உன்னாவ் பாஜக எம்.எல்.ஏ மீதான பாலியல் வழக்கை 45 நாளில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பட மூலாதாரம், FACEBOOK / KULDEEP SENGAR
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சேங்கர் என்பவரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டிய பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் பதிவெண் அழிக்கப்பட்ட லாரி மோதி உயிரிழந்ததை ஏழு நாட்களுக்குள் விசாரித்து முடிக்க சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
30 நாட்கள் கால அவகாசம் தேவை என்று சிபிஐ விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் மறுத்துள்ளது.
தேவைப்பட்டால் சி.பி.ஐ. மேலும் ஒருவார காலம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் விசாரணை இருவாரங்களுக்கு மேல் நீளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.
இந்தப் பெண் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் உத்தரப்பிரதேச சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து டெல்லியில் இருக்கும் சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வன்புணர்வு வழக்கு, பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது லாரி மோதிய வழக்கு, போலீஸ் காவலில் பெண்ணின் தந்தை சித்ரவதை செய்யப்பட்டு இறந்தது தொடர்பான வழக்கு, இரண்டாவது முறையாக பாதிக்கப்பட்ட பெண் வல்லுறவு செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, ஆயுதம் வைத்திருந்ததாக பெண்ணின் தந்தை மீது தொடரப்பட்ட வழக்கு ஆகியவை டெல்லிக்கு மாற்றப்படவுள்ளன.
வழக்குகள் டெல்லிக்கு மாற்றப்பட்டபின் வன்புணர்வு தொடர்பான வழக்கை விசாரணை நீதிபதி 45 நாட்களுக்குள் முடிப்பார் என்று உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு மாநில அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது
இதனிடையே குல்தீப் சேங்கர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக இன்று அறிவித்துள்ளது. "கடைசியாக ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது" என்று இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தாம் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக குற்றம்சாட்டியுள்ள பெண், விபத்தில் சிக்கியபின்னர் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
அவரை விமானம் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரலாமா என்பது குறித்து மருத்துவர்கள் முடிவெடுக்கலாம் என்று அப்போது தலைமை நீதிபதி கூறினார்.
அவரை இடம் மாற்றத் தேவை இல்லை என்று அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அப்போது நீதிபதியிடம் தெரிவித்தார்.
முன்னதாக, இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து, வழக்கு விவரங்களை விளக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இன்று காலை அறிவுறுத்தியது.
உன்னாவ் பாலியல் வன்புணர்வு வழக்கு கையாளப்பட்ட விதம் தொடர்பான விசாரணை இன்று, வியாழக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதுவரை வழக்கு விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து பொறுப்புள்ள சிபிஐ அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்து தெரிவிக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது.
உன்னாவ் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது மற்றும் அவரது குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது ஆகியவை குறித்தும் சிபிஐ இயக்குநர் உடன் அரசுத் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆலோசிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
பாஜக எம்.எல்.ஏ.வால் வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் தாம் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தை தங்கள் முன் சமர்ப்பிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற தலைமை செயலாளர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார் இந்தியத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
ஜூலை 17 முதல் 30 வரை அந்தக் கடிதம் ஏன் கேட்பாரின்றிக் கிடந்தது என்று ரஞ்சன் கோகோய் எழுப்பிய கேள்விக்கு, தினமும் 5,000 முதல் 6,000 கடிதங்கள் தங்களுக்கு வருவதாக உச்ச நீதிமன்றத் தலைமை செயலாளர் இன்றைய விசாரணையின்போது தெரிவித்தார்.
நேற்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் பேசிய ரஞ்சன் கோகோய், "உன்னாவ் வன்புணர்வு வழக்கில் பாதிக்கப்பட்டவர் உச்சநீதிமன்றத்துக்கு கடிதம் எழுதியது தொடர்பாக இன்று காலை செய்தித்தாளில் படித்தேன். இந்தக் கடிதம் குறித்து நேற்று தகவல் சொல்லப்பட்டது. அந்தக் கடிதத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. என்னிடம் அந்தக் கடிதம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை," என்று அவர் கூறியிருந்தார்.
வழக்கின் பின்னணி
உன்னாவ் சட்ட மன்ற உறுப்பினரான பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங் சேங்கர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் ஒருவர், தம்மை சேங்கர் வன்புணர்வு செய்ததாக 2017-ல் குற்றச்சாட்டு வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்நிலையில் ஆயுதம் வைத்திருந்ததாக அவரது தந்தை கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நடவடிக்கை கோரி அந்தப் பெண் உ.பி. முதல்வர் யோகி ஆதித்திய நாத் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றார்.
அதற்கு மறுநாள் போலீஸ் காவலில் இருந்த அவரது தந்தை இறந்தார். குற்றம்சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வின் தம்பி அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து எம்.எல்.ஏ. சேங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த பாதிக்கப்பட்ட பெண் சென்ற கார் மீது சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி அருகே லாரி மோதியதில் அவரது உறவினர் பெண்கள் இருவர் கொல்லப்பட்டனர். அந்தப் பெண்ணும் அவரது வழக்குரைஞரும் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கார் மீது மோதிய லாரியின் பதிவு எண் கருப்பு மையால் அழிக்கப்பட்டிருந்தது.
முதலில் இது விபத்து என்று போலீஸ் கூறியது. எனினும், பிறகு, குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சேங்கர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












