இந்திய பொதுத் தேர்தல் 2019: 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவு

இந்திய பொதுத் தேர்தல் 2019

ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி காலை ஏழு மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.

ஓரிரு வன்முறை சம்பவங்களை தவிர பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் மாலை ஆறு மணிநேரப்படி 74 சதவீத வாக்குப்பதிவும் தெலுங்கானாவில் 60.5 சதவீத வாக்குப்பதிவு நடந்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் முழுமையான வாக்குப்பதிவு விவரம் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலும் மக்களவை தேர்தலும் ஒரு சேர நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மூன்று மணி வரை வெவ்வேறு மாநிலங்களில் நிலவிய வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

இதன்படி, மேற்குவங்கத்தில் 69.94 %, உத்தரப்பிரதேசத்தில் 50.86 %, பிகாரில் 42 %, தெலங்கானாவில் 48.9 %, மேகாலயாவில் 55 %, நாகாலாந்தில் 68 %, மிசோரமில் 55.19 % மற்றும் ஒடிஸாவில் 57 % வாக்குகள் பதிவாகி உள்ளன.

18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கியது முதல் ஒரு மணி வரை மேற்கு வங்கத்தில் 38.08%, உத்தரகாண்டில் 41.27%, நாகாலாந்தில் 57%, சத்திஸ்கரில் 10.2% மற்றும் மணிப்பூரில் 53.44% வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் கூறுகிறது.

தெலங்கானாவில் 22.84%, அஸ்ஸாமில் 10.2% மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் 40.95% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இன்று நடக்கும் வாக்குப்பதிவில் நாடெங்கும் உள்ள 7764 மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

மேகாலயா

பட மூலாதாரம், Election Commission of India

படக்குறிப்பு, மேகாலயாவில் உள்ள மேற்கு ஊரக காசி ஹில்ஸ் எனும் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச் சாவடிக்கு வந்த முதல் ஐந்து வாக்காளர்களுக்கு பதக்கங்களைக் கொடுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் கௌரவித்தது.

இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

சிக்கிம்

பட மூலாதாரம், Election Commission of India

படக்குறிப்பு, சிக்கிம் மாநிலத்தில் 13,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நதாங் மசோங் எனும் சட்டமன்றத் தொகுதி

ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்று எங்கெல்லாம் மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது?

இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.

நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் - முதல்கட்ட வாக்குப்பதிவு

பட மூலாதாரம், Getty Images

ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை இன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் பெறுகிறது.

ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகியவை போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 45,920 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தெலங்கானாவின் 17 தொகுதிகளில் 443 வேட்பாளர்கள் களத்தில் உள்ளார்கள். தெலங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியன இங்கு பிரதான கட்சிகளாக உள்ளன. இங்கு 34,603 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு

பட மூலாதாரம், AFP

பிஹாரில் 4 மக்களவைத் தொகுதிகளுக்காக 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி, காங்கிரஸ் ராஸ்டிரிய ஜனதாதளம் கூட்டணியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இன்றைய வாக்குப்பதிவுக்காக 7,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்காரில் நடைபெறும் ஒரு மக்களவைத் தொகுதிக்காக 7 வேட்பாளர்கள் ோட்டியிடுகின்றனர், பாஜக, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 1,878 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் 2 மக்களவைத் தொகுதிகளுக்காக 33 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் ஜனநாயகக் கட்சி , காங்கிரஸ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாடு கூட்டணி மற்றும் ஜம்மு - காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஆகியன இங்கு போட்டியிடும் முக்கியக் கட்சிகளாகும். ஏப்ரல் 11ம் இங்கு 3,489 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாராஸ்டிராவில் 7 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில் 122 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக மற்றும் சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ், பிற சில முக்கிய கட்சிகள் இங்கு போட்டியிடுகின்றன. முதல் கட்ட தேர்தலுக்காக 14,731 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேகலாயாவில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்காக ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மணிப்பூர் மாநிலத்தின் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் எட்டு வேட்பாளர்களும், மிசோராமில் ஒரு தொகுதிக்கு நடக்கும் தேர்தலில் ஆறு வேட்பாளர்களும் இன்று களத்தில் உள்ளனர்.

நாகலந்தின் ஒரு தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒடிசா மாநிலத்தில் இன்று நான்கு தொகுதிளில் வாக்குப்பதிவு நடக்கிறது. பாஜக, காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நடக்கும் இங்கு 7,233 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Election

பட மூலாதாரம், Election Commission of India

படக்குறிப்பு, மேகாலயா மாநிலத்தில் தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்களை அடர்ந்த வனங்கள் வழியாகக் கொண்டு செல்லும் அதிகாரிகள்.

உத்தரப்பிரதேசத்தில் இன்று தேர்தல் நடக்கும் எட்டுத் தொகுதிகளில் 96 வேட்பாளர்கள் மோதுகின்றன.பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகிய இங்கு முக்கியக் கட்சிகள். இங்கு 16,633 வாக்குப்பதிவு மையங்கள் இன்றைய தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இங்கு 52 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இங்கு 11,235 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலிச் சந்திக்கும் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி இங்கு பிரதானமாக உள்ளன. இங்கு 3,844 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று வாக்குப்பதிவு நடக்கும் அந்தமான் நிகோபார் தீவின் ஒரே மக்களவைத் தொகுதியில் 15 வேட்பாளர்களும்,லட்சத்தீவில் ஆறு வேட்பாளர்களும் களத்தில் உள்ளார்கள்.

இந்திய பொதுத் தேர்தல் 2019

பட மூலாதாரம், DIPTENDU DUTTA

படக்குறிப்பு, மேற்கு வங்க மாநிலம் கூச் பெகாரில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.

பல கட்ட வாக்குப்பதிவு

ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கேரளா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், சிக்கிம், தெலுங்கானா, தமிழ்நாடு, உத்தராகண்ட், ஆகிய மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா ஹவேலி, டாமன் டையூ ஆகிய ஒன்றியப் பிரதேசங்களிலும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெறும்.

கர்நாடகா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா ஆகிய நான்கு மாநிலங்களிலும் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அஸ்ஸாம் மற்றும் சத்தீஸ்கரில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மேலும், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

ஐந்து கட்டங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும், ஏழு கட்டங்களாக பிகார், உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் மக்களவை தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடைபெறாது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெறும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :