You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அத்திவரதர் தரிசனத்துக்கு சென்ற பக்தர் கூட்டத்தில் நெரிசல்; காஞ்சிபுரத்தில் 4 பேர் பலி
காஞ்சிபுரத்தில் அத்திவரதரை காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியாயினர். மேலும், மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை கோயில் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களின் பார்வைக்காக சிலை வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர்.
கடந்த 17 நாட்களில் இருபது லட்சத்துக்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. நேற்றைய தினம் (புதன்கிழமை) சந்திரகிரகணம் என்பதால் கடந்த இரு தினங்களாகவே கோயிலுக்கு குறைவான கூட்டமே வந்திருந்தது.
காலையிலே திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்
இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கோயிலில் திரள ஆரம்பித்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசார் பாதுகாப்பு இருக்கவில்லை என்கிறார் களத்தில் இருந்த பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் முரளிதரன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " இன்றைய தினம் பக்தர்களின் கூட்டம் அளவுக்கதிமாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. மேலும், பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை" என்றார்.
மயங்கி விழுந்த போலீசார்
"கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இரு போலீசார் மயங்கி விழுந்தனர்.
ஆவடியை சேர்ந்த ஜெயந்தி, ஆந்திரா குண்டூரை சேர்ந்த நாராயணி, சேலத்தை சேர்ந்த ஆனந்தி ஆகியோர் மயங்கி விழுந்தவுடன் 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்," என்கிறார் முரளிதரன்.
பிபிசியிடம் பேசிய காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி நான்கு பேர் இறந்திருப்பதை உறுதிப்படுத்தினார்.
செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களின் நிலை என்ன?
"மயங்கி விழுந்த சில பக்தர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவர்களுடைய நிலை என்னவென்று தெரியவில்லை." என்கிறார் முரளிதரன். அளவுக்கதிமான கூட்டம் இருந்த நிலையில், போதிய முன்னேற்பாடு இல்லாததால், நிலைமை கைமீறி விட்டதாக குறிப்பிடுகிறார் முரளிதரன்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்