‘சரவண பவன்’ ராஜகோபால் காலமானார்

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் பல கிளைகளை கொண்ட சரவணபவன் ஹோட்டல் குழுமத்தின் அதிபர் ராஜகோபால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
உடல்நலக்குறைவுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு ஒரு கொலைக்குற்றம் தொடர்பாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
2009-ஆம் ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை செல்வதற்கு எதிராக அவர் கடுமையாக போராடி வந்தார். கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று மருத்துவ காரணங்களை மேற்கோள்காட்டி சிறை செல்வதை தவிர்க்க அவர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்தார். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் "நாள்பட்ட சிறுறுநீரக நோய், செப்டிக் என்செபாலோபதி போன்ற நோய்களால் அவதிப்பட்டுவந்தார். இன்று வியாழக்கிழமை காலை 10.39க்கு பக்கவாதம் மற்றும் பல உடலுறுப்புகள் முடக்கம் (மல்டிபிள் ஆர்கன் பெயிலியர்) காரணமாக உயிரிழந்தார்" என்று வழக்குரைஞர் ஹரிசங்கர் பிபிசி தமிழிடம் கூறினார்.
சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் புன்னைநல்லூரில் அவரது இறுதிச் சடங்குகள் நடக்கும்.
சரவணபவன் ஹோட்டல் குழுமத்துக்கு உலகெங்கிலும் 80-க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளது. நியூ யார்க், லண்டன், சிட்னி போன்ற பெரு நகரங்களிலும் இந்த ஹோட்டலுக்கு கிளைகள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த குழுமத்தில் பணிபுரிகின்றனர்.
ஜோதிடர் ஒருவரின் ஆலோசனை பேரில் தனது பணியாளர்களில் ஒருவரின் மனைவியை திருமணம் செய்துகொள்ள அவர் விரும்பியதாக கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2001-இல் இப்பெண்ணின் கணவர் காணாமல்போன நிலையில், அதுகுறித்து அப்பெண் போலீஸில் புகார் செய்தார். பின்னர் காட்டுப்பகுதி ஒன்றில் அந்த பெண்ணின் கணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
2003-ஆம் ஆண்டில் அந்த பெண் மற்றும் அவரது குடும்பத்தை அச்சுறுத்தியதாக ராஜகோபால் மீது குற்றம்சாட்டப்பட்டது.
2004-ஆம் ஆண்டில் ராஜகோபாலுக்கு உள்ளூர் நீதிமன்றம் ஒன்று 10 ஆண்டுகள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக 2009-இல் உயர் நீதிமன்றம் அதிகரித்தது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
பிற செய்திகள்:
- மருத்துவ படிப்புக்கான அரசு ஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு மட்டுமே இடம்
- தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019: தமிழகத்தில் கடும் எதிர்ப்பு ஏன்?
- ‘’மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’’ - அப்போலோ 11-வால் நமக்கு கிடைத்த நன்மைகள் என்ன?
- அமெரிக்க போலீஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த கடத்தல் மன்னனுக்கு ஆயுள் சிறை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












