வாகனம் ஓட்டுபவரா நீங்கள் - புதிய அபராத தொகைகள் எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் மோட்டார் வாகன சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதத்தை விதிப்பதன் மூலம் சாலைப் போக்குவரத்தை பாதுகாப்பானதாக மாற்றலாம் என்பதே இதன் குறிக்கோள்.
நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்:
ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவதற்கு தற்போது 500 ரூபாயாக இருக்கும் அபராதத் தொகை 5,000 ரூபாயாகி இருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி வாகனத்தை இயக்குவதற்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் அபராதம் 1,000 ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்புவரை, தலைக்கவசம் அணியாவிட்டால் 100 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், தற்போது அது ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், மூன்று மாதங்கள் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் இனி பத்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்; இதற்கு முன்னதாக அது இரண்டாயிரம் ரூபாயாக இருந்தது.
விபத்தின் காரணமாக ஏற்படும் பாதிப்பின் வீரியத்தை குறைக்கும் இருக்கை பட்டை (சீட் பெல்ட்) அணியாமல் பயணிப்போருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாலைவிபத்தில் உயிரிழப்போருக்கு அரசின் சார்பில் 25,000 ரூபாய் இழப்பீடாக கொடுக்கப்பட்டு வரும் நிலையில், அது இரண்டு லட்சம் அல்லது அதற்கு மேலாக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறார்கள் செய்யும் விதிமீறல்களுக்கு அவர்களது பாதுகாவலர்கள் அல்லது வாகனத்தின் உரிமையாளரே பொறுப்பு. அல்லது தங்களது கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் சம்பவம் நடைபெற்றதை உறுதி செய்ய வேண்டும்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வருபவர்கள் மீது சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுக்கப்படும். அதாவது, விபத்தில் பாதிக்கபட்ட ஒருவருக்கு உதவி செய்தவர் தனது தனிப்பட்ட விவரங்கள் குறித்து காவல்துறையினரிடமோ அல்லது மருத்துவர்களிடமோ கூறுவது அவசியமில்லை.

பட மூலாதாரம், Getty Images
ஓட்டுநர் உரிமத்தை காலாவதியாவதற்கு முன்பே புதுப்பிக்கும் அவகாசம் ஒரு மாதத்திலிருந்து, ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட விபத்துகளில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டத் திருத்தம் நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடியுமென்று நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












