அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்தது

பட மூலாதாரம், AFP
அமெரிக்காவில் ஏற்பட்ட பகுதியளவு அரசுப் பணிகள் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. தற்காலிக நிதியளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் வாக்களித்துள்ளனர்.
அமெரிக்காவின் செனட் சபையும், நாடாளுமன்றமும் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 81 பேரும் எதிராக 18 பேரும் வாக்களித்திருந்தனர். நாடாளுமன்றத்தில் ஆதரவாக 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றிருந்தது.
இந்த மசோதா தற்போது அமெரிக்க அதிபர் டிரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதி இரண்டரை வாரங்களுக்கு மட்டுமே உள்ளது.
பிப்ரவரி 8-ம் தேதி வரை அமெரிக்க அரசு எவ்வித நிதித் தடையும் இல்லாமல் இயங்கும். இதற்கிடையில் நீண்ட கால வரவு செலவு திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
''இளம் குடியேறிகள் நாடு கடத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கும் திட்டத்தை அரசு கொண்டுவந்தால், வரவு செலவு மசோதாவுக்கு ஆதரவளிக்க ஜனநாயக கட்சியினர் ஒப்புக்கொண்டுள்ளனர்'' என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் செனட் சபை தலைவர் சக் ஸ்குமர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து, குடியேறிகள் மீது கடும்போக்கை காட்டி வருகிறார்.
வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்குக் கைமாறாக, குடியேறிகள் பிரச்சனையை திர்க்க வேண்டும் என ஜனநாயக கட்சியின் நினைக்கின்றனர். ஆனால், இதனைச் செய்ய குடியரசு கட்சியினர் தயாராக இல்லை.
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டத்தை செனட் சபை ஏற்றுக்கொள்வது தோல்வியடைந்ததால் சில நாட்களுக்கு முன்பு அரசு பணிகள் நிறுத்தப்பட்டது. நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரசு நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
கடந்த முறை இது போல அரசுப் பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 2013ல் 16 நாள்கள் நடந்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












