You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அத்திவரதர் வைபவம்: அதிகரிக்கும் கூட்டம் - காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் காட்சியளிக்கும் அத்திவரதரைக் காண வரும் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
காஞ்சிபுரத்தில் அடுத்த வாரம் முழுக்க விடுமுறையாக இருக்கும் வகையில் உள்ளூர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கம்.
1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அத்திவரதரை குளத்திலிருந்து வெளியில் எடுக்க முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி, 27ஆம் தேதி இரவு - 28ஆம் தேதி அதிகாலையில் அனந்தசரஸ் குளத்திலிருந்து அத்திவரதரின் சிலை வெளியில் எடுக்கப்பட்டது.
இதற்காக குளத்தில் இருந்த நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு, அருகில் இருந்த மற்றொரு குளத்தில் நிரப்பப்பட்டது.
அத்திவரதரைக் காண்பதற்காக பக்தர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், ஒன்றாம் தேதியிலிருந்துதான் அவரை தரிசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டது.
ஜூலை ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் வரதராஜப் பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக வைக்கப்பட்டார்.
குளத்திலிருந்து எடுக்கப்படும் அத்திவரதர் மொத்தம் 48 நாட்கள் பக்தர்களுக்குத் தரிசனம் தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும் 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சயன திருக்கோலத்திலேயே 31 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் நின்ற திருக்கோலத்தில் காட்சியளித்துவருகிறார்.
இந்த நிலையில், 38வது நாளான புதன்கிழமையன்று பெரும் எண்ணிக்கையில் அத்திவரதரைத் தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்தனர். கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் நேற்று காஞ்சிபுரத்தில் குவிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேற்று முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென மின் கசிவினால், வரிசைக்காகக் கட்டப்பட்டிருந்த மின் கம்பங்களில் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஐந்து பேர் காயமடைந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தின் பின்னணி என்ன?
தமிழ்நாட்டிலிருந்து மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தொடர்ந்து காஞ்சிபுரத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றனர்.
12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சாதாரண வரிசையில் நின்று அத்திவரதரை தரிசிக்க கிட்டத்தட்ட ஏழரை மணி நேரம் ஆகிறது.
பக்தர்கள் வரும் வாகனங்கள் நகருக்குள் அனுமதிக்கப்பட்டால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பல கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாகவே வாகனங்கள் நிறுத்தப்பட்டு, உள்ளூர் வாகனங்களில் ஏறிச்செல்லும்படி பக்தர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.
அத்திவரதரை காண அதிக அளவில் பக்தர்கள் குவிவதால், நிரந்தரமாக அத்திவரதரைக் காண ஏற்பாடு செய்ய வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இருந்தபோதும், வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி 12 மணியோடு தரிசனம் முடிவுக்குவருகிறது.
இன்னும் பத்து நாட்களே அத்திவரதரைக் காண முடியும் என்பதால், தினமும் அவரைக் காணவரும் கூட்டம் அதிகரித்துவருகிறது.
பக்தர்களுக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்வது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, பள்ளி, கல்லூரிகளில் உள்ள மைதானங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13, 14, 16 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்திவரதர்: 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கப்படுவது ஏன்?
ஏற்கனவே ஆகஸ்ட் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 12ஆம் தேதி பக்ரீத், 15ஆம் தேதி சுதந்திர தினம் ஆகியவற்றால் விடுமுறை என்பதால், அடுத்த வாரம் முழுவதுமே காஞ்சிபுரம் நகரத்தில் உள்ளூர் விடுமுறையாக இருக்கும்.
திருப்பதியில் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு லட்சம் பக்தர்களே வருவார்கள் எனும் நிலையில், காஞ்சிபுரத்தில் கடந்த சில நாட்களாக தினமும் இரண்டு லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்துசெல்கிறார்கள்.
கடைசி வாரம் என்பதால், அத்திவரதரைக் காணவரும் கூட்டத்தைச் சமாளிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வேயும் செங்கல்பட்டிலிருந்து கூடுதல் ரயில்களை இயக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
பிற செய்திகள்:
- நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்
- காஷ்மீர் முடக்கம் பற்றி ஐ.நா. கருத்து: "ஆழ்ந்த கவலையைத் தருகிறது"
- காஷ்மீர் முடக்கம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுப்பு
- காஷ்மீர்: உறவைத் துண்டிக்கும் பாகிஸ்தான்; வியப்பில்லை என்கிறது இந்தியா
- ”கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காக்க வேண்டும்” - சிக்கலில் ராகுல் டிராவிட்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்