தவணையில் கார் வாங்கிய லால்பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி பேட்டி அளித்தார்

சமுதாயத்தின் மிக எளிய நிலையிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களில் முதன்மையானவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி.

ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று பதவி விலகியதாக இருந்தாலும் சரி, 1965இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் பிரதமராக அவர் ஆற்றிய பணியாக இருந்தாலும்சரி, அவரால் முழங்கப்பட்ட 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற முழக்கமாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் தலைமைப்பண்பையும், நிர்வாகப் பண்பையும் சரியாக வெளிப்படுத்தி தனது ஆளுமையை நிரூபித்த நாயகர்களின் உதாரணங்கள் சரித்திரத்தில் மிகக் குறைவாகவே காணக்கிடைக்கிறது.

விடுதலைப் போராட்டம் நடைபெற்ற காலகட்டத்தில், ஏழை எளிய பின்னணியில் இருந்து வந்து பங்கேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக, லாலா லஜ்பத் ராய், இந்திய சமூக ஊழியர்கள் அமைப்பை (Servants of India Society) ஏற்படுத்தினார்.

இந்த உதவித்தொகையை பெற்றவர் லால் பகதூர் சாஸ்திரி என்ற தகவலில் இருந்து அவரது ஏழ்மையான குடும்பச்சூழலை தெரிந்துக்கொள்ளலாம்.

லலிதா சாஸ்திரியின் பதில்

சாஸ்திரியின் குடும்பச் செலவுகளுக்காக மாதந்தோறும் 50 ரூபாய் வழங்கப்பட்டது. சிறையில் இருந்த சாஸ்திரி தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில், உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைக்கிறதா? 50 ரூபாயைக் கொண்டு குடும்பச் செலவுகளை பராமரிக்க முடிகிறதா என்று கேட்டிருந்தார்.

லால் பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், ANIL SHASTRI

படக்குறிப்பு, தாஷ்கண்டில் சாஸ்திரியுடன், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் மற்றும் ரஷ்ய பிரதம் கேசிகின்

கணவரின் கடிதத்திற்கு உடனடியாக பதில் எழுதிய லலிதா சாஸ்திரி, 50 ரூபாய் குடும்பச்செலவுக்கு போதுமானதாக இருப்பதாகவும், 40 ரூபாய்க்குள் செலவுகளை முடித்துக் கொண்டு மாதம் 10 ரூபாய் சேமிப்பதாகவும் தெரிவித்தார்.

மனைவியின் கடிதத்தை படித்த சாஸ்திரி என்ன செய்தார் தெரியுமா? உடனே இந்திய சமூக ஊழியர்கள் அமைப்புக்கு கடிதம் எழுதிய அவர், தனது குடும்பத்தின் செலவுகளுக்கு 40 ரூபாய் போதும், மீதமுள்ள 10 ரூபாயை தேவைப்படும் பிறருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார்!

அனில் சாஸ்திரியின் தவறு

சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி கூறுகிறார், "ஒருநாள் இரவு உணவுக்கு பின் என்னை அழைத்த அப்பா என்னை கண்டித்தார், எதற்கு தெரியுமா? பெரியவர்களின் காலைத் தொட்டு வணங்கும்போது அவர்களின் முழங்கால் வரையே கைகள் செல்கிறது, அவர்களின் பாதத்தை தொடவில்லை".

அனில் சாஸ்திரி
படக்குறிப்பு, பிபிசி ஸ்டூடியோவில் லால்பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரியுடன் ரெஹான் ஃபஜல்

இந்திய சமுதாயத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்களை பார்த்ததும் அவர்களின் காலைத் தொட்டு வணங்கி ஆசீர்வாதம் பெறுவது என்பது இன்றும் வழக்கமாக தொடர்கிற ஒன்று. இன்று நாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது வணக்கம், ஹலோ என்று முகமண் கூறுவது போன்ற பாரம்பரியமான பழக்கம்.

அனில் தனது தவறை ஒப்புக்கொள்ளவில்லை. தான் சரியாகத்தான் பெரியவர்களின் காலைத் தொடுவதாகவும், தனது சகோதரர்களில் யாராவது அவ்வாறு செய்திருப்பார்கள் என்றும் வாதிட்டார்.

