தமிழ்நாடு 2018: போராட்டமே வாழ்க்கையானது - காவிரி முதல் கஜ வரை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை மாநிலத்தின் எதிர்கால அரசியலையே மாற்றியமைக்கும் பல சம்பவங்கள் 2018-ம் ஆண்டில் நடந்திருக்கின்றன. ஒரு மாபெரும் தலைவர் மறைந்திருக்கிறார். போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு மிகப் பெரிய ஊழல் விவகாரம் மாநில அரசை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

குட்கா ஊழலும் சி.பி.ஐ. சோதனைகளும்
கடந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து இப்போதுவரை மாநில அரசை உலுக்கிக்கொண்டிருக்கும் விவகாரம் குட்கா ஊழல். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிவுக்குச் சொந்தமான வேதா நிலையம் இல்லத்தில் கடந்த 2017 ஆண்டில் நவம்பர் 17ஆம் தேதியன்று இரவில் சோதனை நடத்தப்பட்டபோது ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அறையில் முன்னாள் டிஜிபி 2016 செப்டம்பர் 2ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாகவும் அத்துடன் வருமான வரித்துறையின் முதன்மை இயக்குனர் 2016ஆகஸ்டில் எழுதிய ரகசியக் கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும் இந்த வருட துவக்கத்தில் வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியது.
அந்தப் பிரமாணப் பத்திரத்தில், "முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தில் சோதனையிட்டபோது, குட்கா விவகாரத்தில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், சில மூத்த காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காவல்துறை தலைவர் அசோக் குமார் முதல்வருக்கு எழுதிய கடிதம் கிடைத்ததாக" கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்க, விவகாரம் மிகப் பெரியதாக உருவெடுத்தது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென ஏப்ரல் 26ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பட மூலாதாரம், Mail Today
இதற்குப் பிறகு, மாநில காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரது இல்லங்கள் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 35 இடங்களில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனைகளை நடத்தியது. சென்னை நகரின் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
எம்டிஎம் குட்காவை உற்பத்தி செய்யும் ஜெயம் இன்டஸ்ட்ரீஸின் உரிமையாளர்கள் ஏ.வி. மாதவராவ், உமா சங்கர் குப்தா, மாநில உணவுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரியான செந்தில் முருகன், மத்திய கலால் வரித் துறையின் கண்காணிப்பாளர் என்.கே. பாண்டியன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மாநில காவல்துறைத் தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் ராஜினாமா செய்யவேண்டும் அல்லது மாநில அரசு அவர்களது பதவியைப் பறிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், மாநில அரசும் சம்பந்தப்பட்டவர்களும் செவிசாய்ப்பதாக இல்லை.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்
கடந்த ஆண்டு பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தை நிலைகுலைய வைத்தன. அதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம்.
தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், அந்தப் பகுதியை மாசுபடுத்துவதாகக் கூறி மார்ச் 4ஆம் தேதியன்று அங்கு நடந்த மிகப் பெரிய பேரணியும் பொதுக்கூட்டமும் இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது. இதற்குப் பிறகு நடந்த தொடர் போராட்டம் மே 22ஆம் தேதியன்று உச்சகட்டத்தை எட்டியது. ஆன்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டபோது, நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டது உலகம் முழுவதிலும் கவனத்தை ஈர்த்தது.

பட மூலாதாரம், ARUN SANKAR
வருட இறுதியில் ஊடகங்களில் வெளியான பிரேதப் பரிசோதனை முடிவுகளின்படி, கொல்லப்பட்டவர்கள் பின்புறமிருந்தும் நெருக்கமான நிலையிலும் சூடப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, தொழிற்சாலையை மூடியது. ஆனால், ஆலை மீண்டும் திறக்கப்பட வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது, தூத்துக்குடியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடும் சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு ஆணையத்தையும் நியமித்தது.
ஸ்டெர்லைட் விவகாரத்தை தமிழக அரசு கையாண்ட விதம், அதற்கு மிகப் பெரிய கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு
சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், 277.3 கி.மீ தூரத்திற்கு 8 வழி சாலை அமைக்கப்படவிருப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து விவசாய அமைப்புகள், விவசாயிகள், எதிர்க்கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கினர். ஆனால், மாநில அரசு கைதுகளின் மூலம் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கியது. இதற்குப் பிறகு, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், உரிமையாளர்களை நிலத்திலிருந்து வெளியேற்றக்கூடாது என தீர்ப்பு வந்ததற்குப் பிறகு இந்த விவகாரம் சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால், விவசாயிகள் மனதிலிருந்து அச்சம் நீங்குவதாக இல்லை.

