இந்திய பொதுத் தேர்தல் 2019: நாங்கள் மக்களுக்கானவர்கள், மதுரைக்கானவர்கள் - சு. வெங்கடேசன்

சு. வெங்கடேசன்

பட மூலாதாரம், FACEBOOK / SU VENKATESAN

மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு. வெங்கடசன் ஓர் அரசியல்வாதியாக அறியப்பட்டதைவிட, ஓர் எழுத்தாளராகவே அதிகம் அடையாளம் காணப்பட்டவர். காவல் கோட்டம் நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்ற வெங்கடேசனின் வேள்பாரி, வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், உள்ளாட்சித் தேர்தல் முதல் சட்டமன்றத் தேர்தல் வரை பல தேர்தல்களில் அவர் போட்டியிட்டவர் என்பது பலரும் அறியாத தகவல்.

அனல் பறக்கும் வெயிலில் நடந்துகொண்டிருந்த பரபரப்பான பிரசாரத்திற்கு நடுவில், கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் அமர்ந்தபடி பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார் சு. வெங்கடேசன். பேட்டியிலிருந்து:

கேள்வி:மதுரைத் தொகுதியின் முக்கியமான பிரச்சனைகளாக எதனைப் பார்க்கிறீர்கள்?

தில்:மதுரைத் தொகுதி அல்லது மதுரை மாவட்டமே, வேறு மாவட்டங்களோடு ஒப்பிடும்போது தொழில், கல்வி போன்ற பல்வேறு அம்சங்களில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. சிறிய நகரங்களோடு ஒப்பிட்டால்கூட இதுதான் நிலை. இதைத்தான் இந்த நகரத்தின் முக்கியமான பிரச்சனையாக நினைக்கிறேன்.

இரண்டாவது முக்கியமான பிரச்சனை, குடிநீர் பிரச்சனை. இத்தனை லட்சம் பேர் வசிக்கும் மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறப் பகுதியில் வசிக்கிறார்கள். இந்த நகரத்திற்காக மூன்றாவது குடிநீர்த் திட்டம் துவக்கிவைக்கப்படுமென கடந்த ஆண்டே முதலமைச்சர் அறிவித்துவிட்டுச் சென்றார்.

1200 கோடி ரூபாய் திட்டம் அது. ஆனால், சொல்லிவிட்டுப் போனதோடு சரி, ஒன்றரை ஆண்டுகளில் அதற்கென எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. அதனால் கடும் குடிநீர் தட்டுப்பாட்டில் மதுரை சிக்கித் தவிக்கிறது.

அதேபோல இங்கே உள் கட்டமைப்பு வசதியும் மிக மோசமாக இருக்கிறது. ஒரு தூரத்துப் பார்வையோடு இந்த நகரின் வளர்ச்சிக்கு, விரிவாக்கத்திற்கு பெருகி வரும் மக்கள் தொகையின் தேவையை பூர்த்திசெய்வதற்கான திட்டம் ஏதுமே இல்லை. இவையெல்லாம் சேர்ந்து மதுரையில் ஒரு மிகப் பெரிய வாழ்வியல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

சு. வெங்கடேசன்

கே. உங்களுடைய பிரதானமான அடையாளமாக எழுத்தே இருக்கிறது. உங்களுடைய அரசியல் பயணம் எப்படித் துவங்கியது?

ப. நான் பள்ளிக்கூட காலத்திலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் ஈடுபாட்டோடு இருந்தேன். 12ஆம் வகுப்பு விடுமுறையில் என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகிவிட்டது. கல்லூரிக் காலத்தில் நான் மார்க்சியத் தத்துவம், மார்க்சிய இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டேன். கல்லூரியை முடித்த பிறகு மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்துகொண்டேன்.

இலக்கியம், அரசியல் ஆகிய இரண்டுமே நாணயத்தின் இரு பக்கங்களாகத்தான் எனக்கு இருந்திருக்கிறது. இலக்கியம் சார்ந்த அரசியல், அரசியலை உள்வாங்கிக் கொண்ட இலக்கியமும்தான் என்னுடைய பயணமாக இருந்திருக்கிறது.

கே. தேர்தல் அரசியலில் எவ்வளவு காலமாக நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்..

