You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவு : திருமணம் முதல் வெளியுறவு அமைச்சர் வரை - 5 முக்கிய தகவல்கள்
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
1952ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.
அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்பநலம், தகவல் மற்றும் ஒளிபரப்பு ஆகிய துறைகளுக்கும் அமைச்சராக இருந்துள்ளார்.
அவரை பற்றிய சில முக்கிய தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.
1.சுஷ்மா - ஸ்வராஜ் கௌஷல் திருமணம்
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ் கௌஷலை 1975ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி திருணம் செய்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
1990ல் இந்தியாவிலேயே மிகவும் இளம் வயதில் ஆளுநர் ஆனவர் ஸ்வராஜ் கௌஷல்.
1990 - 1993 வரை மிசோரத்தின் ஆளுநராக ஸ்வராஜ் கௌஷல் பணியாற்றினார்.
1998 - 2004 வரை அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
1973ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற தொடங்கினார் சுஷ்மா ஸ்வராஜ்.
2.சுஷ்மா ஸ்வராஜ் அரசியலுக்கு வந்தது எப்படி?
1970ல் மாணவர் தலைவராக இருந்தார் சுஷ்மா ஸ்வராஜ், அப்போதைய இந்திரா காந்தி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய அவர், ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு அவசர காலத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.
இந்திய அரசியல் மீது அவருக்கு இருந்த ஆர்வம், அவரை டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக்கியது. பின்னர் சுஷ்மா ஸ்வராஜ், முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
தனது 27 வயதிலேயே ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.
3.சுஷ்மா சாதனைகள்
1977 - அவரது 25வது வயதில் இந்தியாவின் இளம் கேபினட் அமைச்சரானார் சுஷ்மா ஸ்வராஜ்.
1979 - 27 வயதில் ஹரியானா மாநில ஜனதா கட்சியின் தலைவரானார்.
தேசிய அளவிலான கட்சியில் செய்தித் தொடர்பாளர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ்.
இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2009ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று அத்வானிக்கு மாற்றாக சுஷ்மா எதிர்க்கட்சி தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார்.
மே 26, 2014ல் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரானார்.
2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் சிறந்த நாடாளுமன்றவாதிக்கான விருதை அவர் பெற்றார். மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருதை பெற்ற இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.
4.சுஷ்மாவின் உடல்நலக்குறைவு
சுஷ்மா ஸ்வராஜ் சிறுநீரக பிரச்சனை தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
நரேந்திர மோதி தலைமையிலான முதல் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சகராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
5.பிரபலமான வெளியுறவுத்துறை அமைச்சராக விளங்கிய சுஷ்மா
இந்தியர்கள் வெளிநாடுகளில் சிக்கியதாக இந்தியர்கள் யாரேனும் ட்விட்டரில் தங்கள் நிலையை பதிவு செய்தால், அவர்களுக்கு உடனடியாக உதவினார் சுஷ்மா.
சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்த நிலையில், அவரிடம் உதவி பெற்ற இந்தியர்கள் பலரும் ட்விட்டரில் அவரது இழப்பிற்காக வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்