You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 சதவீத இடஒதுக்கீடு: ‘’பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பது மிகப் பெரிய மோசடி’’
- எழுதியவர், மு.நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் பொது பிரிவினரில் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்கிறார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன். "அரசமைப்பு சட்டத்தின் எந்த இடத்திலும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று கூறப்படவில்லை. சமூக ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என்று கூறப்பட்டு இருக்கிறதே தவிர, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை" என்கிறார் அவர்.
கடந்து வந்த பாதை
பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்ற கருத்தியல் கடந்து வந்த பாதையை விவரிக்கும் அவர், முதல் முதலாக மண்டல் கமிஷன் தொடர்பான ஒரு தீர்ப்பில்தான் இது குறிப்பிடப்பட்டது என்கிறார்.
"பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு குறித்த ஒரு கருத்தை தெரிந்து கொள்வதற்காக 1953ஆம் ஆண்டு காகா கலேக்கர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறிவிட்டது. மண்டல் குழுவும் அப்படிதான் பரிந்துரைத்திருக்கிறது." என்று விவரிக்கிறார் சுப. வீரபாண்டியன்.
மேலும், "இந்த பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பது 1992 நவம்பர் மாதம் மண்டல் குழுவின் மீதான ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மட்டுமே இடம் பெற்று இருக்கிறது. அதனை 'தீர்ப்பு அடிப்படையிலான சட்டம்' என்கிறார்கள். ஆனாலும், அது அரசியல் சாசனத்தில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். " என்று தெரிவித்தார்.
அதனால்தான், மத்திய அமைச்சரவை நாடாளுமன்ற இரு அவைகளிலும் முன் மொழிந்து, அரசியல் சட்டத்தை திருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அது அத்தனை எளிதல்ல. அவர்களுக்கு சட்டத்தை திருத்தும் பெரும்பான்மை கிடைக்காது என்கிறார் சுப.வீரபாண்டியன்.
பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள்
"எட்டு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருவாய் உடையவர்கள் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள் என்கிறார்கள். ஆண்டுக்கு எட்டு லட்சம் என்றால், மாதம் அறுபதாயிரத்திற்கு மேல். இவ்வளவு வருவாய் ஈட்டுபவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்பது மிகப் பெரிய மோசடி" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவின் கருத்தும் இவ்வாறாகவே இருக்கிறது. அவர், மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு அரசமைப்புச் சட்டத்தை கேலிகுள்ளாக்கும் செயல் என்கிறார்.
அவர், "இந்திய அரசமைப்பு சட்டத்தை எழுதும் போது இந்தியாவில் இருக்கும் சமூக பிரிவுகளில் பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள், மற்றவர்களோடு இணைந்து சமமான வாழ்க்கையை வாழ முடியாத, ஒதுக்கிவைக்கப்பட்ட சமூகங்கள் சமத்துவத்தை அடைய வேண்டுமென்று சொன்னால், முற்பட்ட சமூகங்களுக்கு சமமான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று சொன்னால், கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின் தங்கிய சமூகங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிற உடனடி உறுதியான நடவடிக்கையாக இட ஒதுக்கீடு கொள்கையை பார்த்தார்கள்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எல்லாவகை கல்வியை கற்பதற்கும், அந்த கல்வியை கற்று ஆசிரியராக இருப்பதற்குமான பணி ஒரு குறிப்பட்ட சமூகத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அதுதான் இடஒதுக்கீடாக இருந்தது. அத்தைகைய இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடிய... சமூகத்தில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கக் கூடிய இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அதாவது அது சமூகத்தில் பின் தங்கியவர்களுக்குதான் இடஒதுக்கீடே தவிர, பொருளாதாரரீதியில் பின் தங்கியவர்களுக்கு கிடையாது." என்று விவரிக்கிறார்.
கேலிக்குள்ளாக்கும் செயல்
மேலும், "பொருளாதார ரீதியாக ஒருவர் பின் தங்கி இருக்கிறார் என்று சொன்னால், அவருக்கு வங்கிக் கடன் மூலமோ, பிற பொருளாதார உதவிகள் செய்வதன் மூலமோ அவரை மேம்படுத்திவிட முடியும். பொருளாதார ரீதியாக ஒருவருக்கு இட ஒதுக்கீடு என்பது முற்றிலுமாக அரசமைப்பு சட்டத்தை கேலிக்குள்ளாக்கும் செயல்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
"அனைவருக்கும் கல்வி அளிக்க விரும்பினால், உண்மையாக முற்படுத்தப்பட்ட சமூகத்தின் மீது அக்கறை இருக்குமானால், அதிக அளவில் கல்லூரிகளை திறக்க வேண்டும், வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கும். அப்படியாகதான் கல்வியை அனைவருக்கும் எடுத்து செல்ல முடியும். அதனை செய்யாமல் இப்படி இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வருவது ஏமாற்று வேலை, ஜோதிராவ் புலேவை, அம்பேத்கரை, பெரியாரை, ஐயங்காளியை அவமதிக்கும் செயல்.கல்வியை தனியார்மயமக்கிவிட்டு, இடஒதுக்கீடு என்பது முற்பட்ட சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கை" என்கிறார் அவர்.
முற்பட்டவர்கள் பணக்காரர்கள் அல்ல
இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு என்கிறார் தமிழ்நாடு பிராமண சங்க தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன்.
"முற்பட்ட சமூகத்தை சேர்ந்த அனைவரும் பணக்காரர்கள் அல்ல, பொருளாதார ரீதியில் செல்வ செழிப்போடு இருப்பவர்கள் அல்ல. பலர் மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த இடஒதுக்கீடு மிகவும் அவசியமான ஒன்று. இதற்காகதான் தாங்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்" என்கிறார்.
உண்மையில் அரசுக்கு அக்கறை இருந்தால் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாள் அன்று இதனை கொண்டு வந்திருக்க வேண்டும். கூட்டத் தொடர் முடியும் தருவாயில் அல்ல.
இது அரசியல் தந்திரம் என்று சில ட்வீட்டுகள் கூறுகின்றன.
சட்டரீதியான வாய்ப்பு
சட்டரீதியாக இதற்கு வாய்ப்பிருக்கிறதா என்று முன்னாள் நீதிபதி சந்துருவிடம் பிபிசி தமிழ் பேசியது.
இது குறித்து சந்துரு கூறுவகையில், "இந்திய அரசமைப்பு சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்கிறது. இந்திய அரசமைபில் மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இதனை செய்ய முடியும். ஆனால், அரசமைப்பு பிரிவு 15-ன் கீழ் இதனை செய்ய முடியாது. ஒரு நலத்திட்டமாக இதனை செய்யலாம்" என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்