You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா' மற்றும் பிற செய்திகள்
தனது அணுஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் டாலர்களை (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14,000 கோடி) வடகொரியா பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டாலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதை பிபிசிக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களில் தனது நான்காவது ஏவுகணை சோதனையை நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. அப்போது இரண்டு ஏவுகணைகள் விண்ணில் ஏவப்பட்டன.
தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டு இராணுவ பயிற்சிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த சோதனையை நடத்தியுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருநாடுகளின் கூட்டு ராணுவ பயிற்சி, பிராந்தியத்தின் அமைதி உடன்படிக்கைகளுக்கு எதிரானது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுஷ்மா ஸ்வராஜ் காலமானார்
இந்தியாவின் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு காலமானார்.
உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
அவர் கடைசியாக பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில், "நன்றி பிரதமர். மிகவும் நன்றி. என் வாழ்நாளில் இந்த நாளுக்காகதான் காத்திருந்தேன்" என்று காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார்.
கருணாநிதி கோபாலபுரம் இல்லம்: இப்போது எப்படி இருக்கிறது?
கோபாலபுரம் நான்காவது தெருவின் கடைசியில் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு. ஓடு பாவிய போர்டிகோவுடன்கூடிய பழங்கால வீடு. வாயிலில் இப்போதும் இரு காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால், பழைய பரபரப்பும் களையும் இல்லை.
பராசக்தி, பணம், திரும்பிப் பார், மனோகரா, மலைக்கள்ளன் என மு. கருணாநிதி தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த ஐம்பதுகளின் மத்தியில் - 1955ல் - இந்த வீட்டை சரபேஸ்வரய்யர் என்பவரிடமிருந்து வாங்கினார் மு. கருணாநிதி.
அப்போதிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கடைசியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும்வரை, அங்கிருந்துதான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தை இயக்கிவந்தார் அவர்.
விரிவாக படிக்க:கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் இப்போது எப்படி இருக்கிறது?
காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. தீர்மானங்களின் நிலை இனி என்னவாகும்?
காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35 ஏ பிரிவுகளில் இந்தியாவின் ஆளும் பாஜக அரசு மாற்றம் கொண்டுவந்துள்ள நிலையில், நிறைய சட்டபூர்வ கேள்விகள் எழுந்துள்ளன.
காஷ்மீரின் பகுதியளவு தன்னாட்சி அந்தஸ்தை ரத்து செய்வதாக திங்கள்கிழமை இந்திய அரசு அறிவித்தது. காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் அரசியல் ரீதியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், ஜம்மு காஷ்மீரின் இப்போதைய சட்டபூர்வ அந்தஸ்து இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
காஷ்மீரில் நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினையில் மேலும் சட்ட சிக்கலை உருவாக்குவதாக இந்த நடவடிக்கை இருக்கும் என்று பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல் சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.
விரிவாக படிக்க:காஷ்மீர் விவகாரம்: ஐ.நா. தீர்மானங்கள் இனி என்னவாகும்?
நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்
2016ல் இந்தியில் வெளிவந்த 'பிங்க்' திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரீ-மேக். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய எச். வினோத் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் அஜித் குமார் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியானதிலிருந்தே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்தது.
மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா)ஆகிய மூவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டிற்கு அருகில் புதிதாகக் குடிவருகிறார் வழக்கறிஞரான பரத் சுந்தரம் (அஜித்).
விரிவாக படிக்க:நேர்கொண்ட பார்வை: சினிமா விமர்சனம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்