You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கருணாநிதி கோபாலபுரம் இல்லம்: இப்போது எப்படி இருக்கிறது?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
(ஐந்து முறை முதல்வராக இருந்த தமிழ்நாட்டின் மூத்த தலைவர் மு.கருணாநிதியின் முதல் நினைவு நாள், நாளை ஆகஸ்டு 7 அன்று வருவதை ஒட்டி எழுதப்பட்டது)
கோபாலபுரம் நான்காவது தெருவின் கடைசியில் இடதுபுறத்தில் அமைந்திருக்கிறது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு. ஓடு பாவிய போர்டிகோவுடன்கூடிய பழங்கால வீடு. வாயிலில் இப்போதும் இரு காவலர்கள் இருக்கிறார்கள். ஆனால், பழைய பரபரப்பும் களையும் இல்லை.
பராசக்தி, பணம், திரும்பிப் பார், மனோகரா, மலைக்கள்ளன் என மு. கருணாநிதி தமிழ் சினிமாவில் வசனகர்த்தாவாக கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்த ஐம்பதுகளின் மத்தியில் - 1955ல் - இந்த வீட்டை சரபேஸ்வரய்யர் என்பவரிடமிருந்து வாங்கினார் மு. கருணாநிதி. அப்போதிலிருந்து கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி கடைசியாக மருத்துவமனையில் சேர்க்கப்படும்வரை, அங்கிருந்துதான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தை இயக்கிவந்தார் அவர்.
நுழைவாயிலில் மு. கருணாநிதி என்று பொறிக்கப்பட்ட பலகையைத் தாங்கிய கோபாலபுரம் வீட்டின் அமைப்பு இதுதான்: முன்பகுதியில் ஒரு போர்டிகோ. அதைச் சுற்றி ஒரு சிறிய சுற்றுச் சுவர். அதனைத் தாண்டி உள்ளே நுழைந்தால் சிறிய வரவேற்பரை. அதற்கு அடுத்து ஒரு ஹால். பிறகு இரு அறைகள். சமையறை, பின்னால் ஒரு ஹால் என அமைந்திருக்கிறது வீடு.
கருணாநிதியின் அறை முதல் மாடியில் அமைந்திருந்தது. ஒரு படுக்கை அறையையும் வரவேற்பறையுயும் கொண்ட அந்த மாடியில் ஒரு நூலகமும் உண்டு. கிட்டத்தட்ட பத்தாயிரம் புத்தகங்கள் அங்கே இருக்கின்றன.
இந்தப் புத்தகங்கள் அனைத்தும் பொருள் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, அவை தனியாக பட்டியிலப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலே நான்கு வால்யூம்களுக்கு மேல் வருகிறது. அதிகாலையில் எழுந்துவிடும் மு. கருணாநிதி, உடன்பிறப்பு கடிதம், நெஞ்சுக்கு நீதி போன்றவற்றை காலை உணவுக்கு முன்பே எழுதி முடித்துவிடுவார்.
கருணாநிதியின் அறைக்குச் செல்லும் மாடிக்கான படிகளில் ஏறும்போது, "காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது" என்ற பொன்மொழி வரவேற்கிறது.
அந்த மாடிப்படிக்குக் கீழே உள்ள சிறிய அறையில்தான் அமர்ந்திருக்கிறார் சுமார் ஐம்பதாண்டுகளாக மு. கருணாநிதியின் தனி உதவியாளராக இருந்த சண்முகநாதன்.
1969லிருந்து கருணாநிதி மறையும்வரை அவரது நிழலைப் போல இருந்த சண்முகநாதன், இப்போதும் தினமும் காலையில் கோபாலபுரம் வந்துவிடுகிறார். கருணாநிதியின் எழுத்துக்களைத் தொகுப்பது போன்ற பணிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி உடல்நலம் மிகவும் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மு. கருணாநிதி, காவிரி மருத்துவமனையிலேயே ஆகஸ்ட் 7ஆம் தேதி மரணமடைந்தார். அதற்குப் பிறகு அவரது உடல் குடும்பத்தினர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக கோபாலபுரம் இல்லத்திற்குக் கொண்டுவரப்பட்டு, கீழே உள்ள கூடத்தில் வைக்கப்பட்டது.
தற்போது அந்தக் கூடத்தைப் பார்ப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து கட்சித் தொண்டர்கள், கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து, பார்த்துச் செல்கிறார்கள்.
"நான் முதன் முதலில் 2014ல்தான் இங்க வந்து தலைவரைப் பார்த்தேன். பிறந்த நாளுக்கு வாழ்த்துப் பெறுவதற்காக வந்தேன். அவரைப் பார்த்தவுடன் காலில் விழுந்தேன். உடனே அவர் தடுத்தார். யார் காலிலும் விழக்கூடாது என்றார். இப்போ திரும்ப வரும்போது அந்த நினைவெல்லாம் வருது. நினைவு நாள் அன்னைக்கு வந்தா கூட்டமா இருக்கும்னு இன்னைக்கே வந்துட்டேன்" என்கிறார் அங்கு வந்திருக்கும் ஒரு தொண்டர்.
மு. கருணாநிதி பயணம் செய்யப் பயன்படுத்திய சிறப்பு வசதிகளுடன் கூடிய டொயட்டா அல்ஃபார்ட் காரும் வாசலில் நிறுத்தப்பட்டிருக்கிறது. வருபவர்கள் அதனருகிலும் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கிறார்கள்.
தற்போது இந்த வீட்டில், உடல்நலம் குன்றியுள்ள கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வசித்துவருகிறார்.
தான் வாழ்ந்த இந்த வீட்டை ஏழைகளுக்கான மருத்துவமனை செயல்படுவதற்காக அளிக்கப்போவதாக 2009ஆம் ஆண்டில் அறிவித்தார் கருணாநிதி. தனது மனைவி தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு, அந்த வீடு மருத்துவமனையாகச் செயல்படுமென்று கூறிய அவர், 2010 ஜூன் மாதம் அதனை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு பத்திரப் பதிவுசெய்து கொடுத்திருக்கிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்