You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கர்நாடக சட்டப் பேரவை ஒத்திவைப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கும்
கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லாத சூழல் உருவாகியுள்ள நிலையில், சட்டப் பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.
அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஆனால், பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பா நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஒரே நாளில் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
நம்பிக்கை வாக்கெடுப்பை வியாழக்கிழமையே நடத்தி முடிக்கும்படி கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா-வும் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கேட்டு கொண்டுள்ளார்.
அந்த கடிதத்தில், ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையிலும், நாடாளுமன்ற நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் இன்றைய நாள் இறுதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைமுறையை சபாநாயகர் நடத்த முயற்சிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
ஆனால், மாயமான எம்.எல்.ஏ. சிரீமந்த் பாடில் புகைப்படத்தை ஏந்தியபடி காங்கிரஸ் உறுப்பினர்கள் பாஜகவை எதிர்த்து முழக்கம் எழுப்பினர். இது தொடர்பாக காரசாரமான விவாதம் நடந்துவந்தது. இந்நிலையில், அவை நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. வாக்கெடுப்பு நாளை நடக்கும்.
முதல்வர் குமாராமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
தற்போதைய நிலையில், 224 எம்எல்ஏக்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மஜத (37), காங்கிரஸ் (78), பகுஜன் சமாஜ் (1), சுயேச்சைகள் ( 2) கூட்டணியின் பலம் 118 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு 113 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், பாஜகவின் பலம் 105 ஆக உள்ளது.
முன்னதாக, கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பாஜக-வுக்கு சாதகம் அளிக்கும் வகையில் பதவி விலகல் கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ்குமாருக்கு அனுப்பினர்.
முதல்வர் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முன்னாள் முதல்வரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான சித்தராமையா, கட்சித்தாவல் தடை சட்டம் குறித்து பேசினார்.
''ஒரு கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தபோது, அவர்களை கட்சியின் ஓர் அங்கமாக கருதாமல் எப்படி தனிநபர்களாக கருதமுடியும்?'' என்று சித்தராமையா வினவினார்.
இன்று ஒரு நாளில் இது குறித்து முடிவுசெய்துவிடமுடியாது என்று சித்தராமையா மேலும் கூறினார்.
சித்தராமையாவின் கருத்துக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் பலர் கருத்து தெரிவித்தனர். அவர் உண்மைக்கு மாறாக பேசுகிறார் என்று குரல் எழுப்பினர்.
கர்நாடக சட்டப்பேரவை தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், ''சட்டப்பேரவைக்கு வரவேண்டாம் என்று ஒரு உறுப்பினர் விரும்பினால், அவர்கள் சட்டமன்ற கையேட்டில் கையெழுத்திட சட்டமன்ற பணியாளர்கள் அனுமதிக்கமாட்டர்'' என்று பேசினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். அரசியலமைப்பு சட்டத்தின்படி முடிவெடுக்க எனக்குள்ள உரிமையை நான் பயன்படுத்துவேன் என்று அவர் கூறினார்.
தற்போது உணவு இடைவேளைக்காக சட்டமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் 3 மணிக்கு நம்பிகையில்லா தீர்மானம் மீது விவாதம் தொடங்குகிறது.
ஆரம்பத்தில் இந்த விவாதத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, ''எனக்கும், என் அமைச்சர்களுக்கும் சுயமரியாதை உண்டு. இந்த அரசை நிலைகுலைய வைக்கும் முயற்சியில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவாக வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
- மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம்
- தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
- ‘’மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’’ - அப்போலோ 11-வால் நமக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
- அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்