டீசல்கள் வாகனங்கள் நினைக்கும் அளவுக்கு மோசமாக மாசுபாடு செய்பவையா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தியோ லெக்கட்
- பதவி, பிபிசி வர்த்தக செய்தியாளர்
2016ம் ஆண்டோடு ஒப்பிடும்போது டீசல் கார்களின் விற்பனை பிரிட்டனில் கடந்த 2017ம் ஆண்டு 17 சதவீதம் குறைந்துள்ளது.
அரசாங்கத்தின் டீசல் எதிர்ப்பு கொள்கையும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சூழலியல் பிரச்சாரம் செய்பவர்களே டீசல் கார்களின் விற்பனை வீழ்ச்சிக்கு காரணமென்று அத்துறையை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நவீன டீசல் கார்களின் என்ஜின்கள் மிகவும் தூய்மையானது என்றும், அதனால் ஏற்படும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து திரிக்கப்பட்ட செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றம் சார்ந்த இலக்குகளை அடைவதற்காக, கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வைக் குறைக்க உதவுவதில் அவை முக்கிய பங்கைக் கொண்டிருக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
எனவே, நவீன டீசல் கார்கள் காரணமின்றி குற்றஞ்சாட்டப்படுகிறதா? அல்லது அவை உண்மையாகவே உடல்நலனுக்கு அபாயகரமானதாக விளங்குகிறதா?
ஆனால், நீங்கள் நினைப்பது போல இவ்விவகாரத்திற்கான பதிலை ஆம் அல்லது இல்லை என்று சாதாரணமாக பதிலளித்துவிட முடியாது. சில பெட்ரோல் கார்களைவிட நவீன டீசல் கார்கள் குறைந்தளவு நச்சை உமிழ்கின்றன என்பது உண்மைதான் என்றாலும், பெரும்பாலும் பெட்ரோல் கார்களே சிறந்த தேர்வாக உள்ளது.
இரண்டு வகையான கார்களுமே இரசாயன சக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகின்றன என்றாலும், அதை மேற்கொள்ளும் செயல்பாட்டில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
டீசல் என்ஜின்கள் பெட்ரோல் என்ஜின்களைவிட குறைந்தளவு எரிபொருளை பயன்படுத்தி குறைந்தளவு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடுவதுடன் பெட்ரோல் கார்கள் அளிக்கும் அதே சக்தியை வெளிப்படுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
எனினும், இந்த உயர் திறனானது கூடவே சில பாதிப்புகளையும் அளிக்கிறது. டீசல் என்ஜின்கள் டீசலை எரித்து இயந்திர சக்தியை உருவாக்கும்போது அதிக அளவிலான துகள்களையும், புகைக்கரிகளை நுண்ணிய அளவிலும் உற்பத்தி செய்கின்றன.
இவை நுரையீரல்கலுக்குள் ஆழமாக ஊடுருவி எரிச்சல் மற்றும் ஆஸ்துமாவை ஏற்படுத்தக்கூடும்.
துகள்களை வடிகட்டுதல்
டீசல் கார்களை பொறுத்தவரை மிகப் பெரிய பிரச்சனையே மிகச் சிறிய "அல்ட்ராபைன்" என்றழைக்கப்படும் துகள்களினாலே உருவாகுகின்றன என்று சௌத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் காற்று மாசுபாடு நச்சுயியல் குறித்து ஆராய்ச்சி செய்யும் மாத்யூ லாக்ஸ்ஹாம் கூறுகிறார்.
"அவை நுரையீரல்களில் ஆழமாகப் பரவி, ஆக்ஸிஜன் நமது இரத்தத்தில் நுழையும் பகுதிகளுக்கு செல்கின்றன. அந்த துகள்கள் கிட்டத்தட்ட நிச்சயமாக இரத்ததிற்குள் நுழைய முடியும்" என்று அவர் கூறுகிறார்.
