You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீர்: உறவைத் துண்டிக்கும் பாகிஸ்தான்; வியப்பில்லை என்கிறது இந்தியா
இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீருக்கு இருந்த சிறப்புரிமைகளை பறிக்கவும், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்தியா முடிவெடுத்த நிலையில் அதற்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினையாற்றியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது..
இதையடுத்து அணு ஆயுத வல்லமை மிக்க இரு அண்டை நாடுகளின் உறவில் சிக்கல் தீவிரமடைந்துள்ளது.
இனி இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை முற்றாகத் துண்டிப்பதும், தூதரக உறவைக் குறைப்பதும் அதில் சில.
இதனிடையே பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றுவதுடன், இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள தமது தூதரையும் அது திரும்ப அழைக்கிறது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக நடந்த காஷ்மீர் தொடர்பான நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக் குழு புதன்கிழமை கூடியது. "இந்தியா தன்னிச்சையாக , சட்ட விரோதமாக எடுத்த முடிவால் எழுந்துள்ள நிலைமை, இந்திய நிர்வாகத்திலுள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியின் நிலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது" என்று பாகிஸ்தான் தரப்பு கூறியுள்ளது.
அந்தக் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக மிக முக்கியமான 5 முடிவுகள் எடுக்கப்பட்டன.
5 முடிவுகள்
1. இந்தியாவோடு இருக்கும் தூதரக உறவுகளை குறைப்பது.
2. இந்தியாவுடன் இருதரப்பு வர்த்தகத்தை துண்டிப்பது.
3. இருதரப்பு உறவு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வது.
4. பாதுகாப்பு கவுன்சில் உள்பட ஐக்கிய நாடுகள் அவைக்கு இந்த பிரச்சனையை கொண்டு செல்வது.
5. பாகிஸ்தானின் சுதந்திர நாளான ஆகஸ்ட் 14-ஐ காஷ்மீர் மக்களின் வீரத்திற்கும், சுயாட்சி உரிமைக்கான அவர்களின் நியாயமான போராட்டத்திற்குமான ஆதரவு தெரிவிக்கும் நாளாகக் கடைபிடிப்பது மற்றும் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஐ கறுப்பு நாளாக கடைபிடிப்பது.
ஆகியவையே அந்த ஐந்து முடிவுகள்.
இந்தியா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை - அமெரிக்கா
இதனிடையே "ஊடகங்களில் வெளியாவதைப் போல ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை அகற்றுவதற்கு முன்பாக இந்தியா எங்களிடம் தகவல் சொல்லவும் இல்லை, கலந்தாலோசிக்கவும் இல்லை" என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பிரிவு தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு பதில்
பாகிஸ்தான் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பான இன்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய அரசு, "இந்தியாவுடனான உறவுகளை துண்டித்தது தொடர்பாக பாகிஸ்தான் கூறும் காரணங்கள் களத்தில் நிலவும் சூழ்நிலையுடன் பொருந்தவில்லை. இருதரப்பு உறவுகள் அபாய நிலையில் உள்ளது என்ற பிம்பத்தை உருவாக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஜம்மு & காஷ்மீருக்கு தற்காலிகமாக கொடுக்கப்பட்டிருந்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை நீட்டிப்பதற்கான அரசு சமீபத்திய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இது வளர்ச்சி மட்டுமின்றி ஜம்மு & காஷ்மீரில் நிலவும் பாலின மற்றும் பொருளாதார ரீதியிலான பாகுபாடு போன்றவற்றை ஒழிப்பதுடன், அனைத்து விதத்திலும் ஜம்மு & காஷ்மீரின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சிக்கு வித்திடும் இதுபோன்ற நடவடிக்கைகளை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் பாகிஸ்தான் எதிர்ப்பதில் எவ்வித வியப்பும் இல்லை என்றும் அரசியல் சட்டப்பிரிவு 370இல் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று என்றும் அதில் தலையிடும் பாகிஸ்தானின் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இருதரப்பு உறவுகள் தொடர்பான நேற்று பாகிஸ்தானின் அறிவித்துள்ள முடிவுகள் குறித்து இந்திய அரசு வருந்துகிறது. இருநாடுகளுக்கிடையேயான தொடர்பாடலை இயல்பாக நிர்வகிக்கும் வகையில், இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்