உடனே சாஸ்திரி குனிந்து, தனது 13 வயது மகனின் பாதங்களைத் தொட்டு காண்பித்து, இப்படித்தான் பெரியவர்களின் கால்களைத் தொட்டு வணங்கவேண்டும் என்று சொன்னார்.

தந்தை தனது கால்களை தொட்டதும் அவமானத்தால் குறுகிப்போன அனில் அழத் தொடங்கினார்.

அன்று முதல் இன்று வரை தந்தை சொன்னது போலவே பெரியவர்களின் காலைத்தொட்டு வணங்குவதாக கூறும் அனில், இந்த சம்பவம் மனதில் நீங்கா வடுவாக பதிந்துவிட்டதாக நினைவுகூர்கிறார்.

இந்திய உள்துறை அமைச்சர்

இந்திய உள்துறை அமைச்சராக பதவியேற்றபோது, பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யர் அவரது பத்திரிகை செயலாளராக பணிபுரிந்தார்.

டெல்லியில் மெஹ்ரோலியில் இருந்து ஒரு நிகழ்ச்சிக்கு பிறகு சாஸ்திரியுடன் வந்தபோது, ரயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தது என்று பழைய நினைவுகளை நினைவு கூர்கிறார் நய்யர்.

லால் பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், KULDEEP NAYAR

படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யருடன் லால்பகதூர் சாஸ்திரி

அருகில் கரும்புச்சாறு பிழிந்து கொண்டிருந்ததை பார்த்தார் சாஸ்திரி. ரயில்வே கிராசிங் திறப்பதற்குள் கரும்புச்சாறு குடித்துவிட்டு வந்துவிடலாம் என்று சொன்னார்.

குல்தீப் பதிலளிக்க வாயை திறப்பதற்கு முன்பே வண்டியில் இருந்து கீழே இறங்கி, குல்தீப், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிக்கு என அனைவருக்கும் கரும்புச்சாறு தேவை என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டார்.

இதில் சுவராஸ்யமான விஷயம் என்னவென்றால், கரும்புச்சாறு பிழிபவர் உட்பட அங்கு இருந்த யாருக்கும் உள்துறை அமைச்சரை அடையாளம் தெரியவில்லை.

சாஸ்திரியை ஓரளவு அடையாளம் தெரிந்திருந்தாலும்கூட, உள்துறை அமைச்சர் இப்படி சாதாரண நபர்போல் கரும்புச்சாறு வாங்க வருவாரா, அதுவும் இந்த ரயில்வே கிராசிங்கில் என்றுதானே நினைத்திருப்பார்கள்?

தவணைக்கடனில் கார் வாங்கிய சாஸ்திரி

பிரதமராகும் வரை லால் பகதூர் சாஸ்திரிக்கு சொந்த வீடு மட்டுமல்ல, சொந்தக் கார் கூட கிடையாது. நாட்டின் பிரதமரான பிறகு, அப்பாவிடம் கார் இருக்கவேண்டும் என்று பிள்ளைகள் சொன்னதால் கார் வாங்க முடிவெடுத்தார் பிரதமர் சாஸ்திரி.

தவணைக் கடனில் சாஸ்திரி வாங்கிய கார்

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

படக்குறிப்பு, தவணைக் கடனில் சாஸ்திரி வாங்கிய கார்

அந்த காலகட்டத்தில் பியட் கார் 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. அவரது வங்கிக்கணக்கில் இருந்ததோ ஏழாயிரம் ரூபாய் மட்டுமே! தந்தையிடம் கார் வாங்க போதுமான பணம் இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட பிள்ளைகள் கார் வாங்காவிட்டால் பரவாயில்லை என்று சொன்னார்கள்.

பரவாயில்லை என்று சொன்ன சாஸ்திரி, பற்றாக்குறையான பணத்திற்கு வங்கியில் இருந்து கடன் வாங்கலாம் என்று சொன்னார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி, கார் வாங்கினார். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்பே இயற்கை எய்திவிட்டார் பிரதமர் சாஸ்திரி.

இந்திராவின் சலுகை

சாஸ்திரியின் மறைவுக்கு பின் பிரதமராக பதவியேற்ற இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

ஆனால் அதை மறுதளித்த லலிதா சாஸ்திரி தனது ஓய்வூதியத்தில் இருந்து கடனை அடைத்தார்.

மாஸ்கோவில் சாஸ்திரி

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

படக்குறிப்பு, மாஸ்கோவில் சாஸ்திரி

சாஸ்திரி இறந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகே அவரது காருக்கான கடன் அடைக்கப்பட்டது.

அந்தக் கார் தற்போதும் டெல்லி லால் பகதூர் சாஸ்திரி நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார் அனில் சாஸ்திரி.

ரஷ்யாவில் லெனின்கிராடுக்கு சென்றிருந்தபோது, போல்ஷியோ திரையரங்கின் ஸ்வான் ஏரி பாலே காட்சியைப் பார்த்த சாஸ்திரி, அசெளகரியமாக உணர்ந்ததாக குல்தீப் நய்யர் கூறுகிறார்.

மகனின் ரிப்போர்ட் கார்ட்

பாலே நடனம் பிடித்திருக்கிறதா என்று நிகழ்ச்சியின் இடைவேளையில் சாஸ்திரிக்கு அருகில் அமர்ந்திருந்த குல்தீப் கேட்டதற்கு அவர் அப்பாவித்தனமாக அளித்த பதில் என்ன தெரியுமா?

டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் லால் பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

படக்குறிப்பு, டெல்லி செங்கோட்டையில் உரையாற்றும் லால் பகதூர் சாஸ்திரி

இந்த நடனப் பெண்களின் கால்கள் ஆடையில்லாமல் இருக்கிறது, மறுபுறத்தில் அம்மா (மனைவி லலிதாவை அம்மா என்று அழைப்பார் சாஸ்திரி) அமர்ந்திருக்கிறார், எனவே நடனத்தை பார்க்கவே வெட்கமாக இருப்பதாக சாஸ்திரி சொன்னார்.

1964இல் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, அவரது மகன் அனில், டெல்லி செயிண்ட் கொலம்பஸ் பள்ளியில் பயின்றார். ஆசிரியர்-பெற்றோர் சந்திப்பு போன்ற நடைமுறைகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில், ரிப்போர்ட் கார்டை பெறுவதற்கு மட்டுமே பெற்றோர்கள் பள்ளிக்கு செல்வார்கள்.

தனது மகனின் ரிப்போர்ட் கார்டை வாங்க சாஸ்திரி சென்றார். பள்ளிக்கு சென்ற அவர் நுழைவாயிலிலேயே இறங்கிக்கொண்டார். அவர் பள்ளிக்குள் காரிலேயே செல்லலாம் என்று பாதுகாவலர்கள் சொன்னபோது, அதை மறுத்த பிரதமர், பிற தந்தைகளைப் போலவே பள்ளியின் நுழைவாயிலில் இருந்து நடந்து சென்றார்.

தாஷ்கண்ட் ஒப்பந்தம்

"முதல் தளத்தில் இருந்த 11ஆம் வகுப்பு பி பிரிவுக்கு வந்த அப்பாவைப் பார்த்த வகுப்பு ஆசிரியர் ரெவார்ட் டையன் வியப்படைந்தார். சார், நீங்கள் ரிப்போர்ட் கார்டை வாங்க வரவேண்டிய அவசியம் இல்லை என்று ஆச்சரியப்பட்டார். அதற்கு பதிலளித்த அப்பா, 'நான் கடந்த பல ஆண்டுகளாக பிள்ளைகளின் பள்ளிக்கு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன், இனியும் அவ்வாறே செய்வேன்' என்று சொன்னார்" என்று தந்தையின் நினைவுகளில் மனம் கரைகிறார் அனில் சாஸ்திரி.

பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

படக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுடன் இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி

"ஆனால் நீங்கள் நாட்டின் பிரதமர்" என்று ஆசிரியர் சொல்ல, அதற்கு புன்முறுவலுடன் பதிலளித்த சாஸ்திரி, 'பிரதர் டையன் , நான் பிரதமரான பிறகும் மாறவில்லை, ஆனால் நீங்கள்தான் மாறிவிட்டீர்கள்' என்று சொன்னார்."

சாஸ்திரிக்கு அழுத்தம்

1966இல் தாஷ்கண்டில் இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு சாஸ்திரிக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன.

பாகிஸ்தானுக்கு ஹாஜி பீர் மற்றும் டீத்வால் ஆகிய பகுதிகளை திரும்பி அளிக்க வேண்டும் என்பது குறித்து இந்தியாவில் பலவிதமான சர்ச்சைகளும் எழுந்தன.

