர், ஜனசங்கத் தலைவர் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி, பாஜக வை சேர்ந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி ஆகியோரின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்றார் மோதி.
துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமை
இந்தியாவின் பல மாநிலங்களில் துப்புரவுத் தொழிலாளர்கள் உரிமையைக் காப்பதற்கு 'துப்புரவுத் தொழிலாளர் சட்டங்கள்' உள்ளன. ஆனால், ஜம்மு காஷ்மீர் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமை இல்லை. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமையைத் தடுக்க பல மாநிலங்களில் சட்டங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீரில் அது இல்லை என்று தெரிவித்தார் மோதி.
விவாதம் நடைபெறவில்லை
அரசமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 370 எப்படி ஜம்மு காஷ்மீர் மக்களை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்பது குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது. இந்த உறுப்புரை மக்களுக்கு எப்படிப் பலனளிக்கிறது என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
"மத்திய அரசின் ஆளுகையில் வைத்திருப்பதால் நல்லாட்சி நடக்கிறது"
ஜம்மு காஷ்மீரை சிறிது காலத்துக்கு மத்திய அரசின் நேரடி ஆளுகையில் வைத்திருப்பது என்பது யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதில் இருந்து மாநில நிர்வாகம் நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புகொண்டுள்ளது. இதனால், நல்லாட்சியின் விளைவுகளை களத்தில் பார்க்கலாம் என்றார் மோதி.
வளர்ச்சித் திட்டங்கள்
ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களின் கவலை, அனைத்து இந்திய மக்களின் கவலை. நாம் தனியாக இல்லை. பாரபட்சமின்றி, ஜம்மு காஷ்மீரிலும், லடாக்கிலும் வளர்ச்சித் திட்டங்கள் அமல்படுத்தப்படும். மத்திய அரசின் நடவடிக்கையால், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் இளைஞர்கள் பலனடைவார்கள். விளையாட்டுத்துறையில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார் மோதி.
"தமிழ் சினிமா படப்பிடிப்பு நடக்கும் - வேலைவாய்ப்பு பெருகும்"
இந்த முடிவால், காஷ்மீரில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பெருமளவில் நடக்கும். ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு பெருமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என்றும் கூறினார் மோதி.
பயங்கரவாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரை விடுவிக்க...
பயங்கரவாதத்தில் இருந்து ஜம்மு காஷ்மீரை விடுவிக்க இந்த புதிய முறை பயன்படும். உங்கள் பிரதிநிதிகளை நீங்கள்தான் தேர்ந்தெடுப்பீர்கள். அவர்கள் உங்களில் இருந்துதான் வருவார்கள் என்றும் கூறினார் மோதி.
நாடாளுமன்ற கூட்டத்தொடர்
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது, முத்தலாக் தடை மசோதா, என்ஐஏ மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த சூழலில் அவர் உரை நிகழ்த்துவது கவனம் பெறுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்