ப. இது நான் போட்டியிடும் நான்காவது தேர்தல். 1996ஆம் வருடமும் 2001ஆம் வருடத்திலும் உள்ளாட்சித் தேர்தல்களில், மாவட்ட ஊராட்சி உறுப்பினராகப் போட்டியிட்டேன். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்டேன்.

இது நான்காவது தேர்தல். உள்ளாட்சித் தேர்தலில் ஈடுபட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சனையை பேசுவதற்கும் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய பரப்பிற்கான திட்டங்களைப் பேசுவதற்கும் பெரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

சு. வெங்கடேசன்

பட மூலாதாரம், FACEBOOK / SU VENKATESAN

கே. மதுரை நகருக்கு என்ன வாக்குறுதிகளை நீங்கள் அளிக்கிறீர்கள்..

ப. மதுரை நகரை ஒரு வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசை அறிவிக்கச்செய்ய முயற்சி செய்வேன். அதற்கான முழு தகுதியும் கொண்ட நகரம் இது. கடந்த முறை வாரணாசி நகரில் நரேந்திர மோதி போட்டியிட்டார். இந்த ஐந்தாண்டு காலத்தில் அந்த நகரத்திற்கென ஏறக்குறைய நாலாயிரம் கோடி ரூபாய்க்கு மேல். அதே போன்ற பாரம்பரியம் கொண்ட மதுரை நகரில் எவ்வளவோ விஷயங்களை நாம் செய்ய முடியும். குறிப்பாக, வரலாறு, தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நான் முன்வைக்கிறேன். அதற்கான வாய்ப்புள்ள ஒரே தமிழக நகரம் மதுரைதான்.

ஆகவே, வரலாற்றுப் பாரம்பரியமுள்ள நகரமாக மதுரையை அறிவித்து அதன் மூலம் சுற்றுலாவையும் அது சார்ந்த வணிகத்தையும் உயர்த்த முடியும். உலகத்தின் பார்வையை இப்பக்கம் திருப்ப முடியும். இதனால் தொழில்கள் வளரும். வாழ்வியல் பொருளாதாரமே உயரும். இதை அழகாகச் செய்ய முடியும்.

வட இந்தியர்களைப் பொறுத்தவரை வாழ்வில் ஒரு முறையாவது ராமேஸ்வரத்திற்கு வர வேண்டுமென்பது மிகப் பெரிய நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் பெரும் எண்ணிக்கையில் இந்துக்கள் ராமேஸ்வரத்தை நோக்கி வந்துகொண்டேயிருக்கிறார்கள்.

எல்லோருமே மதுரை வழியாகத்தான் இந்த நகரங்களுக்குச் செல்ல முடியும். இப்படியாக ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த முடியும். ஆகவே இம்மாதிரியான விஷயங்களுக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.

சு. வெங்கடேசன்

பட மூலாதாரம், FACEBOOK / SU VENKATESAN

கே. மதுரை தொடர்பாக இவ்வளவு பேசும் நீங்கள், இந்நகரின் வளர்ச்சிக்கு எழுத்தாளராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக என்ன செய்திருக்கிறீர்கள்?

ப. எவ்வளவோ இருக்கிறது. இந்த நகரத்தின் தொழில்வளர்ச்சிக்கு மருத்துவ வளர்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எவ்வளவோ போராடியிருக்கிறோம். இந்த நகரத்திற்கு பிரச்சனை வரும்போது அதைச் சார்ந்து எழுதியிருக்கிறேன். கீழடி ஆய்வு சிக்கலுக்குள்ளானபோது, அதனை பொதுச் சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்ததில் நான் பிரதானமாக இயங்கியிருக்கிறேன். அந்த விவகாரம் மதுரை சார்ந்து ஒரு பெரிய கவனிப்பை உருவாக்கியிருக்கிறது. மொத்த தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றைப் பற்றிய ஒரு பார்வையை உருவாக்கியிருக்கிறது.

மூன்று - நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக மாமதுரை போற்றுவோம் என்ற மூன்று நாள் கலாசார நிகழ்வை நடத்தினோம். அதில் மாமதுரை போற்றுவோம் - வரலாறு போற்றுவோம் - வைகை போற்றுவோம் என மூன்று தலைப்புகளில் கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அதில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் மூலம் மதுரை சார்ந்த ஒரு தன் உணர்வை மக்களுக்கு உருவாக்கினோம்.

திரைப்படங்களில் மதுரை குறித்து ஒரு தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அது அல்ல மதுரை என்று காட்டினோம். அரசியலில் எளிமையைக் கற்றுக் கொடுத்த நகரம் இது. இந்த மண்தான் மேலாடை தேவையில்லை என்ற மனநிலையை காந்திக்கு உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் என் தோழர்கள் நன்மாறன், பி. மோகன் போன்றவர்கள் விளங்கினார்கள். அதைப் பற்றி நான் தொடர்ந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்.

கே. நீங்கள் இந்துக்களுக்கு எதிரானவர் என எதிர்க்கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகிறது... இது தொடர்பாக நீங்கள் சொன்னதாக பல கருத்துகளும் வெளியாகிவருகின்றன...

ப. எங்களைப் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். மத்தியில் ஐந்து ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் இருக்கிறது. மாநிலத்தில் 8 வருடமாக அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. மாநகராட்சியும் அவர்களிடம்தான் இருந்தது. இருந்தபோதும் நாங்கள் இதையெல்லாம் செய்தோம் என்று சொல்லி வாக்குக் கேட்க அவர்களிடம் ஒரு சாதனைகூட இல்லை. எனவே அவர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் என்னைப் பற்றிய வதந்திகளைப் பரப்புவது மட்டும்தான். அதையே அவர்கள் முழுநேர வேலையாகச் செய்துவருகிறார்கள். காந்தியைக் கொன்றதே இஸ்லாமியர்தான் என்ற வதந்தியைப் பரப்பியவர்கள் அவர்கள். இப்போது நான் இந்துக்களுக்கு எதிரி என்ற வதந்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

2004ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஆடு, கோழி போன்றவற்றை கோவில்களில் வெட்டுவதற்கு தடைச் சட்டம் கொண்டுவந்தபோது அதனை எதிர்த்து இயக்கம் நடத்தி, புத்தகம் எழுதி, தென் மாவட்டங்களின் கோவில் பூசாரிகளைத் திரட்டி மாநாடு நடத்தியது நானும் நான் சார்ந்திருக்கும் இயக்கமும்தான். அதற்காக நான் எழுதிய புத்தகம்தான் 'கறுப்பு கேட்கிறான் - கடா எங்கே?' . மதுரை சார்ந்து, அதன் ஆன்மீகம் சார்ந்து அவ்வளவு எழுதியிருக்கிறேன் நான்.

நான் சொல்லாததை சொன்னதாக, நான் பேசாததை பேசியதாக தொடர்ந்து வதந்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கானவர்கள், மதுரைக்கானவர்கள், மத நல்லிணக்கத்திற்கானவர்கள் என்பது மக்களுக்குத் தெரியும். வதந்தியைப் பரப்பித்தான் வாக்குக் கேட்க முடியுமென்ற பலவீனமான இடத்திலிருந்து இந்த வேலையைச் செய்கிறார்கள். மக்கள் அதனை நிராகரிப்பார்கள்.

கே. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிடுகிறார். அங்கே பிரதான எதிர்க்கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான். இங்கே அதே கட்சியோடு கூட்டணியில் இருக்கிறீர்கள். இது நெருடலாக இல்லையா?

ப. கேரளாவில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரசும் மார்க்சிஸ்ட் கட்சியும் வெவ்வேறு அணிகளில்தான் இருக்கின்றன. கேரளா அருகில் இருப்பதால் அது பிரதானமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான அணியில் நாங்கள் இருக்கிறோம். அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளோடு இணைந்து இந்தத் தேர்தலை சந்திக்கிறோம்.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை மூன்று பிரதான கோட்பாடுகளை வைத்திருக்கிறோம். முதலாவதாக, மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவது. இரண்டாவதாக, மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்குவது, மூன்றாவதாக, இடதுசாரிகளின் பலத்தை அதிகரிப்பது. இதுதான் எங்கள் நிலைப்பாடு. இதை அமல்படுத்துவதற்கு ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கான வாய்ப்புகளுடனான தேர்தல் உத்தியை வகுத்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் எங்கள் உத்தி இது. இதில் பெரிய முரண் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :