ஸ்டெர்லைட் பற்றி தமிழக அரசு சரியான வாதங்களை வைக்கவில்லை: எதிர்ப்பாளர்கள் கருத்து

பட மூலாதாரம், Reuters
தமிழக அரசு சரியான வாதங்களை முன்வைக்காததால்தான் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதித்தது என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை சுற்றுச்சூழலுக்கும், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டியும், அந்த ஆலையை மூட வலியுறுத்தியும் மக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடிவந்தனர்.
இந்நிலையில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஆலை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றின்போது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஆலையை மூட உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த உத்தரவை எதிர்த்து புது டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்.
இதையடுத்து ஆலையினை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்று அமைத்தது பசுமைத் தீர்ப்பாயம். அந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த மாதம் அறிவித்தது.
இதை எதிர்த்து செயற்பாட்டாளர் பாத்திமா சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் முறையீடு செய்கிறார். இதன் அடிப்படையில், தாம் விசாரித்து உத்தரவிடும் வரையில் இப்போதுள்ள நிலையே தொடரவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், உச்ச நீதிமன்றத்தை அணுகியது. இதற்கிடையே, தமிழக அரசும் பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாரிமன், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் ஆனால், இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது என்றும் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இதன் மூலம் ஆலையைத் திறக்க வழி ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், vedanta
இது அந்த ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சரியான வாதங்களை முன் வைக்கவில்லை என போராட்டக்குழுவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தமிழக அரசு இந்த ஆலைக்கு எதிராக கொள்கை முடிவு எடுப்பதுடன் சிறப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டகுழுவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி "இன்று வெளியான உச்சநீதிமன்ற தீர்ப்பு தூத்துக்குடி மக்களுக்கு மிகப்பெரிய வேதனை அளிக்கிறது.
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு மிகவும் பலவீனமானது, வலிமையற்றது என்று போராட்டக்குழு தொடர்ந்து வலியுறுத்திவந்தது. தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றினால் மட்டுமே ஆலையை மூட முடியும் என பலமுறை நாங்கள் தெரிவித்துள்ளோம்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் இது குறித்து சட்டம் இயற்றவில்லை, ஆனால் தமிழக அரசும் அமைச்சர்களும் தங்கள் அரசாணையை உலக நீதிமன்றத்திற்கு சென்றாலும் உடைக்க முடியாது என்று கூறிய நிலையில் உச்ச நீதிமன்றம் ஆலையை திறக்கலாம் என தற்காலிகத் தீர்ப்பு அளித்துள்ளது.
இதனால், தமிழக அரசு மறைமுகமாக ஆலைக்கு உறுதுணையாக இருக்கிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுதும் தமிழக அரசுக்கு ஒரு வாய்ப்பு உண்டு. நாளை வரை சட்டப்பேரவை கூட்டம் நடக்க இருப்பதால் இது குறித்து சிறப்பு சட்டம இயற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்
ஒரு ஆலையை இயக்குவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. சட்டமன்த்தில் சட்டமியற்றிதான் ஆலையை மூட முடியுமே தவிர, சட்டத்தையும், நீதித்துறையையும் நாடுவது பயனற்றது என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன் கூறினார்.
குமரெட்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்வி பிபிசி தமிழிடம் கூறுகையில் "நாங்கள் நடத்திய போராட்டத்தில் குறைந்தது 14 பேர் உயிரை இழந்துள்ளோம். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பல்லாயிரம் பேர் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக அரசுக்கு எப்படி எங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க முடியும்? அரசு மீண்டும் ஆலையை திறக்க மறைமுகமாக ஆதரவு அளிக்குமானால் எங்களது எதிர்ப்பை வருகின்ற உள்ளாட்சி தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை எல்லாவற்றிலும் தெரிவிப்போம். அத்துடன் இந்தத் தீர்ப்பு மக்களை மீண்டும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளும் என்பதில் ஐயமில்லை" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












