அபிநந்தனை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருவது எப்படி?

பட மூலாதாரம், TWITTER.COM/OFFICIALDGISPR
- எழுதியவர், வினித் கரே
- பதவி, பிபிசி
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் தங்கள் வசம் இருப்பதாக பாகிஸ்தான் கூறுகிறது. பெயர் வெளியிடாவிட்டாலும், இந்திய விமானி ஒருவரைக் காணவில்லை என்று இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில், இந்திய விமானி ஒருவர் பாகிஸ்தான் எல்லைக்குள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த காணொளியில், இந்திய விமானப்படையின் சீருடை அணிந்த ஒருவரின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர் தன்னை விங் கமாண்டர் என்றும், தனது பெயர் அபிநந்தன் என்றும் சொல்கிறார்.
அவரின் சீருடையில் 'அபி' என்று பெயர் பொறிக்கப்படுள்ளது, அவர் தன்னுடைய பணியாளர் அடையாள எண்ணையும் (சர்விஸ் எண்) சொல்கிறார்.
தாம் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் இருக்கிறேனா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
உண்மையில் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் பிடியில் இருந்தால், அவர் எப்படி இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வரப்படுவார் என்ற கேள்வி இப்போது எழுகிறது. இதற்கு முன்னதாக இதுபோன்ற சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்கிறதா என்ற வினாவும் விஸ்வரூபம் எடுக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கார்கில் போரின்போது, 26 வயதேயான இளம் விமானி, லெஃப்டினெண்ட் கே.நசிகேதா, பாகிஸ்தானின் பிடியில் சிக்கினார். பிறகு அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கபப்ட்டார்.
கார்கில் போரின்போது, பாகிஸ்தானில் இந்தியத் தூதராக இருந்தவர் ஜி.பார்த்தசாரதி. அவர் 1963-1968 காலகட்டத்தில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நசிகேதா எப்படி இந்தியா திரும்பினார் என்பதை பார்த்தசாரதி பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
கார்கில் போரின்போது, லெஃப்டினெண்ட் நசிகேதா, மிக் விமானத்தின் விமானியாக பணிபுரிந்தார். கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை கடக்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. போரின்போது, அவர் மிக் விமானம் மூலம் தாக்குதல் நடத்தினார். ஆனால், தாழப்பறந்தபோது, மிசைல் பாதையில் இருந்து விலகிய அவரை பாகிஸ்தான் கைது செய்தது.

பட மூலாதாரம், Getty Images
சில தினங்களுக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இந்திய விமானி நசிகேதாவை விடுவிக்குமாறு உத்தரவிட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து தனக்கு தகவல் சொல்லப்பட்டதாக கூறுகிறார் பார்த்தசாரதி. இது அவர்கள் தரப்பிலிருந்து இணக்கமான சூழலுக்கு கிடைத்த சமிக்ஞை.
நசிகேதாவை விடுவிக்கிறோம் என்று அவர்கள் சொன்னதற்கு நான் ஒப்புக்கொண்டேன். அவரை சந்திக்கலாமா என்று கேட்டதற்கு, ஜின்னா அரங்கிற்கு வாருங்கள் என்று பதில் கிடைத்தது.
ஜின்னா அரங்கில் செய்தியாளர் கூட்டம் நடைபெற இருப்பதாக எனக்கு தெரிய வந்தது. எனவே, நசிகேதா விடுதலை செய்யப்படும்போது அங்கு ஊடகங்கள் இருக்குமா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தரப்பில் இருந்து ஆம் என்று மறுமொழி கிடைத்தது.


