அத்திவரதரைப் பார்க்க அலைமோதும் கூட்டம் - இன்று முதல் நின்ற திருக்கோலம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சியளிக்கும் அத்திவரதரின் திருவுருவம் இன்று முதல் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. இதனால், காலை முதல் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள அனந்த சரஸ் குளத்திலிருந்து ஜூன் 28ஆம் தேதி அதிகாலையில் வெளியில் எடுக்கப்பட்ட அத்தி மரத்தாலான திருவுருவம் ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்டது.

சயன திருக்கோலத்தில் வைக்கப்பட்டிருந்த அத்திவரதரைக் காண ஜூலை 1 முதல் ஜூலை 31ஆம் தேதிவரை சுமார் 33 லட்சம் பேர் வந்திருக்கலாம் என உத்தேசமான கணக்குகள் தெரிவிக்கின்றன. தமிழக ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்டவர்களும் வந்து அத்திவரதரைத் தரிசித்தனர்.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் விழாவின்போது 48 நாட்கள் அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். ஆகவே 24 நாட்கள் சயன திருக்கோலத்திலும், 24 நாட்கள் நின்ற திருக்கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பது வழக்கம்.

ஆனால், அத்தி வரதரின் திருவுருவம் பல நூறு ஆண்டுகளாக நீருக்குள் வைக்கப்பட்டிருந்தது என்பதால், திருவுருவத்தின் பாதுகாப்புக் கருதி இந்த முறை பதினெட்டு நாட்கள் மட்டுமே நின்ற திருக்கோலத்தில் வைக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.

சயன திருக்கோலத்தில் உள்ள அத்திவரதரை நின்ற திருக்கோலத்திற்கு மாற்ற வசதியாக புதன்கிழமை நண்பகல் 12 மணியோடு தர்மதரிசனத்திற்கு ஆட்கள் அனுமதிக்கப்படவில்லை. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் முக்கியப் பிரமுகர்களுக்கான தரிசனமும் நிறுத்தப்பட்டது. மாலை ஐந்து மணியோடு, ஒட்டுமொத்தமாக தரிசனம் நிறுத்தப்பட்டது.

சயன திருக்கோலத்தில் தரிசிப்பதற்கு நேற்றுதான் கடைசி நாள் என்பதால், சில கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்றனர். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் அத்தி வரதரை தரிசித்தனர்.

இந்த நிலையில், அத்திவரதரை நின்ற திருக்கோலத்தில் தரிசிக்க பக்தர்கள் அதிகாலை முதலே பெரும் எண்ணிக்கையில் காத்திருந்தனர். காலை சுமார் ஐந்தரை மணி முதல் அத்திவரதரைக் காண பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அத்திவரதரை இதுவரை காணாதவர்கள் மட்டுமல்லாமல், ஏற்கனவே அத்திவரதரை சயன திருக்கோலத்தில் தரிசித்தவர்களும் வரலாம் என்பதால், பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

ஏற்கனவே ஒரு நாளைக்கு சராசரியாக 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். ஜூலை 18ஆம் தேதி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்த நிலையில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருக்கிறது. சுமார் 7 ஆயிரத்து ஐந்நூறு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :