பாகிஸ்தான் விமானப்படை: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், PAF
- எழுதியவர், ஜுகல் புரோகித்
- பதவி, பிபிசி
"பாகிஸ்தான் தனது விமானப்படையை எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக கட்டமைக்க வேண்டும்" என்று 1948ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் ரிஸல்பூரில், ராயல் பாகிஸ்தானி விமானப்படை உறுப்பினர்களை முதல் முறையாக பார்த்த மொஹமத் அலி ஜின்னா அவர்களிடம் தெரிவித்தார்.
'இது ஒரு திறமையான விமானப்படையாக இருக்க வேண்டும், மேலும், பாகிஸ்தான் பாதுகாப்புக்காக ராணுவம் மற்றும் கடற்படையுடன் சேர்ந்து சரியான இடத்தில் பணியாற்ற வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
அவர் பேசிய 71 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது, பாகிஸ்தான் விமானப்படை அசாதாரண சூழலில் கவனத்தை பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாலகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் விமானப்படைகள் களத்தில் ஈடுபடுத்தப்பட்டன. இரு நாடுகளும் இரண்டு தசாப்தங்களுக்கு முன் அணுஆயுத நாடுகளாக ஆகியதில் இருந்து, முதல் முறையாக பலப்பிரயோகத்தில் இறங்கின.
உலகின் நான்காவது பெரிய படை என்று கூறப்படும் இந்திய விமானப்படையில், 31 படைப்பிரிவுகள் இருக்கின்றன. இது அனுமதிக்கப்பட்டதை விட 11 படைப்பிரிவுகள் குறைவு. ஆனால், இந்த எண்ணிக்கை, பாகிஸ்தான் விமானப்படையில் இருப்பதாக கூறப்படும் 20 படைப்பிரிவுகளை விட அதிகமானது.

பட மூலாதாரம், HTTP://INDIANAIRFORCE.NIC.IN
ஆனால், இந்த சிறிய ஒப்பீடு, முழுக்கதையை கூறிவிடாது. இதன் பின்னணியை ஆராய வேண்டும்.
"பிரிட்டன் இங்கிருந்து செல்வதற்கு முன்பாக, அப்போதைய ராயல் பாகிஸ்தான் விமானப்படைக்கு என்று விட்டுச்சென்ற சிறிய அளவிலான ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் விமானங்களை அவர்களிடம் தர இந்தியா மறுத்துவிட்டது. இறுதியில் இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட எதுவும் இயங்கவில்லை. எங்களுக்கு கிடைத்தது சில துருப்பிடித்த மற்றும் தேவையற்ற உபகரணங்கள்" என்று அவர்களது அதிகாரபூர்வமான வரலாறு கூறுகிறது.
1947-48ல் இந்தியாவுடனான மோதலின்போது, காஷ்மீரில், பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு உதவுவதற்காகவே, முதலில் அந்நாட்டு விமானப்படையின் பயணம் ஆரம்பமானது.


1965 மற்றும் 1971 ஆண்டுகளில் நடந்த போர்களின்போது, பாகிஸ்தானிய மற்றும் இந்திய விமானப்படை அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
இன்று பாகிஸ்தான் விமானப்படையிடம் இரண்டு முக்கிய விமானங்கள் இருக்கின்றன. ஒன்று அமெரிக்க தயாரிப்பான F-16 ரக விமானம், மற்றொன்று சமீபத்தில் சீனா-பாகிஸ்தான் இணைந்து தயாரித்த JF-17 Thunder.
F-16 என்பது ஒற்றை இன்ஜின் கொண்ட, நான்காம் தலைமுறை போர் விமானமாகும். இதற்கு முதல்முறையாக 1982ஆம் ஆண்டு, பாகிஸ்தான் விமானப்படையின் வண்ணம் பூசப்பட்டது. இதனுடன் ஒப்பிடும்போது, JF-17 என்பது 'மிகக் குறைந்த எடைக் கொண்ட, அனைத்து பருவநிலையிலும், பகல்/இரவு பயன்படுத்தக்கூடிய போர் விமானம்' ஆகும். இது பாகிஸ்தான் ஏரோனாட்டிகல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவின் கம்ரா மற்றும் செங்டு விமான தொழில் கார்ப்பரேஷன் இணைந்து தயாரித்ததாகும்.

