தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த யானைக் கூட்டம் மீட்பு

பட மூலாதாரம், YE AUNG THU
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்) - தண்ணீர் தொட்டியில் சிக்கித் தவித்த யானைகள்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள பலங்கலா கிராமத்தில் தனியார் நிலத்தில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐந்து காட்டு யானைகளை வனத்துறையினர் மீட்டதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொட்டியில் இருந்து வெளியே வர, அந்த ஐந்து யானைகளும் பல மணி நேரம் போராடின. அப்பகுதியில் இதுபோன்று நடப்பது மூன்றாவது முறையாகும்.
யானைகள் சிக்கிக் கொண்ட செய்தியை அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்தனர். அந்த தொட்டியில் ஐந்து அடி ஆழத்திற்கு மட்டுமே நீர் இருந்தது என்றாலும், அதிலிருந்து வெளியே வர முடியாமல் யானைகள் பதற்றமடைந்தன.
பின்னர் தரையை சமப்படுத்தி யானைகளை மீட்டதாக வனத்துறையின் துணை பாதுகாவலர் மரிய கிறிஸ்ட ராஜா கூறினார். இந்த காலத்தில் தண்ணீர் மற்றும் உணவுக்காக காட்டைவிட்டு யானைகள் வெளியே வருவது அதிகம் நடைபெறும் என்று மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஊடகங்களை விமர்சித்த உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
ரஃபேல் வழக்கில் மறு சீராய்வு மனுவை ஊடகங்களில் வெளியான ஆவணங்கள் அடைப்படையில் விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் ஆட்சேபனையை நிராகரித்து தீர்ப்பெழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசஃப் சில ஊடகங்களிடையே ஒரு சார்பாக நடந்துகொள்ளும் வருத்தத்திற்குரிய போக்கு நிலவுவதாக தமது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எஸ்.கே.கவுல் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், கே.எம்.ஜோசஃப் ஒரு தீர்ப்பையும் எழுதினர். இரண்டு தீர்ப்புகளுமே மத்திய அரசின் ஆட்சபனையை நிராகரித்தன.

பட மூலாதாரம், Getty Images
காட்சி ஊடகங்கள் எல்லையற்ற வகையில் மக்களைச் சென்று சேர்ந்திருப்பதாகவும், அதன் தாக்கத்திலிருந்து மக்கள்தொகையில் எந்தப் பிரிவினரும் தப்ப இயலாத சூழல் நிலவுவதாவும் தம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதி கே.எம்.ஜோசஃப், அவற்றின் செய்திகள் உண்மையைத் தவிர்த்த வேறு எவற்றாலும் களங்கப்படக் கூடாது என்று கூறியுள்ளார்.
ஒரு சார்புடன் செய்திகளை வெளியிடுவது உண்மையான செய்திகளை அறியும் மக்களின் உரிமை மீதான மோசமான தாக்குதல் என்று அந்தத் தீர்ப்பில் கூறியுள்ளார்.

தினமணி: வருமான வரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கையா? - அருண் ஜேட்லி விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தங்களுக்கு கிடைக்கும் தகவல்கள், ஆதாரங்கள் அடிப்படையிலேயே வருமான வரி சோதனை நடத்தப்படுவதாகவும், பழி வாங்குவதற்காக திட்டமிட்டே சோதனை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத்தின் ஆதரவாளர்கள், கர்நாடக அமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகங்கள், திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இல்லங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இதில், சில இடங்களில் ஏராளமான பணம், நகைகள் மற்றும் பல்வேறு சொத்துகளின் ஆவணங்களை கைப்பற்றினர். இந்தச் சோதனைகள் அனைத்தும் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன.
இதனிடையே, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனைகள் குறித்து நிதியமைச்சர் அருண் ஜேட்லி தன்னுடைய முகநூல் பதிவில், தற்போது, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் இந்தச் சோதனைகள் வழக்கமான ஒன்று தானே தவிர பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.
ஊழல் புரிந்தவர்களும், தங்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும்தான் இதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சனம் செய்கின்றனர். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக, தவறு இழைத்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாதா? இன்னும் சொல்லப்போனால், வருமான வரித்துறையினர் அவர்களுக்கு கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலும், அவர்கள் மீதான புகாரின் அடிப்படையிலும்தான் சோதனை நடத்துகின்றனர் என்று அதில் பதிவிட்டுள்ளதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்: தெலுங்கானா மாநில முதல்வருக்கு நோட்டீஸ்

பட மூலாதாரம், TELANGANA CMO/FACEBOOK
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பான புகாருக்கு பதில் அளிக்கும்படி, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தலைவர் ராமா ராஜு, தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், 'இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், மக்களிடையே ஜாதி, மத உணர்வுகளை துாண்டிவிட்டு, மோதல் ஏற்படும் வகையில், முதல்வர் பேசினார்' என, கூறியிருந்தார்.
இந்த புகாருக்கு இரு நாட்களுக்கு பதில் அளிக்கும்படி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. 'பதில் அளிக்காவிட்டால், எந்தவித முன் அறிவிப்புமின்றி, நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












