டெல்லி : செல்லப்பிராணி மீது கல்லெறிந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

தினகரன்: செல்லப்பிராணி மீது கல்லெறிந்த நபர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்

வட கிழக்கு டெல்லியின் வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்த தையல் கடை தொழிலாளி ஆபக் அலி, தனது செல்லப்பிராணி மீது கல்லெறிந்தால் கொலை செய்திருக்கிறார் நாயின் உரிமையாளர் மெஹ்தாப்.

ஆபக் அலி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது அவரை பார்த்து மெஹ்தாப்பின் நாய் குரைத்துக் கொண்டே இருந்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுகிழமை அந்நாய் தன்னை பார்த்து குரைத்தபோது கடித்துவிடுமோ என்ற பயத்தில் அதன் மீது கற்களை வீசி விரட்டினார்.

இதையடுத்து அலிக்கும் மெஹ்தாப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரத்தில் மெஹ்தாப் தன்னிடமிருந்த துப்பாக்கி மூலம் அலியை சுட்டுக் கொன்றார். மெஹ்தாபின் மீது ஏற்கனவே கள்ள சாராயம் விற்பனை, மரிஜுவானா விற்பனை தொடர்பான பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி : ரூ700 கோடியில் குஜாரத்தில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது.

63 ஏக்கர் பரப்பில் சுமார் 700 கோடியில் குஜராத்தில் மொட்டேராவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்த சர்தார் பட்டேல் மைதானம் 1982-ல் கட்டப்பட்டு பழமையானதால் புதிய மைதானம் கட்ட குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அதன்படி பழைய மைதானம் முற்றிலும் இடிக்கப்பட்டு 2015-ல் கட்டுமான பணிகள் தொடங்கியது.

தற்போது கட்டப்படும் புதிய மைதானம் 1.1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி உடையதாக இருக்கும். தற்போதைக்கு 1 லட்சம் பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்ட மெல்பர்ன் மைதானம்தான் உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்.

இந்தியாவை பொறுத்தவரை 68,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானம்தான் மிகப்பெரியது.

குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமால் நத்வானி அகமதாபாத்தில் தற்போது கட்டப்படும் கிரிக்கெட் மைதானம் குறித்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி - தமிழகத்தில் புது மாவட்டம் உதயமாகிறது

விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 33வது மாவட்டமாகிறது கள்ளக்குறிச்சி.

தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய மாவட்டம் என்ற சிறப்பை பெற்ற விழுப்புரம் மாவட்டம், 1993-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி தென்ஆற்காடு மாவட்டத்தில் இருந்து புதிதாக உதயமானது. முதலில் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டமாக பெயர் மாறியது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, விழுப்புரம் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 34 லட்சத்து 58 ஆயிரத்து 873 ஆகும். இந்த மாவட்டத்தில் 13 தாலுகாக்கள் உள்ளன.

''விழுப்புரம் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால், நிர்வாக வசதிக்காக அந்த மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய மாவட்டம் தோற்றுவிக்கப்படும். புதிதாக தோற்றுவிக்கப்படும் இந்த மாவட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் விரைவில் தனி அதிகாரியாக நியமிக்கப்படுவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் : அமைதிப் பேச்சுவார்த்தையை நிராகரிக்கிறது இந்தியா - இம்ரான்கான் குற்றச்சாட்டு

அமைதிப் பேச்சுவார்த்தைக்காக தாம் அணுகியபோது இந்தியா பதிலளிக்கவில்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். அணுஆயுதமிக்க இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தால் அது இரு நாடுகளும் தற்கொலை செய்துகொண்டது போலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தனது விருப்பங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

இருநாடுகளும் பனிப் போர் குறித்துக் கூட சிந்திக்கக்கூடாது. அது நிலைமையை மிகவும் மோசமாக்கக்கூடும். அணு ஆயுதமேந்தும் இரு நாடுகளும் போரில் ஈடுபட்டால் அது தற்கொலை முடிவாகும் என்றார்.

இந்தியா பேச்சு வார்த்தைக்கு ஒரு அடி முன்னெடுத்துவைக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இரண்டு அடி எடுத்து வைக்கிறது. பல முறை பாகிஸ்தானின் அமைதி பேச்சுவார்த்தை அழைப்பை இந்தியா நிராகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: