You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஷ்மீரில் இருந்து பிரிவதால் லடாக்கிற்கு என்ன கிடைக்கும்?
- எழுதியவர், த்வாங் ரிக்ஸின்,
- பதவி, லேவில் இருந்து, பிபிசிக்காக
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் 370வது பிரிவை நீக்கி மாநிலத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும். ஜம்மு காஷ்மீருக்கு சட்டமன்றம் இருக்கும். லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் இருக்காது.
மத்திய அரசின் இந்த முடிவு லே-லடாக்கில் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. தலைவர்களும் மத அமைப்புகளும் இதை வரவேற்கின்றன.
உண்மையில், லடாக்கில் இந்த மாற்றம் தேவை என்று பல ஆண்டுகளாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1989ஆம் ஆண்டில், லடாக்கை தனி மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று கோரி இயக்கமும் நடத்தப்பட்டது. அந்த போராட்டமானது, லடாக்கிற்கு என தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலை உருவாக்க இது வழிவகுத்தது.
நிச்சயமாக, சமீபத்திய மத்திய அரசின் முடிவு இங்கே வரவேற்கப்படுகிறது. ஆனால் இங்கு சட்டமன்றமும் தேவை என்றும் கோரப்படுகிறது.
கார்கிலின் தாக்கம்
சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கை மாற்றுவது சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்று மக்கள் பரவலாக நம்புகிறார்கள்.
லேவில் உள்ள அனைவருமே யூனியன் பிரதேசமாக மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறார்கள். ஆனால் இந்த முடிவு தொடர்பாக கார்கிலில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்பது போன்ற தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன.
லேவின் மக்கள் தொகையில் 15-20 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர். இங்குள்ள மக்களில் பெரும்பாலோர் பெளத்த மதத்தை சேர்ந்தவர்கள்.
அதுவே, கார்கில் ஒரு முஸ்லிம் பெரும்பான்மை நிறைந்த பகுதி என்பதோடு குறைந்த எண்ணிக்கையிலான பெளத்தர்கள் உள்ளனர்.
லேவை யூனியன் பிரதேசமாக்க இயக்கம் நடந்தபோது சிலர் அதற்கு ஆதரவாக இல்லை.
அங்கிருக்கும் தலைவர்கள் இன்னமும் வெளிப்படையான கருத்துகளை சொல்லவில்லை. ஓரிரு நாட்களில் அவர்கள் கருத்து வெளியாகலாம் என்று நம்பப்படுகிறது.
மக்களின் கவலை என்ன?
லடாக்குக்கு சட்டமன்றம் கிடைத்தால், அது சட்டசபையாக இருந்தாலும், மேலவையாக இருந்தாலும் சரி, அது தங்கள் நலன்களைப் பாதுகாக்க முடியும் என்று சிலர் கூறுகிறார்கள்.
லடாக்கிற்கு என சொந்த கலாசார அடையாளம் இருப்பதோடு, அதன் புவியியல், பிற இடங்களைவிட அடிப்படையிலும் வேறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்று ரீதியாக, இது 900 ஆண்டுகளுக்கும் மேலாக சுயாதீன அடையாளத்துடன் கூடிய பகுதியாக இருந்திருக்கிறது லடாக்.
இந்த நிலையில், இதுபோன்ற பல விஷயங்களை கருத்தில் கொண்டுதான் அங்கு விதிமுறைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
லடாக்கில் என்ன மாற்றம் ஏற்படும்?
இதுவரை ஜம்மு மற்றும் காஷ்மீரைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த மாநிலத்தின் 68 சதவிகித பகுதி லடாக்கை சேர்ந்தது.
யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு, லடாக்கிற்கு தனி அங்கீகாரம் கிடைக்கும். இது இந்தியாவின் வரைபடத்தில் தனி இடத்தை பிடிக்கும்.
மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், இங்குள்ளவர்கள் முக்கியமான வேலைகளுக்காக வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இப்போது வரை, எந்தவொரு சிறிய வேலையும் செய்ய வேண்டுமானால், ஜம்மு அல்லது ஸ்ரீநகருக்கு செல்ல வேண்டியிருந்தது.
இப்போது வெளியில் இருந்து மக்கள் இங்கு வந்து நிலம் வாங்கலாம் என்று வேண்டுமானால் மக்களுக்கு சிறிது அச்சம் ஏற்படலாம்.
ஆனால் ஜம்மு மக்கள் ஏற்கனவே இங்கு நிலம் வாங்கலாம் என்பதும் ஒரு உண்மை. அப்படி இருந்த நிலையிலும் இங்கு நிலம் அதிகம் விற்கப்படவில்லை.
இப்போது நிறைய பேர் வருவார்கள், இங்கே நிலம் வாங்கி ஹோட்டல் கட்டுவார்கள்.
இதேபோன்ற கவலைகளை தீர்ப்பதற்கு, சட்டமன்றம் அல்லது சட்ட மேலவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
அப்போது தான், லடாக் மக்கள் தங்களுக்கென சொந்த சட்டங்களை உருவாக்கி தங்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்