You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: "ஆழ்ந்த கவலையைத் தருகிறது"
இந்தியா நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆழ்ந்த கவலையைத் தருவதாகவும், இது மனித உரிமைச் சூழலை மேலும் மோசமாக்கும் என்றும் ஐ.நா. கருத்துத் தெரிவித்துள்ளது.
தொலைத் தொடர்பு முடக்கம், தான்தோன்றித் தனமாக அரசியல் தலைவர்களை காவலில் வைப்பது, அரசியல்ரீதியாக மக்கள் கூடுவதற்கு தடை விதிப்பது ஆகியவற்றைக்குறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்புரிமையை நீக்க இந்திய அரசு முடிவெடுத்த நிலையில் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் தமக்கான சட்டங்களை தாமே இயற்றிக்கொள்வதற்கான உரிமையைத் தந்துவந்தது. இந்தச் சட்டம் அளிக்கும் சிறப்புரிமைகளை நிபந்தனையாகக் கொண்டே ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தனி ராஜ்ஜியமாக செயல்பட்டுவந்த ஜம்மு காஷ்மீர் முழுமையும் தங்களுக்கே சொந்தம் என்று இந்தியாவும் சொல்கிறது, பாகிஸ்தானும் சொல்கிறது. ஆனால், இந்திய விடுதலைக்கு முன்பு டோக்ரா வம்சத்தை சேர்ந்தவரான மன்னர் ஹரிசிங்கின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியத்தின் ஒருபகுதி தற்போது இந்திய நிர்வாகத்தின் கீழும், மற்றொரு பகுதி பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழும் இருக்கின்றன.
ஐ.நா. என்ன சொல்லியிருக்கிறது?
காணொளியாக டிவிட்டரில் இடப்பட்டுள்ள தமது அறிக்கையில், "அதிகாரத்தில் இருப்பவர்கள் காஷ்மீரில் கருத்து மாறுபாட்டை தடுப்பதற்கு எப்படி அடிக்கடி தொலைத் தொடர்பை முடக்கிவந்துள்ளனர், நினைத்தபடி அரசியலில் மாறுபட்ட கருத்துடையவர்களை தண்டித்துவந்துள்ளனர், போராட்டங்களை கையாள்வதற்கு அளவுக்கு அதிகமான படைகள் எப்படிப் பயன்படுத்தப்பட்டுள்ளன,
அதன் மூலம் எப்படி சட்டவிரோதமான முறையில் கொலைகள் நிகழ்த்தப்பட்டன, மக்கள் காயமடைந்தார்கள் என்பது பழைய அறிக்கைகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகள், நிலைமையை வேறொரு அளவுக்கு கொண்டு சென்றுள்ளன" என்று ஐ.நா. செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
"முன்பு எப்போதும் பார்த்ததைவிடவும், தற்போதைய தொலைத் தொடர்புத் தடை மிக இறுக்கமானதாக இருக்கிறது " என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்