"ஏற்கனவே உடல்நலன் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் எளிதிலேயே நோயினால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளவர்களுக்கு பக்கவாத மற்றும் மாரடைப்புக்கான விகிதங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளுள்ளன" என்று அவர் மேலும் கூறுகிறார்.
ஆனால், மேம்படுத்தப்பட்ட வடிப்பான்களைக் கொண்டிருக்கும் நவீன டீசல் கார்கள் உண்மையிலேயே மிகக் குறைவான துகள்களையே வெளியிடுகின்றன.
எமிஷன்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான நிக் மாளன், இந்த அமைப்புகள் நன்றாக வேலை செய்கின்றன என்று கூறுகிறார்.
"நவீன டீசல் கார்களில் அடிப்படையிலேயே நுண்ணிய துகள்கள் சார்ந்த சிக்கல்கள் இல்லை" என்றும் "வடிகட்டிகள் 99% துகள்களை நீக்குவதுடன், அந்தமைப்பு சேதமடையாதவரை அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
டீசல் கார்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுகளையும் வெளியிடுகின்றன. குறிப்பாக நைட்ரஜன்-டை-ஆக்சைடை நீண்டகாலமாக உள்ளிழுப்பவர்களுக்கு நுரையீரல் செயல்பாடு குறைவதுடன், சுவாசம் சார்ந்த பிரச்சனைகளையும், ஒவ்வாமையையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
டீசல் கார்கள் வெளியிடும் நைட்ரஜன் அளவை குறைக்கும் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. ஐரோப்பிய நச்சு உமிழ்வு தரநிலையின்படி, குறைந்த நைட்ரஜன் நச்சை வெளியிடும் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட 'யூரோ 6' தரநிலையானது 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து விற்பனை செய்யப்படும் கார்களில் பொருத்தப்படுகிறது.
சாலையில் மேற்கொள்ளப்படும் சோதனைகள்
பொதுவாக கார்கள் சோதனை கூடத்தில் வெளியிடும் நச்சைவிட அதிகளவிலான நச்சை சாலையில் ஓட்டப்பட்டு பரிசோதனை செய்யப்படும்போது வெளியிடுகின்றன.
சில கார்கள் அவை சோதனை கூடத்தில் வெளியிடும் அளவைவிட 15 மடங்கு அதிக நச்சை "உண்மையான சாலைகளில்" பரிசோதிக்கப்படும்போது உமிழ்கின்றன.
டீசல் கார்களில் காணப்படும் மேற்கொண்ட வேறுபாடுகள் பெட்ரோல் கார்களிலும் பரவலாக உள்ளது. அதாவது, "சிறந்த 10% டீசல் கார்களையும், மோசமான 10% பெட்ரோல் ரக கார்களையும் ஒப்பிட்டால் டீசல் கார்களைவிட பெட்ரோல் கார்களே இரண்டு மடங்கு அதிக நைட்ரஜன் ஆக்ஸைடை வெளியிடுவது தெரியவருகிறது."
ஐரோப்பாவில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கார்கள் சோதனை கூடங்கள் மட்டுமல்லாது உண்மையான சாலைகளிலும் பரிசோதிக்கப்பட்ட வேண்டும் என்ற விதி அமலுக்கு வருவதால் கார்கள் வெளியிடும் நச்சுப்புகை சார்ந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கார் உற்பத்தியாளர்கள் பெட்ரோல் கார்களின் எஞ்சின்களையும் திறன்வாய்ந்ததாகவும் மற்றும் சிக்கனமானதாகவும் ஆக்கும் "நேரடி உட்செலுத்துதல்" என்ற தொழில்நுட்பத்தை முயற்சித்து வருகின்றன.
அவ்வாறு திறன் வாய்ந்த பெட்ரோல் கார்கள் உருவாக்கப்பட்டால் அவை அதிகளவிலான துகள்களை வெளியிடும் அபாயமும் இருக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












