அஸ்ஸாம், பிகாரில் வெள்ளப்பெருக்கு: 100 பேர் பலி, மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்வு

பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் பல பகுதிகளிலும், நேபாளம் மற்றும் வங்க தேசத்திலும், பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கும், அதனால் பேரழிவும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் சூழந்த பகுதிகளில் பலர் சிக்கியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
பிகார் மற்றும் வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாம் ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 100 பேர் இறந்துள்ளதாக மாநில அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வீடுகள் மூழ்கியுள்ளன. போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் தண்ணீர் சூழ்ந்து பிகாரிலுள்ள முஸாஃபர்பூர் போன்று மாவட்டங்கள் முழுவதையுமே வெள்ளப்பெருக்கு தொடர்பை இழக்க செய்துள்ளது, .
மிகவும் ஏழ்மையான பிகாரில் 47 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்; ஒரு லட்சத்துக்கும் மேலானோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிகாரில் ஓடுகின்ற முக்கிய ஆறுகளில் ஒன்றான கோசி, ஒவ்வோர் ஆண்டும் பருவமழையின்போது பேரழிவுகளை ஏற்படுத்துவதால், "பிகாரின் துயரம்" என்ற அழைக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஜூன் முதல் செப்டம்பர் வரை பருவமழைக் காலத்தில் தெற்காசியா முழுவதும் பெரும் அழிவு ஏற்படுகிறது.
கடந்த ஆண்டு புயலாலும், நிலச்சரிவுகளாலும் இந்த பிரதேசத்தில் 1,200-க்கு மேற்பட்டோர் இறந்தனர்.
இதே பருவமழை காலத்தில்தான் நூற்றாண்டு கண்டிராத மோசமான வெள்ளப்பெருக்கை கேரள மாநிலம் எதிர்கொண்டது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உயரமான இடங்களுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
இன்னும் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ள அஸ்ஸாம் மற்றும் பிகாரிலுள்ள விவசாய நிலங்களையும் வெள்ளப்பெருக்கு பாதித்துள்ளது.
அஸ்ஸாமில் பிரம்மபுத்திராவிலும், அதன் கிளை ஆறுகளிலும் நீர் மட்டம் உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறைந்தது 5 இடங்களில் அபாய நிலைக்கு மேலாகவே நீர் மட்டம் உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அஸ்ஸாமின் பார்பெட்டா மாவட்டத்தில் தண்ணீர் வடிவதற்காக அங்கு வாழ்வோர் காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மாநிலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டம் இது.

பட மூலாதாரம், Getty Images
அஸ்ஸாமில் 57 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உலகிலேயே மிக முக்கியமான உயிரியல் பூங்காக்களில் ஒன்றும், அழிந்துவரும் காண்டாமிருகத்தின் தாயகமுமான காசிரங்கா தேசிய பூங்காவிலும் அதிக அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள கிராமங்கள் வெகுதொலைவில் இருப்பதால் மீட்புப்பணிகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. மழை பெய்வதும் தொடர்ந்து வருவதால் நிவாரணப் பொருள் விநியோகம் கடினமாக உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய எல்லா வழிகளிலும் நாங்கள் முயற்சித்து வருகிறோம். ஆனால் நிலைமை மிக மோசமாகத்தான் உள்ளது என்று அஸ்ஸாம் மாநில சமூக நலவாழ்வு அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