ஊடகங்கள் மீது ஒடுக்குமுறை
ஊடகங்களை தமிழக ஆட்சியாளர்கள் பல்வேறு விதங்களில் கட்டுப்படுத்த முயல்வது என்பது புதிதல்ல. ஆனால், கடந்த ஆண் டு ஊடகங்கள் மீதான கட்டுப்பாடும் ஒடுக்குமுறையும் பலவிதங்களில் புதிய உச்சங்களைத் தொட்டது. அதற்கு அரசு கேபிள் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. பல தருணங்களில் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகள் அரசு நடத்தும் கேபிள் நெட்வொர்க்கிலிருந்து நீக்கப்பட்டன. அரசு கேபிள்தான் தமிழகத்தில் கட்டத்தட்ட 60 சதவீத கேபிள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகிறது.
உதாரணமாக, ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றபோது உடனடியாக நேரடி ஒளிபரப்பை நிறுத்தும்படி கூறப்பட்டது. நேரலை ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால், அரசு கேபிளில் சேனல்கள் நீக்கப்பட்டுவிடும் என அரசுத் தரப்பிலிருந்து மிரட்டியதாகவும் கூறப்பட்டது. மாநில அமைச்சர் ஜெயக்குமார் இந்த குற்றச்சாட்டை மறுத்தாலும், அன்று மதியத்திற்கு மேல் நேரடி ஒளிபரப்பு ஏதும் தூத்துக்குடியிலிருந்துா்ோஜஜோ்க செய்யப்பட்டவில்லை.

பட மூலாதாரம், ARUN SANKAR
மார்ச் மாதத்தில் தந்தி தொலைக்காட்சி, ஜெயா பிளஸ் தொலைக்காட்சி ஆகியவை அரசு தொலைக்காட்சியிலிருந்து நீக்கப்பட்டன. மே மாதம் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக அரசு கேபிளில் இருந்து தூக்கப்பட்டது. 12 மணி நேரம் சேனல் ஒளிபரப்பாகவில்லை. மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை புதிய தலைமுறை தொலைக்காட்சி 124வது இடத்திலிருந்து 499வது இடத்திற்குத் தள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் ஒரு விவாத நிகழ்ச்சியை நடத்தியதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. ம.தி.மு.க. ஆதரவு தொலைக்காட்சியான மதிமுகம் டிவி அரசுக்கு எதிரான செய்திகளை ஒளிபரப்பியதற்காக 450வது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
இதற்குப் பிறகு, ஆளுனருக்கு எதிரான ஒரு செய்தியை வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், ஆளுனரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி கைதுசெய்யப்பட்டார். அவரை சிறைக்கு அனுப்ப நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடுமையான கைது நடவடிக்கைகள்
கடந்த ஆண்டு நெடுக அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்ந்தது. இது மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரிப்பதற்காக தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த மே மாதம் 26ஆம் தேதியன்று கைதுசெய்யப்பட்டார். அதற்குப் பல நாட்களுக்கு முன்பாக, அவர் நடத்திய போராட்டம் ஒன்றில் சுங்கச்சாவடி தகர்க்கப்பட்ட வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் ஜூன் மாதத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அதற்கு அடுத்த நாளே சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கைதுசெய்யப்பட்டார். எட்டு வழிச் சாலை விவகாரத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாகப் பேசிய சட்டக் கல்லூரி மாணவி வளர்மதி கைதுசெய்யப்பட்டார். சேலம் அடிமலைப் புதூரில் இந்த 8 வழிச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கான அளவீடு நேற்று நடந்தபோது,எதிர்ப்புத் தெரிவித்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதற்கு முன்பாக இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அதேபோல, வெளிநாட்டிலிருந்து பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைதுசெய்ய முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவரை வேறொரு வழக்கில் மீண்டும் சென்னை நகரக் காவல்துறை கைதுசெய்தது. சிறையிலிருக்கும்போதே அவர் மீது பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. சில மாத சிறைவாசத்திற்குப் பிறகு, அவர் பிணையில் வெளிவந்தார்.

அறநிலையத் துறையில் சலசலப்பு

பட மூலாதாரம், Getty Images
கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பிடித்ததில் கோவிலின் ஒருபகுதி கடும் சேதமடைந்தது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் கோவில்களை நிர்வாகம் செய்யும் இந்துசமய அறநிலைய ஆட்சித் துறைக்கு எதிராக பாரதீய ஜனதாக் கட்சி மற்றும் பல இந்து அமைப்புகள் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தன.
இதற்குப் பிறகு, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐஜியாக ரயில்வே காவல்துறையின் ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார். இவர் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளில் அடுத்தடுத்து மேற்கொண்ட கைதுநடவடிக்கைகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற பொன். மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவிநீடிப்பு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய காவல்துறையினர் தாங்கள் பொய் வழக்குப் போடும்படி வலியுறுத்தப்படுவதாக மாநில காவல்துறை தலைவரைச் சந்தித்து புகார் அளித்திருக்கின்றனர்.

முதல்வரின் கரத்தை வலுப்படுத்திய தகுதி நீக்க வழக்குகள்
கடந்த ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பாக வழங்கப்பட்ட இரு தீர்ப்புகள், முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் ஆட்சியை சற்றே வலுவாக்கின. முதலாவதாக, தமிழக சட்டப்பேரவையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யும் வழக்கு. இந்த விவகாரத்தில் ஜூன் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு அனுப்பப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என அறிவித்தார். இந்தத் தீர்ப்பு டிடிவி தினகரன் தரப்பிற்கு பெரும் பாதகமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, மேல்முறையீடு செய்வதா, அல்லது தீர்ப்பை ஏற்று இடைத்தேர்தலில் போட்டியிடுவதா என்பதிலேயே டிடிவி தினகரன் அணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம், AFP Contributor
ஆனால், இந்தத் தீர்ப்பு ஆளும் எடப்பாடி புழனிச்சாமி தரப்புக்கு சாதகமான ஒன்றாக அமைந்தது. நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை கிடைப்பதை இந்தத் தீர்ப்பு உறுதிசெய்தது.
அதேபோல, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியபோது அவருக்கு எதிராக வாக்களித்த ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் ஆளும் தரப்புக்கு சாதகமாகவே அமைந்தது.

அதிகாரம் மிகுந்த ஆளுனர்
தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத அளவுக்கு தன் அதிகார வரம்பின் எல்லையை கடந்த ஆண் டு விஸ்தரித்துக் காட்டினார் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித். ஆளுனர் மாளிகையிலேயே செய்தியாளர் சந்திப்புகளை நடத்தியதுபோக, தானாக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆய்வுக்குச் செல்வது, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிப்பது என அவரது பல செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஆளும் தரப்பு மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்க, எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. பல மாவட்டங்களில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டும் போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தியபோது, தனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்வகையில் நடவடிக்கையெடுக்கப்படுமென ஆளுனர் மாளிகையே அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆளுனருக்கு எதிராக செய்தி வெளியிட்ட நக்கீரன் இதழின் ஆசிரியர் கைதுசெய்ய வைக்கப்பட்டதும் ராஜீவ் கொலைவழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுவிக்க மாநில அரசு முடிவெடுத்த பிறகும் ஆளுனர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதும் மாநில அரசிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதும் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அசருவதாக இல்லை.

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மறைவு
தமிழ்நாட்டின் முதல்வராக ஐந்து முறை பதவிவகித்தவரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார்.

பட மூலாதாரம், Stalin/fb
அவரது மறைவு கட்சியிலும் தமிழக அரசியல் களத்திலும் ஒரு நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச்சென்றிருக்கிறது. ஐம்பது ஆண்டுகளாக, தமிழக அரசியல் களத்தை தன்னைச் சுற்றி சுழலவைத்த மு. கருணாநிதியின் மறைவு அதற்கு பிறகு தமிழக அரசியல் களத்தில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் உணரப்பட்டுவருகிறது.

2018ன் சில முக்கிய சம்பவங்கள்:
1. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, 161வது பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை மாநில அரசு மேற்கொண்டது. ஆனால், ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இதுவரை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
2. தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவிநாசிபாளையம் நான்கு வழிச் சாலை, திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிப் பாதை, மதுரை ரிங் ரோடு நான்கு வழிச் சாலை, வண்டலூர் - வாலாஜாபாத் ஆறு வழிப் பாதை, மற்றும் ராமநாதபுரம், விருதுநகர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களின் நெடுஞ்சாலை பராமரிப்புப் பணி ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் உறவினர்கள் நடத்தும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக தி.மு.க. குற்றம் சாட்டியிருந்தது.

3. ஏப்ரல் 12ஆம் தேதியன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு, காவிரி விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா,ஜ,க தவிர்த்த அனைத்துக் கட்சிகளும் கறுப்புக் கொடி காட்டும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின. இதற்கான ட்விட்டர் ஹாஷ்டாகான #GobackModi உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.
4. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவணன் சுரேஷ் தீக்குளித்து, தற்கொலை செய்துகொண்டார். இதற்கு சீமானின் நாம் தமிழர் கட்சியினர் வெளியிடும் மீம்ஸ்களே காரணம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இதையடுத்து ம.தி.மு.க. - நாம் தமிழர் கட்சி இடையிலான மோதல் வெளிப்படையாக வெடித்தது.
5. டிசம்பர் மாத இறுதியில் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களைத் தாக்கிய கஜ புயல், பல உயிர்களைப் பலிவாங்கியதோடு கோடிக்கணக்கான ரூபாய் சேதத்தையும் ஏற்படுத்தியது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்னமும் தங்கள் வாழ்க்கையை சீரமைக்கப்போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