பட மூலாதாரம், PAF
வரும் ஆண்டுகளில் ஒற்றை இன்ஜின் கொண்ட போர் விமானங்களை பிரதானமாக பாகிஸ்தான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறையில் பிரான்ஸின் மிரேஜ் விமானங்களை பயன்படுத்துவது, இந்த விமானங்களால் மாற்றப்படும்.
இந்நிலையில், ஐந்தாம் தலைமுறை போர் விமானம் அடங்கிய JF-17-ஐ மேம்படுத்துவதில் பாகிஸ்தான் விமானப்படை ஈடுபட்டுள்ளது. எனினும், இதைப்பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
பெஷாவர், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று தளங்களை பாகிஸ்தான் விமானப்படை இணைக்கிறது. இதனைத் தவிர, ராவல்பிண்டியில் விமான பாதுகாப்பு தலைமையகமும், இஸ்லாமாபாத்தில் போர் திறன் தலைமையகமும் இருக்கின்றன. இவை இரண்டிலும், விமான பாதுகாப்பின் தானியங்கி ராடார்கள், சிக்கலான பராமரிப்பு அமைப்புகள் மற்றும் விரிவான நிர்வாக அமைப்பு ஆகியவை இருப்பதாக கூறப்படுகிறது.
2011ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்கப் படை, பாகிஸ்தான் உள்பகுதியில் உள்ள அபோட்டாபாத்துக்கு, வெற்றிகரமாக இரட்டை ஹெலிகாப்டர்களை கொண்டு சென்று அல்கய்தா தலைவர் ஒசாமா பின் லாடனை வீழ்த்தியபோது மேலே கூறப்பட்ட கூற்றுகள் பெரும் கேள்விக்குள்ளாயின. அதாவது அப்போது பாகிஸ்தானிய விமானப்படையால் அமெரிக்காவின் ஊடுருவலை கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், PAF
இதற்கு இன்னொரு சுவையான பக்கமும் உண்டு.
"பாகிஸ்தான் விமானப்படையின் கொள்கை முடிவுகளை, விமானப்படை தலைமையின் வழிகாட்டுதலில் தலைமை ராணுவ தளபதியே எடுக்கிறார். இதனால், கொள்கைகள் குறித்து இறுதி முடிவுகள் எடுப்பது ராணுவத் தலைமை தானே தவிர, விமானப்படை தலைமை கிடையாது" என்று கலிஃபோர்னியாவை சேர்ந்த 'ரான்ட்' கார்ப்பரேஷன் தெரிவித்திருந்தது.
"தனக்கு வேண்டியது எல்லாம் இருக்கிறது என்று கூறும் விமானப்படை இந்த உலகிலேயே கிடையாது. எவ்வளவு நிதி அளித்தாலும், விமானப்படைக்கு பற்றாது இல்லையா? ஆனால், பாகிஸ்தான் விமானப்படைக்கு நிதி கிடைக்கவில்லை என்று யார் கூறினாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்கிறார் அந்நாட்டு விமானப்படையின், விமான செயல்பாடுகள் இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற விமான கமாண்டர் கைசர் துஃபைல்.
அந்நாட்டு விமானப்படையின் பரிணாம வளர்ச்சி குறித்து பேசிய அவர், "இதுவரை அங்கு மூன்று கட்ட நிலை இருந்திருக்கிறது என்று நினைக்கிறேன். முதலாவது, பாகிஸ்தான் குடியரசான போது, புது கருவிகள் அல்லாது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கருவிகளையே பயன்படுத்தியது. அதன் பிறகு, பாகிஸ்தான் CENTO மற்றும் SEATO ஆகியவற்றில் இணைந்தது இரண்டாம் நிலை. அப்போதுதான், இந்தியாவுக்கு எதிரான 1965ஆம் ஆண்டு போரின்போது, பாகிஸ்தான் விமானப்படையில் அமெரிக்க சக்தியின் எழுச்சியை F86 சாப்ரே அல்லது F104 ஸ்டார் போன்ற போர் விமானங்கள் மூலம் பார்க்க முடிந்தது. பாகிஸ்தான் விமானப்படையில் உள்ள பல பைலட்டுகளும் அமெரிக்க விமானப்படையினருடன் பயிற்சி எடுத்தனர். அந்த அளவுக்கு அவர்கள் ஒத்துழைப்பு இருந்தது" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
1965 இந்தோ பாகிஸ்தான் சர்ச்சைக்குப் பிறகு, பாகிஸ்தான் மீது பல தடைகள் போடப்பட்ட போது மூன்றாம் கட்டம் தொடங்கியது. "இந்த கட்டத்தில்தான் பல மாற்றங்களை எங்கள் நாடு பார்த்தது. மேலும், இன்றுவரை அந்த தேடல் தொடர்ந்து வருகிறது".
பாகிஸ்தானின் கிழக்கு எல்லையில் உள்ள இந்திய விமானப்படையினர் சிலர், பாகிஸ்தானிய விமானப்படையினால் வளர்ச்சி அடைய முடியவில்லை என்று நினைக்கின்றனர்.
இந்திய விமானப்படையின் துணைத் தலைவராக பணியாற்றிய ஏர் மார்ஷல் எஸ்பி டியோ இதுகுறித்து பேசுகையில், "பாகிஸ்தான் விமானப்படை நமக்கு இணையாக இருப்பதாக காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. அவர்களுக்கு நிதி நெருக்கடி இருக்கிறது என்பதே என் புரிதல். அவர்கள் பாதுகாக்கும் பகுதியுடன் ஒப்பிடும்போது, அவர்களிடத்தில் அதிகளவிலான வான்வெளி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் இருந்தாலும், அவர்களின் செயல்திறன் பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர்களின் செயல்பாடு பெரிதும் சீனாவை நம்பியே திரும்புகிறது" என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் விமானப்படையை, இந்திய விமானப்படை குறைவாக நினைக்கிறதா?
இல்லை என்கிறார் ஓய்வு பெற்ற ஏர் வைஸ் மார்ஷல், ராணுவ வரலாற்றாசிரியர் மற்றும் போர் ரக விமானியான அர்ஜூன் சுப்பிரமணியம். பாலக்கோட் தாக்குதலை மட்டுமே வைத்து பாகிஸ்தான் விமானப்படையை தீர்மானிக்கக் கூடாது என்று அவர் எச்சரிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