அதை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று நான் உறுதியாக கூறிவிட்டேன். போர்க்கைதியாக இருக்கும் ஒருவரை விடுவிக்கும்போது, ஊடகங்கள் இருப்பதை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டேன்.
சர்வதேச ஊடகங்களின் முன் அவரை ஓர் உதாரணமாக முன் நிறுத்தி, பிறகு விடுதலை செய்வதை ஒப்புக்கொள்ளமாட்டேன் என்று தெளிவுபடுத்தினேன். இந்த தகவலை டெல்லிக்கும் தெரியப்படுத்தினேன். நான் செய்தது சரியான செயல் என்று அங்கிருந்தும் பதில் வந்தது.
மத்திய அரசு மட்டுமல்ல, விமானப்படைத் தளபதியும் என்னுடைய முடிவு சரியானது என்று கூறிவிட்டார்.
பிறகு பாகிஸ்தான் தரப்பில் இருந்து மீண்டும் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நசிகேதாவை எவ்வாறு விடுவிக்க என்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார்கள். உங்கள் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது, நசிகேதாவை தூதரகத்தில் கொண்டு வந்து விட்டால் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டேன். பிறகு அவர் தூதரகத்திற்கு அழைத்து வரப்பட்டு என்னிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அன்று இரவு அவரை விமானப்படை கமாண்டர் ஜஸ்வாலின் வீட்டில் தங்க வைத்தோம். அடுத்த நாள் அவரை விமானத்தில் அனுப்பாமல் சாலை மார்க்கமாக வாகனத்தில் அனுப்பி வைத்தேன்.
தூதரகப் பணிகளில் அமர்த்தப்பட்டிருக்கும் விமானப்படை மற்றும் கடற்படையை சேர்ந்த தலா ஒரு அதிகாரியுடன் நசிகேதாவை அனுப்பினேன். அட்டாரி-வாஹா எல்லைப் பகுதியில் இந்திய அதிகாரிகளிடம் நசிகேதாவை ஒப்படைக்கும் பணியை ஒப்படைத்தேன்.
பாகிஸ்தானின் பிடியிலிருந்து ஓரிரு வாரங்கள் இருந்த நசிகேதா விடுவிக்கப்பட்டார். 1965ஆம் ஆண்டு போரின்போது நான் சியால்கோட்டில் பணிபுரிந்தேன். பாகிஸ்தான் பிடியிலிருக்கும் படைவீரர் ஒருவர் மோசமாக நடத்தப்பட்டால், அது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாகும்.
பாகிஸ்தானின் பிடியில் இருக்கும் இந்திய விமானியின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. அவருடைய கைகள் கட்டப்பட்டு, வீடியோ எடுக்கப்படுவது சட்ட விரோதமான செயல்.
நசிகேதா, பாகிஸ்தான் வசம் இருந்தபோது, அவர் தவறான முறையில் நடத்தப்படவில்லை.

பட மூலாதாரம், Information Ministry @twitter
அபிநந்தனை விடுவிக்க இந்தியாவிடம் உள்ள வாய்ப்புகள் யாவை?
நசிகேதாவை விடுவிக்கும்போது பின்பற்றப்பட்ட விதிமுறைகளே தற்போதும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதை பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை.
அந்த நாடு சீற்றத்தில்தான் இருக்கும். போரில் நமது நாட்டு விமானி, அவர்களின் வசம் இருப்பது இது முதல் முறையல்ல. இதுவொரு உதாரணம் தான்.
எது முறையோ அதை அரசு செய்யட்டும். ஆனால் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது பற்றிய விமர்சனங்கள் எழுவது இயல்பானதே. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா இல்லையா என்பது அரசின் முடிவு.
போர் கைதியாக பிடிக்கப்படுபவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படவேண்டும் என்கிறது ஜெனீவா உடன்படிக்கை. அதை பாகிஸ்தான் கடைபிடித்து, அபிநந்தனிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும்.
தொடர்புடைய செய்திகள்:
- பாகிஸ்தானில் வைரலாகப் பரவுகிறது வீழ்த்தப்பட்ட இந்திய விமானத்தின் போலி புகைப்படங்கள்
- ‘போர் வேண்டாம்’: இணையத்தில் டிரெண்டாகும் #SayNoToWar ஹாஷ்டாக்
- LIVE: இந்திய விமானப்படை ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது தாக்குதல் நடத்தியது எப்படி?
- இந்திய தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர் சொல்வதென்ன? - BBC EXCLUSIVE
- இந்தியா பதிலடி தாக்குதல் நடத்திய பாலகோட் எங்கிருக்கிறது?
- இந்திய விமானப் படை தாக்குதல் குறித்து என்ன சொல்கின்றன பாகிஸ்தான் ஊடகங்கள்?
- இந்தியா விமான படை தாக்குதல்: கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீரில் நடப்பது என்ன?
- பாலகோட் தாக்குதல்: வரவேற்கிறது புல்வாமாவில் இறந்த சுப்ரமணியன் குடும்பம்
- வித்தியாசமான பதிலடி வரப்போகிறது: இந்தியாவை எச்சரிக்கும் பாகிஸ்தான்
- பாலகோட் விமான தாக்குதல்: பாகிஸ்தானிலிருந்து இந்திய விமானங்கள் எப்படி வெளியேறின?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