லால்பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

இரவு வெகுநேரம் வரை தாஷ்கண்டில் இருந்து டெல்லியில் இருந்த பலருடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

இதுபற்றி குல்தீப் நய்யர் கூறுகிறார் "நான் போன் எடுத்ததும் அம்மாவிடம் போனைக் கொடு என்று சொன்னார். போனில் பேசிய சாஸ்திரியின் மூத்த மகள், அம்மா போனில் பேச மாட்டார்கள் என்று சொன்னார்.

ஏன் என்று சாஸ்திரி கேட்டதற்கு, ஹாஜி பீர் மற்றும் டீத்வாலை பாகிஸ்தானுக்கு கொடுக்க நீங்கள் ஒப்புக் கொண்டதால் அம்மாவுக்கு கோபம் என்று பதில் கிடைத்தது.

மனைவிக்கு தன்மேல் வருத்தம் என்பதைக் கேட்ட சாஸ்திரி அதிர்ச்சியடைந்தார்.

அறைக்குள்ளே சிறிது நேரம் யோசனையுடன் நடைபயின்றார்.

பிறகு தன்னுடைய செயலாளர் வெங்கட்ராமனுக்கு போன் செய்த சாஸ்திரி இந்தியாவின் எதிர்வினைகளை கேட்டார்.

தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைப் பற்றி, இருவர் மட்டுமே அதுவரை கருத்து வெளியிட்டிருப்பதாக கூறினார் வெங்கட்ராமன்.

அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் கிருஷ்ண மேனன் இருவருமே எதிர்மறையான விமர்சனங்களை வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

சாஸ்திரியின் அகால மரணம்

குல்தீப் நய்யார் கூறுகிறார், "அந்த நேரத்தில் இந்திய-பாகிஸ்தான் ஒப்பந்தம் உருவானதை கொண்டாடும் வகையில் தாஷ்கண்ட் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் மது அருந்துவதில்லை என்பதால், என்னுடைய அறைக்கு வந்து படுத்துவிட்டேன். அடுத்த நாள் காலை சாஸ்திரியுடன் நான் ஆப்கானிஸ்தானுக்கு செல்ல வேண்டியிருந்தது. சாஸ்திரி இறந்துவிட்டதாக நான் கனவு கண்டேன். சற்று நேரத்தில் என் அறைக் கதவு தட்டப்பட்டது. நான் கதவைத்திறந்து வெளியே வந்தபோது, அங்கே நின்று கொண்டிருந்த ரஷ்ய பெண் சொன்னார், உங்கள் பிரதம மந்திரி இறந்துவிட்டார்."

லால்பகதூர் சாஸ்திரி

பட மூலாதாரம், BHARATRAKSHAK.COM

"உடைகளை மாற்றிக் கொண்டு நான் ஓடினேன். சாஸ்திரி இருந்த இடத்திற்குச் சென்றேன், அங்கு ரஷ்ய பிரதமர் கோசிகின் தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்தார். சாஸ்திரி இறந்துவிட்டார் என்பதை எனக்கு சைகை மூலம் அவர் சொன்னார். அறைக்குள் சென்றுபார்த்தபோது, பெரிய படுக்கையில் சிறிய உருவம் கொண்ட சாஸ்திரி படுத்திருந்தார். இரவு இரண்டரை மணிக்கு பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் வந்து துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை, "இந்தியாவையும் பாகிஸ்தானையும் நெருக்கமாக்கியவர் இவர்'' என்று.

உயர்ந்த குடிமகன் விருது

தாஷ்கண்ட் உடன்படிக்கைகளுக்குப் பிறகு, எளிமையான ஒரு பெரிய தலைவரின் தலைமையை இந்தியா இழந்தது நாட்டிற்கே துன்பகரமான சம்பவம்.

மரணத்திற்கு பிந்தைய விருதாக இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது பாரத ரத்னா 1966ஆம் ஆண்டில் லால் பகதூர் சாஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

மனைவி லலிதாவுடன் சாஸ்திரி

பட மூலாதாரம், LAL BAHADUR SHASTRI MEMORIAL

படக்குறிப்பு, மனைவி லலிதாவுடன் சாஸ்திரி

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் முடிவுக்கு வந்து அதற்கான உடன்படிக்கையில் பிரதமராக இறுதி கையெழுத்திட்ட பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, தனது இன்னுயிரையும் தாஷ்கண்டிலேயே நீத்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :